
தேசிய கல்விக் கொள்கையை (NEP 2020) தமிழ்நாடு அரசு எதிர்ப்பதாகக் கூறினாலும், அதிலுள்ள பல திட்டங்களை வேறு பெயர்களில் செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள பல தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு நிரந்தர கல்விக் கணக்கு பதிவை (APAAR – Automated Permanent Academic Account Registry) உருவாக்குவதற்கு ஒப்புதல் தருமாறு பெற்றோரை அவசரப்படுத்துவதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் உத்தரவின்படி இது நடைமுறைப்படுத்தப்படுவதாக பள்ளிகள் கூறுகின்றன.
APAAR அடையாளத் திட்டம், மத்திய கல்வி அமைச்சகத்தின் ‘ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாளம்’ திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும் தனித்துவமான 12 இலக்க அடையாள எண்ணாகும். இதில் ஆரம்பக் கல்வியிலிருந்து, கல்லூரி நிலை வரை சம்பந்தப்பட்ட மாணவரது கல்வித் தகவல்கள் சேமிக்கப்படும்.
தரவு பாதுகாப்பு குறித்து பெற்றோர் கவலை
மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டு சேமிக்கப்படும் தகவல்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். தங்களது ஆதார் அட்டை மூலம் குழந்தைகளுக்கு APAAR அடையாளம் உருவாக்க பெற்றோர் ஒப்புதல் அளிக்கவும் மறுக்கின்றனர். பள்ளி நிர்வாகத்தின் இந்த முயற்சி கவலைக்குரியது என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் கீழ்க்கட்டளையில் உள்ள தமிழ்நாடு பாடத்திட்டத்தைப் பின்பற்றும் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி பெற்றோருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், “அரசின் வழிகாட்டுதலின்படி, மாணவர்களுக்காக ‘DigiLocker கணக்கு’ உருவாக்க APAAR அடையாளத்தை உருவாக்கி வருகிறோம். இதற்காக, பெற்றோர் தங்களது ஆதார் எண்ணை வழங்க வேண்டும், இது குழந்தையின் APAAR அடையாளப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “APAAR அடையாளம் மாணவர்களின் ஒட்டுமொத்த கல்வித் தகவல்களை பாதுகாப்பாகச் சேமித்து, கல்வி சேவைகளை எளிதாக அணுக உதவும்” என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் எதிர்ப்பு
தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பிரிவைச் சேர்ந்த ஜி.எம். சங்கர், “சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் எனது மகள் 10ம் வகுப்பு படிக்கிறார். மார்ச் 4 அன்று, என் மகள் படிக்கும் பள்ளி நிர்வாகம், ஆதார் அடிப்படையில் APAAR அடையாளத்தை உருவாக்க ஒப்புதல் கோரி கடிதம் அனுப்பியது. நான் தாமதப்படுத்தியதால், ஒப்புதல் வழங்குமாறு பள்ளி நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. ஒப்புதல் தர விருப்பமில்லை என்பதை குறிப்பிடுவதற்கான வாய்ப்பே கடிதத்தில் வழங்கப்படவில்லை. எனினும் மார்ச் 17 அன்று, ‘ஒப்புதல் இல்லை’ என நான் பதிலளித்தேன்.” என்றார்.
8ம் வகுப்பு மாணவர் ஒருவரின் பெற்றோர் கூறும்போது, “சேர்க்கப்பட்ட தரவுகளை பாதுகாக்க அரசு என்ன வழிமுறைகளை பின்பற்றுகிறது? பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மருத்துவம், பொறியியல் உள்பட கல்லூரி மாணவர்களுக்கும் APAAR அடையாளம் உருவாக்கப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் தமிழகக் கல்வித்துறை இதில் தலையிட வேண்டும்” என்றார்.
NEP 2020ன் அங்கமான ‘ஒரே நாடு, ஒரே மாணவர்’ அடையாள அட்டை திட்டத்தை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டுதலின்படி பள்ளிகள் அமல்படுத்துகின்றனவா? அல்லது கல்வித்துறைக்குத் தெரியாமல் தனியார் பள்ளி நிர்வாகங்கள் தாங்களாகவே APAAR ID CARD திட்டத்தை செயல்படுத்த தொடங்கியிருக்கின்றனவா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளிப்பது அவசியமாகிறது.
இதனிடையே, தேசிய கல்வி கொள்கை(NEP2020) வழிகாட்டுதலின்படி மாணவர் தூதர்களை நியமிக்குமாறு தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன்படி, தேசிய கல்விக்கொள்கையை ஊக்குவிக்க ஒவ்வொரு உயர் கல்வி நிறுவனங்களும் தலா மூன்று மாணவர்களை NEP SAARTHI (தூதர்கள்) ஆக பரிந்துரைக்க வேண்டும்.
ஆனால், NEP 2020 செயல்படுத்துதல் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கருத்து முரண் நிலவுவதால், பல அரசு உயர்கல்வி நிறுவனங்கள் இதுவரை மாணவர் தூதர்களை நியமிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
சமீபத்தில், மத்திய கல்வி அமைச்சகமானது, NEP தூதர்களாக நியமிக்கப்பட்ட மாணவர்களின் செயல்பாடுகளை இணையதளத்தில் பதிவேற்றுமாறு தமிழ்நாடு அரசை கேட்டுள்ளது. இந்த செயல்பாடுகளின் அடிப்படையில், உயர்கல்வி அமைச்சக அதிகாரிகள் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வார்கள்.
கல்வியமைச்சகத்தின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், சட்டீஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே மாணவர் தூதர்களை நியமித்து, மத்திய அரசுக்கு பட்டியலை அனுப்பியுள்ளன.
Source : DT Next
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry