அதிமுக தலைமையில் அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி! 200 தொகுதிகளில் வெற்றி உறுதி! ஜனவரி மாத இறுதியில் சூறாவளி சுற்றுப்பயணம்! பொதுக்குழுவில் ஈபிஎஸ் அறிவிப்பு!

0
59
Edappadi Palaniswami announced that he will embark on a statewide tour, visiting all 234 constituencies in Tamil Nadu by the end of January. This tour is aimed at engaging with the public and strengthening the party's presence across the state.

சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது, “நிர்வாகிகள் அனைவரும் அ.தி.மு.க. வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ள வேண்டும். மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பின் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மக்களவைத் தேர்தலில் சரியாக கூட்டணி அமையவில்லை என்று விமர்சனம் எழுந்தது. கூட்டணி என்பது அவ்வபோது வரும் போகும். ஆனால் அ.தி.மு.க., கொள்கை நிலையானது.

உண்மையான உறுப்பினர்களை கொண்ட இயக்கம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 2016ல் கூட்டணி இல்லாமலேயே 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தார். இந்த வரலாறு அதிமுகவுக்கு மட்டும்தான் உண்டு. உறுப்பினர் அட்டை வழங்கும் பணிகள் சிறப்பாக நடைபெற்றன. படிவம் வழங்கி புதிய உறுப்பினர்களை சேர்த்தல், புதுப்பித்தல் பணிகள் செய்ததும், உறுப்பினர் அட்டைகளை நேரடியாக உறுப்பினர்களிடம் வழங்கியதும் அதிமுக தான். உண்மையான உறுப்பினர்களை கொண்ட கட்சி அதிமுக மட்டும்தான். சில கட்சிகள் விளம்பரம் மூலம் இத்தனை உறுப்பினர்கள் என்று காட்டிக்கொள்வார்கள். அ.தி.மு.க., ஆட்சி வர வேண்டும் என நினைக்கிறவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி இருக்கிறோம்.

Also Read : அதிமுக பொதுக்குழு கூட்டம்! சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு கண்டனம்! சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வலியுறுத்தல்!

1,98,369 ஓட்டுக்கள்தான் வித்தியாசம்

2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 369 ஓட்டுக்கள் குறைவாக பெற்ற காரணத்தால் ஆட்சிக்கு வர முடியவில்லை. 1,98,369 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தான் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறார். பெரும்பான்மையான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை. குறைவான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள். திமுக பொய்யை வாரிவிட்டார்கள். 525 பொய் அறிவிப்புகளை விட்டார்கள். பச்சை பொய் சொல்லி, மக்களை ஏமாற்றி கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்.

6.59% வாக்குகள் குறைவாக பெற்ற திமுக

பத்திரிகைகளும், ஊடகங்களும்தான் திமுகவை தாங்கிப் பிடித்தனர். 2019 தேர்தலில் அதிமுக 19.39% வாக்குகளை பெற்றது. பலமான கூட்டணியுடன் பொய் அறிவிப்புகளை வெளியிட்ட திமுக கூட்டணி 33.52% வாக்குகள் வாங்கியது. அதிமுகவுக்கு செல்வாக்கு இல்லை என்று பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. 2021 தேர்தலில் அதிமுக 20.5% வாக்குகள் பெற்ற நிலையில், திமுக கூட்டணியோ 26.9% வாக்குகளைத்தான் பெற்றது. 2019 தேர்தலுடன் ஒப்பிடு்போது 6.59% வாக்குகளை திமுக குறைவாக பெற்றுள்ளது.

அதிமுக வாக்கு சதவிகிதம் அதிகம்

பொய்யான வாக்குறுதிகளைக் கூறி மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. கூட்டணி இல்லாமல் தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்ற இயக்கம் அ.தி.மு.க., 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 18.80% ஓட்டு வாங்கியது. தற்போது 18.28% ஓட்டுக்களை பெற்றுள்ளது. அரை சதம் குறைவாக ஓட்டுகளை வாங்கியுள்ளது. 2014ல் 8 தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.கவின் ஓட்டு சதவீதம் 5.56%, ஆனால் தற்போது 20 தொகுதிகளில் போட்டியிட்டு 11.24% ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளது. பா.ஜ.க, கூட்டணியை விட அதிமுக 1% கூடுதலாக ஓட்டுகளை வாங்கியுள்ளது.

தி.மு.க.வை தாங்கிப் பிடிக்கும் ஊடகங்கள்

தி.மு.க.வை ஊடகங்களும், பத்திரிகைகளும் தாங்கி பிடிக்கிறது. அதனால் அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். மத்தியில் யார் ஆட்சிக்கும் வர வேண்டும், தமிழகத்தை யார் ஆள வேண்டும்? என்ற நிலைப்பாட்டில் மக்கள் இருக்கிறார்கள். அதிமுக மக்கள் செல்வாக்குடன் இருக்கிறது நிரூபித்துக்கொண்டு உள்ளோம். ஒற்றுமையும், நம்பிக்கையும் மிகப்பெரிய பலம். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் மூலம் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். அதிமுக ஆட்சியின்போது பல்வேறு பிரச்சனைகளை சமாளித்தோம். அம்மா அரசில் பல சாதனைகளை செய்தோம்.

கார் பந்தயம் நாட்டுக்கு தேவையா?

10 ஆண்டு அதிமுக ஆட்சியில், 2021ல் 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் கடனை விட்டு வந்தோம். இதில் கொரோனா பேரிடரின்போது ஒரு ஆண்டு அரசுக்கு எந்த வருவாயும் இல்லை. ஆனால் இப்போது 43 மாத திமுக ஆட்சியில் 3 லட்சத்து 90 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். தமிழ்நாட்டின் நிதி நிலை படுபாதாளத்தில் இருக்கிறது. இவ்வளவு கடன் வாங்கியும் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. பலநூறு கோடி செலவு செய்து நடத்தப்பட்ட கார் பந்தயம் நாட்டுக்கு தேவையா? திமுக பணக்காரர்களுக்கான அரசு.

போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன

திட்டத்தை அறிவித்துவிட்டு, விளம்பரம் செய்துவிட்டு, அந்த திட்டத்துக்கு குழு போடுவார்கள். திமுக ஆட்சியில் 50க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால்தான் இது குழு அரசாங்கம். குழு போட்டால் அந்த திட்டம் அதோடு முடிந்துவிட்டது என்று அர்த்தம். 2021ல் நிறைவேற்ற முடியாத 525 அறிவிப்புகளை வெளியிட்டு, அதில் 10% கூட நிறைவேற்றவில்லை. ஆனால் 98% நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சரும், அமைச்சரும் பொய் செய்தி பரப்புகிறார்கள். வெள்ளை அறிக்கை கேட்டால் கேலி, கிண்டல் செய்கிறார்கள். 2026ல் இவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என பல்வேறு துறையினரின் போராட்டத்தை கடந்த ஓராண்டாக திமுக சந்தித்து வருகிறது.

விலைவாசி உயர்ந்துவிட்டது

அரிசி விலை, பால் விலை, மின் கட்டணம், வீட்டு வரி, கடை வரி, தொழில் வரி, பத்திரப்பதிவு கட்டணம், கட்டுமான பொருட்கள், கைடு லைன் வேல்யூ போன்றவற்றை உயர்த்தியதுதான் 43 மாத கால திமுக அரசின் சாதனை. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கிறார்கள். விஞ்ஞான ஊழலுக்கு இதுவே சாட்சி. ஒரு நாளைக்கு ஒரு கோடி பாட்டில் விற்பனையாகிறது. இதன் மூலம் மாதத்துக்கு 3 ஆயிரத்து 600 கோடி ஊழல் செய்கிறார்கள்.

அதிமுகவைக் கண்டு திமுகவுக்கு பயம்

சட்டப்பேரவை நாட்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு காரணம் பயம்தான். அதிமுகவை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டது. இதன் மூலம் நாம் வெற்றி பெற்றுள்ளோம். மக்களுக்கு எதையும் செய்யவில்லை, அதனால் தடுமாறுகிறார்கள்.

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை என்பார்கள். ஆனால் நான் பேசும்போது கட் செய்கிறார்கள். நான் கேள்வி கேட்கும்போது கட் செய்வார்கள், முதல்வர் பதில் சொல்வதை ஒளிபரப்புவார்கள். மக்களுக்கு நான் என்ன கேட்டேன் என தெரியும்? டங்ஸ்டன் விவகாரத்தில் நான் பேசியதை ஒரு நாள் லைவ் செய்ததிலேயே ஆடிப்போய்விட்டார்கள். சட்டப்பேரவையில் நான் பேசியதை ஒளிபரப்பி இருந்தால் திமுக அரசே இருந்திருக்காது.

மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். ஐ.டி.விங் நிர்வாகிகள் மீது பொய் வழக்குபோட்டு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுகிறார்கள். பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை. நீதிமன்றத்துக்கு சென்று அனுமதி வாங்க வேண்டியுள்ளது. ஏன் இந்த வஞ்சகத்தனம். எவ்வளவு தூரம் ஸ்டாலின் நெருக்கடி கொடுக்கிறாரோ அவ்வளவு தூரம் அ.தி.மு.க., வளரும்.

200 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெறும்

200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று என முதல்வரும், துணை முதல்வரும் இறுமாப்புடன் சொல்கிறார்கள். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம், அந்த கதையாக இருக்கிறது ஸ்டாலின் சொல்வது. அதிமுகவில் எழுச்சி பிறந்துள்ளது. அதுவே வெற்றி. 2026ல் அதிமுக வெற்றி உறுதி.

இறுமாப்புடன் சொல்கிறேன், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்கிறார் கனிமொழி. அவரது கனவும் பலிக்காது. சட்டசபை தேர்தலில் தெரியும். 200 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெறும். 200 தொகுதிகளில் வெற்றி என தி.மு.க., கூறுவது அ.தி.மு.க.வுக்குத் தான் பொருந்தும். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என தி.மு.க. பகல் கனவு காண்கிறது. அது நிறைவேறாது.

கூட்டணி கட்சிகள் திமுகவில் இணைந்துவிடலாம்

ஊழல் இல்லாத துறையே இல்லை. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. தங்கம், வெள்ளி விலை நிலவரம் போல, பத்திரிகைகளில் கொலை நிலவரம் வருகிறது. இதுபோன்ற ஆட்சி இந்தியாவில் உண்டா? நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், வழிப்பறி நடக்கிறது.

திமுக கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை. திமுக கூட்டணியில் இருப்பது ஒரே கொள்கையுடைய கட்சிகள் என ஸ்டாலின் சொல்கிறார். தி.முக. கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒரே கொள்கை உடையவை என்றால் அக்கட்சியில் இணைந்துவிட வேண்டியது தானே? கொள்கை நிலையானது, அதன் அடிப்படையில் செயல்படுவதுதான் அதிமுக.

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் சாதனை

43 மாத திமுக ஆட்சியின் சாதனை என்னவென்றால், கமிஷன் – கலெக்ஷன் – கரெப்ஷன். திமுக ஊழலின் ஊற்றுக்கண், உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியது. இவை தான் தி.மு.க.,வின் சாதனை. உறுப்பினர் அட்டைகளை முழுமையாக உரியவர்களிடம் சேர்க்க வேண்டும். இளைஞர் – இளம்பெண் பாசறையை வலுப்படுத்த வேண்டும். அ.தி.மு.க.,வில் அதிகளவில் இளைஞர்களை சேர்க்க வேண்டும்.

ஒவ்வொரு பாகத்துக்கும் 9 பேர் கொண்ட குழு

வாக்காளர் பட்டியலில் நமது கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் நீக்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக கடிதமும் அனுப்பியுள்ளனர். திமுக இதை திட்டமிட்டு செய்கிறது. அதை சரி செய்ய வேண்டும். தமிழகத்தில் 68 ஆயிரத்து 467 பாகங்கள் உள்ளன. ஒவ்வொரு பாகத்துக்கும் 9 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். இதை சரியாக செய்தால் 100% வெற்றி உறுதி.

சிறப்பாக செயல்படுவோருக்கு தேர்தலில் வாய்ப்பு

அதிமுக ஜனநாயக் அமைப்புள்ள ஒரே இயக்கம. கதவை தட்டி பதவி தரும் இயக்கம். சிறப்பாக செயல்படுவோருக்கு, விசுவாசமாக செயல்படுவோருக்கு 2026 தேர்தலில் வாய்ப்பு உண்டு. அதிமுகவில் 2 கோடி தொண்டர்கள் உள்ளனர், அதிமுக குடும்பம் என எடுத்துக்கொண்டால் 60 லட்சம். இவர்கள் வாக்களித்தாலே வெற்றி பெற்றுவிட முடியும். இன்னும் 14 மாத உழைப்பு வெற்றி கொடுக்கும்.

தி.மு.க., ஆட்சி மீது வெறுப்பு

தி.மு.க. ஆட்சியை மக்கள் வெறுக்க ஆரம்பித்துவிட்டனர். மக்கள் விரோத அரசு என உணர்ந்துவிட்டனர். அ.தி.மு.க. ஆட்சி மலரும் என்று எதிர்பார்க்கின்றனர். அதிமுகதான் மக்கள் விரும்பும் ஆட்சியை கொடுத்தது. அ.தி.மு.க., தான் ஜனநாயகம் கொண்ட இயக்கம். மழை வெள்ளத்தின்போது விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றது. பல இடங்களில் எம்.எல்.ஏ.க்களை உள்ளே விடவில்லை. அமைச்சர்களை மக்கள் கேள்வி கேட்கின்றனர். எப்போது அதிமுக ஆட்சிக்கு வரும் என மக்கள் காத்திருக்கின்றனர்.

ஜனவரி மாத இறுதியில் சூறாவளி சுற்றுப்பயணம்

திறமையற்ற அரசாங்கத்தால் மக்கள் தத்தளிக்கிறார்கள். முதலமைச்சரே உள்ளே போக முடியாத சூழ்நிலை உள்ளது. ஜனவரி மாத இறுதியில் 234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். மக்களை சந்தித்து இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்துரைப்போம். 2026ல் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற சூளுரை ஏற்போம். 2026ல் நமக்கு பொற்காலம் காத்துக்கொண்டிருக்கிறது. நிச்சயம் கழக ஆட்சி மலரும்.

அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி நிச்சயம்

அத்தனை பேரும் எதிர்பார்க்கும் கூட்டணி நிச்சயம் அமையும். ஏற்கனவே எம்.பி. தேர்தலில் சொன்னீர்களே, நடக்கவில்லையே? என கேட்கலாம். அந்த நிலை வேறு, இது வேறு. இது நம்முடைய தேர்தல். மக்கள் எதிர்பார்க்கும், விரும்பும், அதிமுக தலைமையிலான பிரம்மாண்ட கூட்டணி அமையும். வெற்று பெறும், ஆட்சியை பிடிப்போம். கடந்த காலம் வேறு.., 2026ல் வரும் ஆட்சி வேறு விதமாக இருக்கும். தவறுகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.

கருணாநிதி என்ன மன்னர் குடும்பமா?

2026ல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். கருணாநிதி குடும்பம் மன்னர் குடும்பமா? மன்னராட்சியில்தான் இதுபோல நடக்கும். கருணாநிதி இறந்த பிறது அவரது மகன் ஸ்டாலின் முடி சூடிக்கொண்டார், இப்போது அவரது வாரிசை கொண்டு வந்து முடி சூட்டுகிறார். இதன் மூலம் திமுகவுக்கு சனி பிடித்துவிட்டது. மக்கள் ஒரு முறை ஏமாந்துவிட்டார்கள். 2026 தேர்தலுக்கு மக்கள் விழித்துக்கொண்டுவிட்டார்கள். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

திமுகவினரே நொந்துபோய் உள்ளார்கள். உழைப்பவர்களுக்கு திமுகவில் மதிப்பில்லை. திமுக அமைச்சர்கள் முகத்தில் பிரகாசமே இல்லை. கருணாநிதி காலத்தில் அமைச்சராக இருந்தவர்கள், ஸ்டாலின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் துணை முதல்வர் பதவி கிடையாது. கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்தால் அவரை எம்.எல்.ஏ. ஆக்கினார்கள், பிறகு அமைச்சராக்கினார்கள். இப்போது துணை முதலமைச்சர் ஆக்கியிருக்கிறார்கள்.

கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால்தான் இவ்வளவு பதவிகளும் கிடைக்கும் என்ற நிலைமைக்கு திமுக வந்துவிட்டது. குடும்ப உறுப்பினர்கள்தான் அங்கு ஆட்சி அதிகாரம் செலுத்த முடியும். அப்படிப்பட்டவர்கள் 20226ல் மக்களால் மாற்றிக்காட்டப்படுவார்கள். திமுக கட்சியல்ல, கார்ப்பரேட் கம்பெனி.” இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry