நாட்டிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று முதலமைச்சர் ஸ்டாலின் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி பாலியல் பாலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உயர் கல்வித்துறை அமைச்சரும், பெருநகர காவல் ஆணையரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை ஊடகங்களிடம் தெரிவித்தார்கள். பெருநகர காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்த பாலியல் வழக்கில் சிக்கியிருக்கும், ஆளும் திமுகவைச் சேர்ந்த நிர்வாகி என கூறப்படும் ஞானசேகரன் மீது 26 வழக்குகள் உள்ளன. இதில் 10க்கும் அதிகமானவை பாலியல் வழக்குகள். 6 வழக்குகளில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வளவு குற்றப்பிண்ணனி கொண்ட ஒருவன், துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் இன்னபிற திமுக நிர்வாகிகளுடன் தனி புகைப்படம் எடுத்துக்கொண்டது எப்படி என்ற கேள்வி எழுகிறது.
ஞானசேகரானால் பாதிப்பட்ட மற்ற மாணவிகள் புகார் தருவதை தடுக்கும் உத்தியாகவே எஃப்.ஐ.ஆர். கசியவிடப்பட்டுள்ளது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுக்க இயலவில்லை. எனெனில், சிசிடிஎன்எஸ்–ல்(Crime and Criminal Tracking Network System) ஏற்பட்ட தொழில்நுட்பகோளாறு காரணமாகவே எஃப்.ஐ.ஆர். கசிந்ததாகவும், அதை பதிவிறக்கம் செய்த 14 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறி பெருநகர காவல் ஆணையர் அருண் சாதாரணமாக கடந்து செல்கிறார்.
ஆனால், கணினியில் முதல் தகவல் அறிக்கை பதிவேற்றம் செய்த ஆப்பரேட்டர், சர்வர் பராமரிப்பாளர் உள்பட தொழில்நுட்ப குழுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இவர்களது மெத்தனத்தால்தான் எஃப்.ஐ.ஆர். கசிந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவரின் முழு அடையாளங்களை எஃப்.ஐ.ஆரில் கொண்டு வந்தது விவாதத்துக்கு உரியதாக, விமர்சனத்துக்கு உட்பட்டதாக மாறியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளங்களை வெளியே கசியவிட்டவர்கள் சட்டப்படி 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டியவர்கள். பதிவிறக்கம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, எஃப்.ஐ.ஆர். கசிய மூலக் காரணமான காவல்துறையினரை காப்பாற்ற நினைப்பது ஏற்புடையதல்ல.
மேலும், காவல்துறை நடுநிலையாக செயல்படுகிறது என்பது நிதர்சனமானால், ஞானசேகரனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தைரியமாக புகார் அளிக்கலாம், அவர்களது அடையாளம் மறைக்கப்படும் என பெருநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும். ஞானசேகரன் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்து சட்டப்பிரிவு 71ஐ சேர்க்குமாறு தேசிய மகளிர் ஆணையம், காவல்துறை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்தச் சட்டப்பிரிவு , குற்றம் செய்வதை வழக்கமாகக் கொண்டவன் என்பதைக் குறிக்கும். இந்தப்பிரிவை சேர்த்தால், ஞானசேகரனுக்கு 10 ஆண்டுகள் சிறை அல்லது கடைசி மூச்சு வரை ஆயுள் தண்டனை கிடைக்கக் கூடும்.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள புதர்ப் பகுதியில் பலாத்காரம் நடந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அண்ணா பல்கலை. வட்டாரத்தில் விசாரித்தபோது, பல்கலைக்கழக வளாகத்தின் மையப்பகுதியில் இந்தக் கொடூரம் நடந்துள்ளது தெரியவருகிறது. எஸ்.ஹெச். பில்டிங்கில் சம்பந்தப்பட்ட மாணவியும், அவரது ஆண் நண்பரும் இரவு 8 மணி அளவில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அங்கு வந்த ஞானசேகரன் இவர்களை மிரட்டியதுடன், ஆண் நண்பரை தாக்கி ‘விவேக் ஆடி’ எனப்படும் விவேகானந்தா ஆடிட்டோரியத்துக்கு அழைத்துச் சென்றுள்ளான். பின்னர் அங்கிருந்து அந்த மாணவியை மட்டும் ஹைவே லேப் பின்புறம் அழைத்துச்சென்று 40 நிமிடம் பலாத்காரம் செய்ததுடன் வீடியோவும் எடுத்துள்ளான். வளாகத்தின் மையப்பகுதியில் சிசிடிவி கேமரா வேலைசெய்யவில்லை என்பது நம்பும்படியாக இல்லை.
ஞானசேகரனை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு 50 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், 40 பேர் விடுவிக்கப்படுகின்றனர். எஞ்சிய 10 பேரில் 4 வது ஆளாக ஞானசேகரனை போலீஸ் விசாரிக்கிறது. அவன் குற்றச்சாட்டை மறுத்த நிலையில், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். 8வதாக விசாரணைக்கு வந்த ஞானசேகரனின் தம்பிதான், அவனை காட்டிக்கொடுத்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பாதிக்கப்பட்ட மாணவி கூறியபடி, ஞானசேகரன் வீட்டிலிருந்து டி–சர்ட்டையும் எடுத்துக்கொள்ளான். அதன்பிறகே போலீஸ் ஞானசேகரனை கைது செய்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
புகார் கொடுத்த பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்ததுடன், சார் ஒருத்தர் இருக்காரு, நீ கூப்பிடும்போது வரனும், இல்லை என்றால் ஆண் நண்பரை கொன்றுவிடுவேன் என அவன் மிரட்டியுள்ளான். செமஸ்டர் விடுமுறைக்கு ஊருக்கு போவவதாக அந்த மாணவி சொல்லியும், எங்கேயும் போகக்கூடாது, கூப்பிடும்போது வந்தே ஆக வேண்டும் என ஞானசேகரன் மிரட்டியுள்ளான். இதைத்தான் ‘யார் அந்த சார்’ என அதிமுக கேள்வி எழுப்புகிறது. ‘#யார்_அந்த_SIR என்பதை பெரும் இயக்கமாகவே அதிமுக முன்னெடுத்துள்ளது. யாரைக் காப்பாற்ற திமுக முயற்சிக்கிறது என்ற கேள்வியை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நோக்கம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மை குற்றவாளி தப்பிக்க கூடாது என்பதே..#யார்_அந்த_SIR
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள். pic.twitter.com/DHlioeSk2u
— AIADMK IT WING – Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) December 31, 2024
தற்போது புகார் அளித்துள்ள மாணவி மற்றும் 5 மாணவிகளின் வீடியோக்கள் ஞானசேகரனின் செல்ஃபோனில் இருந்துள்ளது. பலமான கிரிமினல் பின்புறத்துடன், பாலியல் வழக்கில் 2 வருடம் சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வரும் ஒருவன், எந்தவித அச்சமும் இல்லாமல், மாணவிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுக்கிறான் என்றால், யார் கொடுத்த தைரியத்தில் இதைச் செய்தான்? அரசியல் அதிகார ஆதரவு, பின்புலம் இல்லாமல் இவ்வளவு கொடூரங்களை செய்ய சாத்தியமே இல்லை.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, இந்தச் சம்பவத்துக்கு நேரடியான பொறுப்பேற்க வேண்டியர்கள் யார்? என்ற கேள்வி எழுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் 113 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. இந்த பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் பல உறுப்புக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. உள்பட 4 கல்லூரிகள் சென்னையில் உள்ளன. எஞ்சிய 3 கல்லூரிகள், காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங்–கிண்டி, அழகப்பா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங் ஆகியவை அண்ணா பல்கலைக்கழக வளகாத்தில் இயங்குகின்றன.
200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, பாரம்பரியம் மிக்க காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங்–கிண்டியைச் சேர்ந்த 2ம் ஆண்டு மாணவிதான், திமுக நிர்வாகி என கூறப்படும் ஞானசேகரானால் பலாத்காரத்துக்கு ஆளானவர். இந்தக் கல்லூரி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரே காரணத்தால் வேந்தரையோ, பதிவாளரையோ இந்தச் சம்பவத்துக்கு முழுமையாக பொறுப்பாக்க இயலாது.
அப்படியானால், இந்தச் சம்பவத்துக்கு யார் பொறுப்பேற்பது? மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கும் மூன்று கல்லூரிகளின் முதல்வர்கள் உள்ளிட்டோர்தான் பொறுப்பு. இதுவரையில் கல்லூரி முதல்வர்கள் வாய் திறக்கவில்லை, அவர்கள் விசாரணைக்கும் உட்படுத்தப்படவில்லை. குறிப்பாக காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங்–கிண்டி கல்லூரி முதல்வர் ஏன் மவுனமாக இருக்கிறார்? அல்லது மவுனமாக இருக்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.
பல்கலைக்கழகத்தில் ‘எஸ்டேட் ஆஃபீசர்’ என்று ஒருவர் இருக்கிறார். பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான இடங்களை பராமாரிப்பது, கட்டுமானம் போன்றவற்றுக்கு அவர்தான் பொறுப்பு. அதேபோல் ‘பல்கலைக்கழக வளாக பாதுகாப்பு, சிசிடிவி கேமரா உள்ளிட்டவற்றை பராமரிப்பது செக்யூரிட்டி ஆஃபீசர்’ பணி. 72 கண்காணிப்பு கேமராக்களில், 14 கேமராக்கள் வேலை செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தியதா?
பலாத்கார சம்பவத்துக்கு காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங்–கிண்டி(சிஇஜி) கல்லூரி முதல்வர் எந்த அளவுக்கு பொறுப்பாக்கப்பட வேண்டுமோ அதே அளவுக்கு பொறுப்பானவர்கள்தான் இந்த இருவரும். ஒரு கல்லூரியின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என யுஜிசி(பல்கலைக்கழக மானியக்குழு) சில வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகபட்சம் மூன்று வழிகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் தற்போது இருப்பதோ 7 வழிகள். இதில் 2 – 3 தவிர மற்ற வழிகளில் காவலாளிகள் கிடையாது. சிசிடிவி மற்றும் வழிகளின் எண்ணிக்கையில் செக்யூரிட்டி ஆஃபீசர் கோட்டை விட்டுள்ளார்.
7 வழிகள் எப்படி என விசாரித்தபோது, பல்கலைக்கழக வளாகத்தை சுற்றி வசிப்பவர்கள் தங்கள் வசதிக்கேற்ப சுற்றுச்சுவரை உடைத்து வழி ஏற்படுத்திக்கொள்கிறார்கள். பல்கலைக்கழக நிர்வாகம் அதை அடைக்க முற்பட்டால், ஆளும் திமுகவினர், கட்டுமான பணியைத் தடுத்து அச்சுறுத்துவதாக பல்கலை. ஊழியர்கள் கூறுகின்றனர். மட்டுமல்லாமல், பல்கலைக்கழக வளாகத்துக்குள், கட்டுமான தொழிலில் ஈடுபடும் 400 குடும்பங்கள் ஆளும் கட்சியினரின் ஆதரவுடன் குடிசை போட்டு தங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஆளும் திமுகவினர் பாதிக்கப்பட்ட பெண் மீதே குற்றம் சுமத்தி பிரச்சனையை மடைமாற்ற முயற்சிக்கிறார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழு விசாரணையை தொடங்கிவிட்டது. தற்போது புகார் கொடுத்த மாணவி மட்டுமல்லாமல், ஞானசேகரனால் பாதிக்கப்பட்ட மற்ற மாணவிகளையும் இந்தக் குழு ரகசியமாக விசாரித்து அவர்களிடம் புகார் பெற வேண்டும். அதுமட்டுமல்லாமல், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், பெண் ஆசிரியைகளும் பாலியல் துன்பங்களை அனுபவிப்பதாக புகார் கூறப்படுகிறது. இதுகுறித்தும் ஐபிஎஸ் அதிகாரிகள் குழு விசாரணை நடத்த வேண்டும்.
தேசிய அளவில் முக்கியமானதொரு பல்கலைக்கழகத்துக்கு அவமானத்தை தேடித்தந்த காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் – கிண்டி கல்லூரியின் முதல்வர், அண்ணா பல்கலைக்கழக எஸ்டேட் ஆஃபீசர், செக்யூரிட்டி ஆஃபீசர் ஆகியோர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு, போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அண்ணா பல்கலை. வளாகத்திலேயே மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலையில், தேசிய அளவில் அதிர்வை ஏற்படுத்தியுள்ள பாலியல் சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ராஜினாமா செய்ய வேண்டும்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர், காவல்துறை தலைவர் ஆகியோர் இனியும் மவுனியாக இருக்கக் கூடாது. இவர்களது மவுனம் பல சந்தேகங்களுக்கு வித்திடுகிறது. செமஸ்டர் விடுமுறைக்கு பிறகு 6ந் தேதி கல்லூரி திறக்கப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு கேட்டு, நீதி கேட்டு மாணவர்கள் அறவழியில் போராட முற்பட்டால் அவர்கள் மீது போலீஸார் அடக்குமுறையை ஏவக்கூடாது.
கட்டுரையாளர் :- ‘அம்மா’ கோபி, மூத்த ஊடகவியலாளர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry