
அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசியச் செயலாளரும்(ஐபெட்டோ – AIFETO), தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, தமிழக முதலமைச்சர், தமிழக நிதி அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில், “ஏப்ரல் 24, 2025 அன்று சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியால் தாக்கல் செய்யப்படும் மானியக் கோரிக்கையின்போது, எதிர்பார்த்துக் காத்திருக்கும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டால் பெரிதும் மகிழ்ச்சியடைவோம்.

Also Read : சென்னையில் மார்க்ஸ் சிலை! சமூக வளர்ச்சி, சமத்துவக் கொள்கை வளர அடிகோலும் என ஐபெட்டோ வரவேற்பு!
12 கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்படவில்லை
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை 12.10.2023 அன்று, டிட்டோஜேக் – தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் மாநில உயர்மட்டக்குழு பொதுச் செயலாளர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியபோது, ஏற்கப்பட்ட 12 கோரிக்கைகளுக்கும் இதுவரையில் தீர்வு காணப்படவில்லை.
தொடர் போராட்டங்களின் மூலம் அவர்கள் அரசின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை தாக்கல்செய்து அறிவிக்கும்போது – ஒப்புதல் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்திற்கும் அறிவிப்பு வெளியிட வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

அரசாணை எண். 243 ரத்து செய்யப்படவில்லை
தொடக்கக் கல்வித்துறையில் ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்காக அமைக்கப்பட்டுள்ள மூவர் குழு அறிக்கையினை உடனடியாக வெளியிட்டு, ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண வேண்டுமென இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்கள்.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு நீண்ட காலமாக முன்னுரிமைப் பட்டியல் ஒன்றிய அளவில் பின்பற்றப்பட்டு வந்தது. மாவட்ட அளவில் முன்னுரிமைப் பட்டியலினை நடைமுறைப்படுத்தலாம் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், மாநில அளவில் முன்னிரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, மாறுதல் / பதவி உயர்வு அளிக்க வேண்டுமென – பள்ளிக் கல்வித்துறை சார்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை எண்.243, நாள்: 21.12.2023-ஐ ரத்து செய்திட வலியுறுத்தி வருகிறோம்.
அரசாணை அமல்படுத்தப்பட்டால், பெரும்பான்மையான பெண் ஆசிரியர்கள் உட்பட 90 விழுக்காடு ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலந்தொட்டு முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் கூட இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டும், மாநில அளவில் முன்னிரிமை என்பது கைவிடப்பட்ட கோரிக்கையாகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காலத்தில் பாதிப்பை உருவாக்கும் அரசாணையினை அமல்படுத்தப்படும் நிலைமையினை ஏற்படுத்தாமல், பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில், அரசாணை எண் 243-ஐ ரத்து செய்யப்படும் என நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மன உளைச்சலுக்கு உள்ளாகும் ஆசிரியர்கள்
அவரது மகன் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் விதிகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு பணப் பயன்களை பிடித்தம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது வழங்கிய பலன்களையெல்லாம் அலுவலர்கள் ரத்து செய்வதால் ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதை அனுமதிக்கலாமா?
அரசாணை எண்.23, நிதித்(ஊதியப் பிரிவு) துறை நாள்.12.1.2011, நிதித்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அரசுக் கடிதங்கள் தெளிவுரை அனைத்தும் நிதித்துறை முதன்மைச் செயலாளராக இருந்த ஞானதேசிகன் இ.ஆ.ப., காலத்திலும், சண்முகம் இ.ஆ.ப., நிதித்துறை முதன்மைச் செயலாளராக இருந்தபோதும் வெளியிடப்பட்டவையாகும்.
Also Read : காபி Vs டீ – எது பெஸ்ட்? ஒரு நாளைக்கு எத்தனை கப், எந்த நேரத்தில் குடிக்கலாம்?
அரசாணைகளைப் படித்து கோப்புகளை எழுதுபவர்கள் இல்லையா?
தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி என்பது, பதவி உயர்வுக்கு வாய்ப்பில்லாதது என்பதைக் கருத்தில் கொண்டு, தேர்வுநிலை தர ஊதியம் முறை 15600 – 39100 + 5400 / 5700 வழங்கப்பட்டது. 31.5.2009-க்கு முன்னர் பதவி உயர்வு பெற்ற தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தேர்வு நிலை தர ஊதியமாக 15,600 – 39,100 + 5,400 என்ற ஊதியத்தட்டில் 16 ஆண்டுகாலமாக பெற்று வருவதுடன், 80 விழுக்காடு தலைமை ஆசிரியர்கள் பணிநிறைவு பெற்று சென்றுவிட்டார்கள்.
இரண்டு தலைமைச் செயலாளர்கள், நிதித்துறை முதன்மைச் செயலாளராக இருந்தபோது பிறப்பித்த அரசாணைகளை பின்பற்றாமல், பள்ளிக் கல்வி இயக்ககத்தில், தணிக்கைத் துறையில் துணைச் செயலாளர் தகுதியில் பணியாற்றும் ஒருவர், திட்டமிட்டு உள்நோக்கத்துடன் மாநிலக் கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி (அரசுக் கடிதம் எண்.11100/தொ.க./(1) 2023 – 1, நாள்: 15.12.2023) அந்தக் கடிதம், மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு தொடக்கக் கல்வி இயக்குநரால் அனுப்பப்பட்டு, பதவி உயர்வில் செல்லாமல் உள்ள தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் ஓய்வூதிய கோப்பு திருப்பப்பட்டு வருகிறது. மேலும் ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என பிடித்தம் செய்யவும் எழுதி வருகிறார்கள்.
அதாவது, இரண்டு முதன்மைச் செயலாளர்களால் அனுமதிக்கப்பட்ட தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வு நிலையினை, 5400 தர ஊதியத்திலிருந்து 4700 தர ஊதியத்தில் நிர்ணயம் செய்து அனுப்ப வேண்டுமென கோப்பு திருப்பப்பட்டு வருகிறது. தலைமைச் செயலாளர் பதவி உயர்வு பெற்ற இரண்டு உயர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட அரசாணையினை, தெளிவுரையினை துணைச் செயலாளர் ஏற்காமல் இருப்பது சரியாகுமா? படித்து கோப்புகளை எழுதுபவர்கள் பள்ளிக்கல்வித்துறை செயலகத்தில் ஒருவர்கூட இல்லையா? குறிப்பாக அரசாணைகளைப் படித்து கோப்புகளை எழுதுபவர்கள் பள்ளிக்கல்வித் துறையில் ஒருவர்கூட இல்லையா?
பணப் பயன்களை பிடிப்பதிலியே தொடக்கக் கல்வி இயக்குநர் குறி
தொடக்கக்கல்வி இயக்குநராக தற்போது பொறுப்பில் உள்ளவர், தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் விதிகளின்படி பெற்றுவரும் பணப் பயன்களை ஏதாவது ஒரு வழியை உருவாக்கி பிடித்தம் செய்வதில் அக்கறை காட்டி வருகிறார் என்பதை உணர முடிகிறது.
உடனடியாக பள்ளிக்கல்வித் துறை துணைச் செயலாளர் அரசுக் கடிதம் எண்.11100/தொ.க.(1) 2023, நாள்: 15.12.2023-ஐ ரத்து செய்து, தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வில் பணியாற்றியுள்ள நிதித்துறை முதன்மைச் செயலாளரின் உத்தரவினை அமல்படுத்தி, தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு நிதித்துறை முதன்மைச் செயலாளருக்கு, பள்ளிக் கல்வி அமைச்சர், நிதியமைச்சர் வாயிலாக முதலமைச்சர் குறிப்பாணை வழங்கிட வேணுமாய் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
Also Read : தமிழை அழித்தொழிக்கும் ‘தங்க்லிஷ்’..! அழிந்துவரும் தாய்மொழி! கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள்!
“காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவை சாத்துடா”
வட்டாரக் கல்வி அலுவலர்கள் பொது மாறுதலினை ஜனவரி மாதமே நடத்தாமல் நீடிப்பதற்கான காரணம், நேரடி நியமனம் பெற்றவர்கள், மார்ச் மாதம் பணியில் சேர்ந்துள்ளவர்கள், பொது மாறுதலினை மார்ச் மாதம் நடத்தலாம் என தொடக்கக் கல்வி இயக்ககத்தில் அறிவுறுத்தியுள்ளார்கள்.
அதேபோல், தொடக்கக் கல்வித் துறையால் நிர்வாக மாறுதல் மௌனப் புரட்சியாக நடத்தப்பட்டு வருகிறது? நிர்வாக மாறுதல் என்றால், “காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவை சாத்துடா”” என்ற பாடல் வரிகளை நினைவுபடுத்தும் நிர்வாக மாறுதலா? பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் வாய்ப்பளித்து வருகிறார்? கல்வித்துறை மானியக் கோரிக்கைக்கு முன்பாகவே வட்டாரக் கல்வி அலுவலர்களின் மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பினை வெளியிட வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
Contact AIFETO Annamalai @ 94442 12060 / 9962222314. annamalaiaifeto@gmail.com
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry