
கல்வி என்பது வாழ்க்கையில் கற்றுக்கொள்வதற்கும், சம்பாதிப்பதற்குமான ஒரு ஊடகம். இன்றைய காலகட்டத்தில், குழந்தைகளின் கல்வியில் பெற்றோர் மிகவும் அக்கறை காட்டுகிறார்கள். ஏனெனில் கல்வி தங்கள் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்குகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள்.
ஆனால் பல மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சரியான ஆதரவும், வசதிகளும் கிடைப்பதில்லை. எனவே இதை சரிசெய்யும் வகையில் உள்ளடக்கிய கல்வி(Inclusive Education) பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகிறது. உள்ளடக்கிய கல்வி, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு, பொதுப் பள்ளிகளில் சம வாய்ப்புகளை வழங்குகிறது. இது மாற்றுத்திறனாளி குழந்தைகள் பல்வேறு வகையான மக்களையும், பல்வேறு இயற்கை சவால்களையும் எதிர்கொண்டு சமூகத்தில் வாழ கற்றுக்கொடுக்கிறது. மேலும், தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கையை எதிர்கொள்ளவும் உள்ளடக்கிய கல்வி உதவுகிறது.
இங்கு நாம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் என குறிப்பிடுவது, உடல் ஊனம், பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, மனநல குறைபாடு, அறிவுசார் இயலாமை, கற்றல் குறைபாடு என அனைத்தும் அடங்கும். இவர்களைக் கையாள்வதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. ஆசிரியர்கள் அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் ஆர்வங்கள், மனப்பாங்குகள் மற்றும் திறன்களை அறிந்து அதற்கேற்ப அவர்களை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பிரத்யேக இலக்குகளை நிர்ணயிக்கும் திறனைக் கொண்டிருத்தல் அவசியம். பொறுமையாகவும், கண்ணியமாகவும், அர்ப்பணிப்புடனும் இருக்க வேண்டும். பெற்றோர் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுடன் ஒரு குழுவாக பணியாற்ற வேண்டும். இவை ஆசிரியர்களுக்கு அவசியமாகிறது.
மாற்றுத்திறனாளி மாணவர்களின் வளர்ச்சியில் மனநல மருத்துவர்களின் பங்கும் மிக முக்கியமானது. கற்றல் குறைபாடுகள் (Learning Disabilities) மற்றும் அறிவுத்திறன் குறைபாடுகள் (Intellectual Disabilities) உள்ள மாணவர்களை மதிப்பீடு செய்வதும், அவர்களுக்கு தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் சான்றிதழ்களை (Concessions) வழங்குவதும் அவர்களுக்கான பணிகளாகும்.
ஏற்கனவே பார்த்ததுபோல, நமது கல்வி அமைப்பு, உள்ளடக்கிய கல்விக் (Inclusive Education) கொள்கையை பின்பற்றுகிறது. இதில், சாதாரண மாணவர்களுடன் சேர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களும், சாதாரண வகுப்பறைகளில் படிக்கின்றனர். இங்கு “மாற்றுத்திறனாளிகள்” என்று சுட்டுவது, கல்விக்குறைபாடுகளும், அறிவுத்திறன் குறைபாடுகளும் கொண்ட மாணவர்களைக் குறிக்கும்.
இது மாற்றுத்திறனாளி மாணவர்களைச் சமூகத்துடன் இணைப்பதற்கான முயற்சியாக உள்ளது. ஆனால், இங்கு ஒரு பெரிய பிரச்சனையே தேர்வு முறையாகும். அதாவது சாதாரண மாணவர்களை மதிப்பீடு செய்யும் தரத்திலேயே, மாற்றுத்திறனாளி மாணவர்களையும் மதிப்பீடு செய்கின்றனர்.

இருந்தாலும், அவர்களுக்குச் சில சலுகைகள் அளிக்கப்படுகின்றன. மொழிவிலக்கு (Language Exemption), கால்குலேட்டர் பயன்பாடு, மற்றும் எழுத்துப் பிழைகளைக் கண்டுகொள்ளாமல் விடுதல் போன்றவை. மேலும், எழுத முடியாத குழந்தைகளுக்கு எழுத்தாளர் (Scribe) வழங்கப்படுவர். பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த விலக்குகளை வழங்க பரிந்துரை செய்வது மனநல மருத்துவர்களின் பொறுப்பாக இருக்கிறது.
பரிசோதனை மூலம் சாதாரண குழந்தைகள், சட்டவிரோதமாக விலக்கு (Exemption) பெறுவதை மனநல மருத்துவர்கள் தடுக்கிறார்கள். எழுத்தாளர் வழங்கிய போதிலும் எந்தப் பயனும் இல்லாத மாணவர்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்கு எழுத்தாளர் வழங்கப்படாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இது கலவித்துறையின் மேலதிக சுமையை குறைக்க உதவுகிறது. ஆனால் பரிசோதனை முடிவுகளை சாதகமாக வழங்குமாறு கோரிக்கைகள், அழுத்தங்கள், உணர்ச்சிகரமான மிரட்டல்கள் உள்பட பலவிதமான பிரச்சனைகளை மனநல மருத்துவர்கள் சந்திக்கிறார்கள்.
மனநல மருத்துவர்கள் அரசுக்கு முன்வைக்கும் கோரிக்கைகள்
- கற்றல் மற்றும் அறிவுத்திறன் குறைந்த மாணவர்களிடம், “முதலாம் உலகப் போரில் எந்தெந்த நாடுகள் ஈடுபட்டன?” போன்ற கேள்விகளை மறுபடியும் மறுபடியும் சொல்லி எழுத வைப்பதில் என்ன அர்த்தம்? எதிர்காலத்தில் அவர்களுக்கு பயன்படும் அறிவை கொண்ட தேர்வு முறை ஏன் உருவாக்கக்கூடாது?
- குறைந்த அறிவுத்திறன் கொண்ட மாணவர்களுக்கென ஒரு தனியான மதிப்பீட்டு முறை ஏன் இருக்கக்கூடாது?
- மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனி தேர்ச்சி சதவீதம் ஏன் வழங்கக்கூடாது? இதனால், அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள், அவர்கள் சாதனை சதவீதத்தை பாதிக்காமல், மேலும் வெற்றிகளை நோக்கிச் செல்லலாம்.
- அனைத்து மாணவர்களையும் சமமாக மதிக்க வேண்டும்” என்ற எண்ணத்தில், தன்னலமற்ற சேவை செய்யும் ஆசிரியர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குவது நியாயமா?
- எழுத்தாளர் கிடைத்தால் மட்டுமே என் குழந்தையின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும்” என்ற எண்ணத்தை பெற்றோரிடம் ஏற்படுத்துவது நியாயமா?
Summary : தமிழ்நாட்டில் கல்வி அமைப்பில் மாற்றுத்திறனாளி மற்றும் குறைந்த அறிவுத்திறன் கொண்ட மாணவர்களுக்காக தனியான மதிப்பீட்டு முறையை உருவாக்க வேண்டும் என்று மனநல மருத்துவர்கள் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இப்போதைய உள்ளடக்கிய கல்விமுறை (Inclusive Education) மாணவர்களை சமூகத்தில் இணைக்க உதவினாலும், தேர்வு முறையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதுசரியான தீர்வாக இருக்காது என்பது மனநல மருத்துவர்களின் கருத்து.
✅ குறைந்த அறிவுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு தனி மதிப்பீட்டு முறை உருவாக்கம்.
✅ மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனியான தேர்ச்சி சதவீதம் வழங்க வேண்டும்.
✅ அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களின் தேர்ச்சி சதவீத அழுத்தத்தை குறைக்க தீர்வு.
✅ அனைத்து மாணவர்களையும் ஒரே மாதிரியான தேர்வு முறையில் மதிப்பீடு செய்யக்கூடாது.
Image Source : Getty Image.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry