
கோடைகால கடுமையான வெப்பத்தின் காரணமாக பலருக்கும் வயிற்று பிரச்சினைகள் ஏற்படும். அவற்றில் ‘கோடைக்கால வயிற்றுப்போக்கு’ (Summer Diarrhoea) முக்கியமானது.
கிருமிகள் நேரடியாகவோ, சில நச்சுப் பொருட்களைச் சுரந்தோ சிறுகுடலையும் பெருங்குடலையும் தாக்கும்போது, அதற்கு எதிர்விளைவாகக் குடலில் அதிக அளவில் திரவம் சுரக்கிறது. இது வயிற்றுப்போக்காகக் குடலிலிருந்து வெளியேறுகிறது. அப்போது குடலில் உள்ள தண்ணீர்ச் சத்தும், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுச் சத்துகளும் வெளியேறி விடுகின்றன.
Also Read : ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கணும்? உடலுக்கு தண்ணீர் தேவையை எப்படி கண்டுபிடிப்பது தெரியுமா?
இதன் விளைவாக உடலில் கடுமையான நீரிழப்பு (Dehydration) ஏற்படுகிறது. அத்துடன், கிருமிகளால் பாதிக்கப்பட்ட குடல், உணவுச் சத்துகளைச் சரியாக உறிஞ்சத் தவறுகிறது. இதனால் நோயாளிக்கு ஊட்டச்சத்து குறைந்து, நோய் எதிர்ப்பாற்றல் குறைகிறது. இதனால் வயிற்றுப்போக்கு மேலும் தீவிரமடைகிறது.
கோடைகால வயிற்றுப்போக்கு அறிகுறிகள்
கோடைகால வயிற்றுப்போக்கின் ஆரம்பத்தில் மலம் தண்ணீர்போல போகும். அதிக தாகம் எடுக்கும், நாக்கு வறண்டுவிடும், வாய் உலர்ந்துவிடும், தோல் உலரும், கண்களுக்குக் கீழே குழி விழும். இவற்றின் தொடர்ச்சியாகச் சிறுநீரின் அளவு குறையும். நாடித்துடிப்பு பலவீனமடையும், ரத்த அழுத்தம் குறையும், கிறுகிறுப்பு, மயக்கம் வரும். கை, கால்கள் சில்லிட்டுவிடும். சிலருக்குக் காய்ச்சல், உடல்வலி, வாந்தி, வயிற்றுவலி போன்ற துணை அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளும்.

வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு முதலில் நீரிழப்பைச் சரி செய்ய வேண்டும். இதற்கு அதிக அளவில் சுத்தமான நீரை நோயாளி பருக வேண்டும். அல்லது உப்பு, சர்க்கரைக் கரைசலைப் பருக வேண்டும். இந்தக் கரைசலை வீட்டிலேயே தயாரித்துக்கொள்ள முடியும். ஐந்து நிமிடங்களுக்குக் கொதிக்க வைத்து, ஆற வைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் சர்க்கரை, 5 கிராம் உப்பு கலந்து, ஒரு மணி நேரத்துக்கு 500 மி.லி. அளவில் குடிக்கக் கொடுக்கலாம். இதுவே கடைகளில் எலெக்ட்ரால், மினரோலைட், காஸ்லைட், புரோலைட் என்ற பெயர்களில் கிடைக்கிறது. இவற்றில் ஒன்றையும் பயன்படுத்தலாம். இவை பலன் தராத நிலையில் நோயாளியை மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவருக்கு அவ்வளவாக வாந்தி இல்லை எனும் நிலைமையில், ஊட்டச்சத்தும் நீர்ச்சத்தும் குறைந்துவிடாமல் இருக்க, அரிசிக் கஞ்சி, ஜவ்வரிசிக் கஞ்சி, ஆரூட் கஞ்சி, பொட்டுக்கடலைக் கஞ்சி, இளநீர், எலுமிச்சைச் சாறு, மோர் போன்றவற்றில் ஒன்றை அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகத் தரலாம். அதிகம் காரம் உள்ள உணவு வகைகளையும், கொழுப்பு உணவையும் குறைந்தது ஒரு வாரத்துக்குத் தவிர்க்க வேண்டும்.
தடுப்பு வழிகள் என்னென்ன?
- நாம் குடிக்கப் பயன்படுத்தும் தண்ணீரைக் குறைந்தது 5 நிமிடங்களுக்குக் கொதிக்க வைத்து, ஆற வைத்துக் குடிக்க வேண்டும்.
- வீட்டில் இருக்கும் குடிநீர்த் தொட்டியில் சரியான அளவில் குளோரின் கலந்து பயன்படுத்தினால் நோய்க் கிருமிகள் சேராது.
- வீட்டில் சமையலறை சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும். சுத்தமான பாத்திரங்களில் சுகாதாரமான முறையில் உணவைச் சமைக்க வேண்டும். நன்கு வேகவைத்த உணவையே உண்ண வேண்டும்.
- கோடையில் சமைத்த உணவு வகைகள் சீக்கிரம் கெட்டுவிடும் என்பதால், சுடச்சுடச் சாப்பிட்டுவிட வேண்டும். நாள் கணக்கில் சேமித்துவைத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- உணவு வகைகளை ஈக்கள் மொய்க்காமலும், எறும்புகள் தொற்றாமலும், பல்லி / பூச்சிகள் தொட்டுவிடாமலும் மூடி பாதுகாக்க வேண்டும்.
- அசுத்தமான வெளியிடங்களிலும், சாலையோரக் கடைகளிலும், திறந்தவெளி உணவகங்களிலும் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

- வீட்டின் கழிப்பறையை சுத்தமாகப் பேண வேண்டியது மிகமிக முக்கியம். மேலும் ஒவ்வொரு முறை மலம் கழித்ததும் கைகளைச் சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்.
- வீட்டில் ஒருவருக்கு வயிற்றுப்போக்கு தீவிரமாக இருந்தால், அவரைத் தனிமைப்படுத்த வேண்டும். அல்லது மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை அளிக்க வேண்டும்.
- வீட்டில் பாதிக்கப்பட்ட நோயாளியின் மலம், வாந்தி, உடைகள், அவர் பயன்படுத்திய பாத்திரங்கள், படுக்கை விரிப்புகள் போன்ற அனைத்தையும் சலவைத்தூள் போட்டு தோய்த்து தொற்றை அகற்றுதல் மிக முக்கியமான தடுப்பு முறை.
- வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும், தெருக்களிலும் தண்ணீர் / சாக்கடை தேங்க அனுமதிக்கக் கூடாது. எந்த வகையிலும் கழிவு சேரக்கூடாது. சுகாதாரத்தைக் கடைப்பிடித்துத் தெருக்களைச் சுத்தமாக வைத்துக்கொண்டால், ஈக்கள் மொய்ப்பதைத் தடுத்துவிடலாம். இதன் மூலம் வயிற்றுப்போக்கு வருவதையும் தடுக்கலாம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry