
உடலில் நீர்ச்சத்து போதுமான அளவில் இருந்தால் தான் உடலுறுப்புக்கள் இடையூறு இல்லாமல் செயல்படும். அப்படியானால் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? எப்போது குடிக்க வேண்டும்? உடலுக்கு எவ்வளவு நீர் தேவை என்பதை எப்படி அறிவது? என்பன போன்ற கேள்விகள் எழலாம்.
உடலின் ஒவ்வொரு செல்லும் நன்றாக இயங்குவதற்கு அவற்றுக்கு உள்ளேயும் வெளியேவும் சரியான அளவு நீர் இருந்தாக வேண்டும். ஒவ்வொரு செல்லுக்கும் சக்தி மற்றும் ஊட்டச்சத்துகளைக் கொண்டு சேர்க்கும் இரத்தம் நீர் வடிவம் தான்.
Also Read : நீரிழிவு நோயில் மேலும் ஒரு புதிய வகை: டைப்-5 வகை நீரிழிவு நோய், யார் யாரை பாதிக்கும்?
முப்பது முதல் நாற்பது நாட்கள் கூட உணவு உண்ணாமல், தண்ணீரை மட்டும் அருந்தி நமது உடலில் சேர்த்து வைத்துள்ள கொழுப்பை எரித்து வாழ முடியும். ஆனால் நீரின்றி மூன்று நாட்களை கடப்பது கடினம். அதிகபட்சம் ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் மரணம் சம்பவிக்கும். நீர் சத்து அத்தனை இன்றியமையாதது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த நீரை தினமும் அவரவர் தேவைக்கு ஏற்பத் தான் அருந்த வேண்டும். வயது, வாழும் இடத்தின் தட்பவெப்ப சூழ்நிலை, அவரவர் செய்யும் வேலை, நோய்கள், அவரவரின் உடல் எடை போன்றவற்றை வைத்து ஒவ்வொருவருக்கும் தேவை மாறுபடும். தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும் என்ற பொதுவான விதி இருப்பதெல்லாம் எதற்காக? என தோன்றலாம். தேவைக்கு ஏற்றவாறு தண்ணீர் குடிக்காதவர்களுக்குத் தான் அந்த பொதுவான விதி.
Also Read : மலச்சிக்கலால் ரொம்ப அவதிப்படுறீங்களா? இந்த பழங்களை தினமும் சாப்பிடுங்க..! கண்டிப்பா ரிலீஃப் கிடைக்கும்!
நீர் தேவையை எப்படி அறிவது?
தேவை என்பது “தாக உணர்வை” வைத்துத் தான். நமது மூளையில் இதற்கென பிரத்யேக மையம் செயல்படுகிறது. இதன் வேலையே நமது உடலில் உள்ள நீருக்கும், உப்புக்கும் இடையே சமநிலையை தக்க வைப்பதாகும். உடலில் நீர் குறையும் போது உப்பின் அளவு கூடும். அப்போது தாக மையம் உந்தப்பட்டு நீர் அருந்தத் தூண்டப்படுவோம். உடலில் நீர் கூடும் போது சிறுநீரகங்களுக்கு கட்டளை பறந்து சென்று தேவைக்கு மிகுதியாக உள்ள நீர் வெளியேற்றப்படும். எனவே தாகத்துக்கு ஏற்றவாறு நீர் அருந்தவதுதான் சிறப்பானது, சரியானதும் கூட.

முதியவர்கள் உள்பட சிலருக்கு தாக உணர்வு சரியாக ஏற்படுவதில்லை. அவர்களுக்கு தாங்கள் சரியாக தண்ணீர் குடிக்கிறோமா என்பதை தோராயமாக அறிவதற்கான வழிமுறைகள்:
- மூன்று முதல் நான்கு மணிநேரத்திற்கு ஒரு முறையாவது சிறுநீர் கழிக்க வேண்டும்.
- காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணிக்குள் ஐந்து முதல் ஆறு தடவை சிறுநீர் கழிப்பது நல்லது.
- இரவில் ஒரு முறை சிறுநீர் கழிக்க எழுவதும் நார்மல் தான்.
- ஆறு மணிநேரத்திற்கு மேல் சிறுநீர் கழிக்காமல் இருப்பது நல்லதல்ல.
Also Read : ஒரு டம்ளர் சுடுநீரில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?
சிறுநீரின் நிறத்தை வைத்து அறிவது
சிறுநீர் சுத்த வெள்ளை நிறமாக(Clear) அல்லது வெளிர் மஞ்சள் (Pale yellow or straw coloured) நிறத்தில் இருந்தால், நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு சரி என்று தோராயமாகக் கொள்ளலாம்.
சிறுநீர், அடர் மஞ்சள் ( Dark yellow)/ பழுப்பு நிறம் ( Brown) / சிவப்பு ( Red) நிறத்தில் சென்றால் நீர்ச்சத்து குறைவாக இருக்கிறது என்று அறியலாம். சில நேரங்களில் நாம் சாப்பிடும் மாத்திரைகளின் நிறம் சிறுநீரில் வெளிப்படும். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து அதீத நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால், சிறுநீர் வெளியேறும் போது சிறுநீர் பாதையில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டு நீர்க்கடுப்பு (Dysuria) உண்டாகும். இது சிறுநீர் பாதை தொற்றுக்கு வழிவகுக்கும் (Urinary Tract Infection).

காலை எழுந்ததும் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?
இரவு பல மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் காலை எழுந்ததும் கழிக்கும் சிறுநீர், அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கலாம். அது சாதாரணமானதுதான், கவலைப்பட வேண்டாம். நல்ல நிலையில் சிறுநீரகங்கள் இயங்கும் ஒருவர், தாராளமாக அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் தண்ணீரை ஒரே நேரத்தில் காலை நேரத்தில் குடிக்கலாம். இதனால் நன்மையும் இல்லை தீமையும் இல்லை. தேவைக்கு அதிகமாக நீர் சேர்ந்தால் அதை சிறுநீரகம் தானாக வெளியேற்றி விடும் என்பதால் ஒரு லிட்டர் வரை பிரச்சனை இல்லை.

உடலில் உள்ள டாக்சின்ஸ் வெளியேற்றப்படுமா?
வளர்சிதை மாற்ற விளைவுகளால், ரத்தத்தில் அதிகமாக வெளியேற்றப்பட வேண்டிய பொருட்கள் உண்டாகினால் சிறுநீரகங்கள் தானாக சிறுநீர் உற்பத்திய அதிகரித்து அவற்றை வெளியேற்றிவிடும். உதாரணமாக ரத்தத்தில் குளுகோஸ் அளவு மிதமிஞ்சி அதிகரிக்கும்போது சிறுநீர் அதிகமாக வெளியேறும்.
இதற்கும் நீர் அருந்துவதற்கும் சம்பந்தமில்லை. நாம் எவ்வளவு நீர் அருந்த வேண்டும், எவ்வளவு சிறுநீர் வெளியேற வேண்டும் என்பதை நமது உடல் தான் நிர்வகிக்கும். வயது வந்த ஒரு ஆண் அல்லது பெண், தினசரி 2 லிட்டர் அளவு சிறுநீராக வெளியேற்றுவது சிறுநீரகக் கற்கள் தோன்றுவதை தடுக்க உதவும் என்று அறியப்படுகிறது.
நாம் பருகும் நேரடியான நீர் அன்றி, ஒருநாளில் பருகும் காபி / டீ, குழம்பு, ரசம், மோர், குடிக்கும் பழச்சாறுகள், வெள்ளரிக்காய், நீர்சத்து உள்ள பழம் போன்ற அனைத்தும் நீர் சத்தில் தான் சேரும். இதய செயலிழப்பு (Congestive Heart Failure), சிறுநீரக நோய் (Chronic Kidney Disease), கல்லீரல் நோய் (Liver Disease) இருப்பவர்கள், மருத்துவர்கள் பரிந்துரைத்த அளவிலேயே நீர் உட்கொள்ள வேண்டும்.
Also Read : மூட்டு வலியை காணாமல் போகச் செய்யும் மூலிகை பானம்! சைட் எஃபெக்ட் இல்லா மேஜிக்! Joint Pain Relief!
Summary : தாகம் என்பது உடலுக்குத் தண்ணீர் தேவை என்பதற்கான ஒரு அறிகுறியாகும். வேலை, வாழும் இடம், சூழல், தட்பவெட்ப நிலை இதைப் பொருத்து தண்ணீர் தேவையின் அளவு மாறுப்படும். தாகம் அறிந்து தண்ணீர் குடித்தால் நீரே மருத்துவமாகும்.
தாகம் தொண்டையிலும் வாயிலும்தான் ஏற்படுகிறது. அதனால் மடமடவெனத் தண்ணீரை குடிக்காமல், சிப் செய்து… சிப் பை சிப்பாக குடித்தால்தான் வாயிலும், தொண்டையிலும் உள்ள தாகம் தணியும். எனவே, தண்ணீரை அதிக நேரம் வாயில் வைத்து சுவைத்து உமிழ்நீர் கலந்து குடிப்பதே நல்லது. தாகம் என வந்துவிட்டால் உங்களது முதல் சாய்ஸ், தண்ணீராக இருக்க வேண்டும். இது இயற்கை விதி. தண்ணீர் கிடைக்காவிட்டால் இளநீர், வெள்ளரி, தர்பூசணி, சாறுள்ள கனிகளைச் சுவைக்கலாம்.
குளிர்ந்த நீர் குடிப்பதால் செரிமானம் மிகையாகப் பாதிக்கும். பற்கள் வலுவிழந்து போகும். தர்பூசணி, வெள்ளரிக்காய், போன்ற நீர் சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, உடலின் நீரேற்றத்தை மேம்படுத்த உதவும். சரியான கழிப்பறை வசதிகள் இல்லாதது மற்றும் பயணங்களின் போது சிறுநீர் வராமல் இருக்க பெண்கள் தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள். இதனால் நீர்சத்து குறைபாடு ஏற்படும்.
Image Source : Getty Images.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry