
140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21ந் தேதி வாடிகனில் உள்ள இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 88. திங்கட்கிழமை, உள்ளூர் நேரப்படி காலை 07:35 மணிக்கு அவர் இறந்ததை வாடிகன் உறுதிப்படுத்தியது. இவர் கத்தோலிக்க திருச்சபையின் 266வது தலைவர் ஆவார்.
போப் பிரான்சிஸ் பக்கவாதத்தாலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட இதய செயலிழப்பு காரணமாகவும் உயிரிழந்தார் என்றும் வாடிகன் தெரிவித்துள்ளது. வாடிகனில் சனிக்கிழமை நடக்கும் இறுதி சடங்கு நிகழ்வுகளுக்குப் பிறகு, போப் பிரான்சிசின் உடல் அவரது விருப்பப்படி வாடிகனுக்கு வெளியே ரோம் நகரின் சான்டா மரியா மாகியோர் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட உள்ளது. மறைந்த போப் பிரான்சிஸ், தனது இறுதி செய்தியாக ஈஸ்டர் அறிக்கையில், இஸ்ரேல்-ஹமாஸ், உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தி இருந்தார்.

போப் பெனடிக்ட் XVI பதவி விலகிய பின்னர், 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த, அர்ஜென்டினாவில் பிறந்த கார்டினல் ஹோர்ஹே மரியோ பர்கோலியோ எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போப் பிரான்சிஸ் கர்த்தரின் இல்லத்தை அடைந்த நிலையில், தற்போது ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். பல நூறாண்டு காலமாக அமலில் இருக்கும் மிகவும் ரகசியமான தேர்தல் நடைமுறையின் கீழ், கார்டினல்கள் என்று அழைக்கப்படும் மூத்த மதகுருமார்கள், புதிய போப்பை தேர்வு செய்வார்கள்.
போப்பின் பணி என்ன?
ரோமன் கத்தோலிக்கர்கள் போப்-ஐ இயேசு கிறிஸ்துவின் நேரடி வாரிசாகக் கருதுகின்றனர். கிறிஸ்துவின் ஆரம்பகால சீடர்களான அப்போஸ்தலர்களில் முதன்மையானவராக இருந்த செயிண்ட் பீட்டரின் உயிருள்ள வாரிசாக அவர் கருதப்படுகிறார். இது அவருக்கு கத்தோலிக்க திருச்சபையின் மீது முழுமையான மற்றும் தடையற்ற அதிகாரத்தை அளிப்பதுடன், உலகம் முழுதும் பரவியுள்ள சுமார் 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு அவர் ஒரு முக்கிய அதிகார மையமாக திகழ்வார்.
உலகெங்கிலும் உள்ள மொத்த கிறிஸ்தவர்களில் பாதி பேர் ரோமன் கத்தோலிக்கர்கள். புராட்டஸ்டன்ட்டுகள் மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் உள்பட பிற பிரிவுகள் போப்பின் அதிகாரத்தை அங்கீகரிக்கவில்லை. போப் உலகின் மிகச்சிறிய நாடான வாடிகனில் வசிக்கிறார். இந்நாடு இத்தாலிக்கு அருகில் இருக்கின்றது. போப்புக்கு ஊதியம் எதுவும் இல்லை. ஆனால் அவரது பயணச் செலவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அனைத்தையும் வாடிகன் செய்கின்றது.
போப் இறந்த பிறகு என்ன நடக்கும்?
போப்பின் இறுதிச் சடங்கு பாரம்பரிய முறையில் மிகப்பெரிய ஒரு நிகழ்வாக நடக்கும். ஆனால் தற்போது மறைந்த போப் பிரான்சிஸ் சமீபத்தில் இறுதிச் சடங்கு நடைமுறையை எளிமையாக மாற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார். கட்டஃபால்க் என்று அழைக்கப்படும் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் உள்ள ஒரு உயரமான மேடையில் பொதுமக்கள் பார்வைக்காக போப்பின் உடலை வைக்கும் பாரம்பரியத்தையும் அவர் ரத்து செய்தார்.
அதற்கு பதிலாக, அவரது உடல் சவப்பெட்டியிலேயே வைக்கப்பட்டு, மூடி திறக்கப்பட்ட நிலையில் துக்கம் அனுசரிப்பவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு முன்பு போப் பதவி வகித்தவர்கள், சைப்ரஸ், புளியமரம் மற்றும் ஓக் மரங்களால் செய்யப்பட்ட மூன்று அடுக்கு சவப்பெட்டிகளில் அடக்கம் செய்யப்பட்டனர். ஆனால் போப் பிரான்சிஸ், தன்னை புதைக்க துத்தநாகம் பூசப்பட்ட எளிய மர சவப்பெட்டியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்படும் முதல் போப், தற்போது உயிரிழந்த போப் பிரான்சிஸ் ஆவார். (இது கடந்த நூறு ஆண்டுகளில் நிகழ்ந்ததில்லை). ரோம் நகரில் உள்ள நான்கு பெரிய போப் பசிலிக்காக்களில் ஒன்றான செயின்ட் மேரி மேஜர் பசிலிக்காவில் அவர் நல்லடக்கம் செய்யப்பட உள்ளார். பசிலிக்கா என்பது வாடிகனால் சிறப்பு முக்கியத்துவமும், சலுகைகளும் வழங்கப்பட்ட ஒரு தேவாலயமாகும்.
யார் போப் ஆக முடியும்? அவரை யார் தேர்ந்தெடுப்பார்கள்?
போப் ஆக இருப்பவர் இறந்த பிறகு அல்லது அல்லது அவர் ராஜினாமா செய்த பிறகு (2013 ஆம் ஆண்டு போப் பெனடிக்ட் XVI செய்தது போல) ஒரு புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் உச்சத் தலைவராகிறார் (the Supreme Pontiff). ஞானஸ்நானம் பெற்ற கத்தோலிக்க பிரிவை சேர்ந்த எந்த ஒரு ஆண் வேண்டுமானாலும் போப்பாக தேர்வு செய்யப்படலாம்.

இருப்பினும், கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல் பொறுப்பில் உள்ளவர்களே இந்த பதவியை வகித்துள்ளனர். புதிய போப்பையும் கார்டினல்களே தேர்ந்தெடுக்கின்றனர். 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத தரவுகளின்படி, உலகெங்கிலும் 252 கார்டினல்கள் உள்ளனர். அவர்கள் பொதுவாக பிஷப்புகளாகவும் உள்ளனர். 80 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
இந்த “கார்டினல் வாக்காளர்களின்” எண்ணிக்கை பொதுவாக 120 ஆக மட்டுமே இருக்கும், ஆனால் தற்போது புதிய போப்பை தேர்ந்தெடுக்கத் தகுதியுடையவர்கள் 138 பேர் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 4 கார்டினல்களும் போப்பை தேர்ந்தெடுக்க வாக்களிக்க உள்ளனர். கோவாவைச் சேர்ந்த டாமன் பேராயர் பிலிப் நேரி பெராவ், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பேராயர் பசேலியாஸ் கிளமீஸ், ஐதராபாத்தைச் சேர்ந்த பேராயர் ஆண்டனி போலா, கேரளாவின் சிரோ – மலபார் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல் ஜார்ஜ் கூவக்காடு ஆகிய இந்த நால்வரும் போப் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கார்டினல்கள் புதிய போப்பை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறார்கள்?
புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும் போது, இதற்கான மாநாட்டிற்காக அனைத்து கார்டினல்களும் ரோமில் உள்ள வாடிகனுக்கு வரவழைக்கப்படுகிறார்கள். இது சுமார் 800 ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் ஒரு நடைமுறை ஆகும்.
மாநாட்டின் முதல் நாளில், அவர்கள் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் ஒரு திருப்பலி நடத்துகிறார்கள். பின்னர் அவர்கள் வாடிகனின் சிஸ்டைன் தேவாலயத்தில் கூடுகிறார்கள். அங்கு, “எக்ஸ்ட்ரா ஓம்னெஸ்” (extra omnes) என்ற கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. இதன் லத்தீன் பொருள் “அனைவரும் வெளியே” என்பதாகும்.
அதன் பிறகு, புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் வரை அனைத்து கார்டினல்களும் வாடிகனுக்கு உள்ளேயே தங்க வைக்கப்படுவார்கள். இரண்டாவது நாளிலிருந்து, போப் பதவிக்கு ஒருவர் தேர்வு செய்யப்படும் வரை அவர்கள் , ஒவ்வொரு நாள் காலையில் இரண்டு வாக்குகளும், ஒவ்வொரு நாள் பிற்பகலில் இரண்டு வாக்குகளையும் தேவாலயத்தில் பதிவு செய்கின்றனர்.

வாக்கெடுப்பில், ஒவ்வொரு கார்டினல் வாக்காளரும் “Eligio in Summum Pontificem” என்ற சொற்களுக்குக் கீழே, தாம் விரும்பும் வேட்பாளரின் பெயரை வாக்குச் சீட்டுகளில் எழுதுகிறார்கள். இது லத்தீன் மொழிச் சொல்லாகும். இதற்கு “நான் போப், உச்சத் தலைவரை தேர்ந்தெடுக்கிறேன்” என்று பொருள். வாக்குச்சீட்டுகளை ரகசியமாக வைத்திருக்க, கார்டினல்கள் தங்கள் வழக்கமான கையெழுத்து பாணியைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறப்படுகிறது.
இரண்டாம் நாள் முடிவிலும் தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை என்றால், மூன்றாம் நாள் முழுவதும் பிரார்த்தனை மற்றும் தியானத்திற்காக ஒதுக்கப்படும்; அன்று வாக்குப்பதிவு எதுவும் நடைபெறாது. அதன் பிறகு வாக்குப்பதிவு வழக்கம் போல் தொடரும். ஒரு வேட்பாளர் போப்பாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு கார்டினல் வாக்காளர்களின் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் தேவை. புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் செயல்முறை பல நாட்கள் ஆகலாம், சில சமயங்களில் வாரங்கள் கூட ஆகலாம்.
போப்பை தேர்ந்து எடுக்கும் மாநாட்டில் என்ன நடக்கிறது?
இந்த மாநாடு மிகவும் ரகசியமாக நடத்தப்படுகிறது. கார்டினல்கள் வாடிகனை விட்டு வெளியேறக்கூடாது, வானொலியைக் கேட்கவோ, அவர்கள் தொலைக்காட்சி பார்க்கவோ, செய்தித்தாள்களைப் படிக்கவோ அல்லது வெளி உலகில் உள்ள எவரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவோ கூடாது.
கார்டினல்களின் குடியிருப்புகளுக்குள் பராமரிப்பு ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் அவர்களின் பாவ மன்னிப்பை கேட்கும் பாதிரியார்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் அனைவரும் ரகசியமாக இருக்க உறுதிமொழி எடுக்கின்றனர்.
போப் பதவிக்கான வேட்பாளர்கள் யாரும் வெளிப்படையாக பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. கார்டினல்கள் பரிசுத்த ஆவியால் (Holy Spirit) வழிநடத்தப்படுகிறார்கள் என்று வாடிகன் கூறுகிறது. ஒரு வேட்பாளருக்காக ஆதரவு திரட்டும் செயல்முறை மிகவும் அரசியல்ரீதியானது என்று கருதப்படுகிறது. இந்த மாநாட்டின்போது, தினமும் இருமுறை, பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் எரிக்கப்படுகின்றன. வாடிகனுக்கு வெளியே இருப்பவர்கள் சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெளிவரும் புகையை காணலாம்.

கருப்புப் புகையை உருவாக்க, வாக்குச்சீட்டுகளை எரிக்கும் முன் அதில் பொட்டாசியம் பெர்க்ளோரேட் மற்றும் ஆந்திராசீன் தடவப்படுகிறது. வெள்ளைப்புகையை உருவாக்க, வாக்குச்சீட்டுகளை எரிக்கும் முன் பொட்டாசியம் க்ளோரேட், லேக்டோஸ் மற்றும் ரோஸின் தடவப்படுகிறது. கருப்பு புகை என்பது புதிய போப் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை குறிக்கிறது; வெள்ளைப் புகை என்பது புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறிக்கிறது.
ஒரு போப் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன நடக்கும்?
வாக்கெடுப்பில் வெற்றி பெற்றவுடன், புதிய போப்பிடம் “நீங்கள் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்கிறீர்களா?” என்று கேட்கப்படும். ஆமோதித்த பின்னர் போப்பாக தனக்கு புதிய பெயர் ஒன்றை அவர் தேர்வு செய்வார். பிறகு அவருக்குரிய அதிகாரப்பூர்வ ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன.
கார்டினல்கள் அவருக்கு மரியாதை செலுத்தி, தங்கள் கீழ்ப்படிதலை உறுதி செய்கின்றனர். பின்னர் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவுக்கு வெளியே கூடியிருக்கும் மக்களுக்காக ஒரு அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதில் “habemus papam” என்ற சொற்கள் இடம்பெறும். இது லத்தீன் மொழிச் சொல், இதற்கு “நமக்கு ஒரு போப் இருக்கிறார்” என்று பொருள்.
புதிய போப்பின் பெயர் அறிவிக்கப்படுகிறது, மேலும் அவர் மூத்த கார்டினலால் பொது வெளியில் அறிமுகப்படுத்துகிறார். புதிய போப் சிறு உரையாற்றி மற்றும் பாரம்பரிய ஆசீர்வாதமான “urbi et orbi””-யை வழங்குகிறார். இதன் லத்தீன் பொருள் “நகரத்திற்கும் உலகிற்கும்” என்பதாகும். பின்னர், மாநாட்டில் ஒவ்வொரு சுற்று வாக்கெடுப்பின் முடிவுகளும் போப்பிற்குக் காட்டப்படும். பின்னர் அவை சீல் வைக்கப்பட்டு வாடிகன் ஆவணக் காப்பகத்தில் வைக்கப்படுகின்றன, இதனை போப்பின் உத்தரவின் பேரில் மட்டுமே திறக்க முடியும்.

புதிய போப்பாக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளவர்களாக 9 கார்டினல்களின் பெயர்கள் அடிபடுகின்றன. இத்தாலியைச் சேர்ந்த 70 வயதான பியட்ரோ பரோலின், பிலிப்பைன்சைச் சேர்ந்த 67 வயதான லூடிஸ் அன்டோனியோ டாக்லே, கானாவைச் சேர்ந்த 76 வயதான பீட்டர் டர்க்சன், ஹங்கேரியைச் சேர்ந்த 72 வயதான பீட்டர் எர்டோ, இத்தாலியைச் சேர்ந்த 69 வயதான மேட்டோ சூப்பி, போர்ச்சுகலைச் சேர்ந்த 59 வயதான ஜோஸ் டொலன்டினோ, மால்டாவைச் சேர்ந்த 68 வயதான மரியோ கிரிச், இத்தாலியைச் சேர்ந்த 60 வயதான பிரயர்பட்டிஸ்டா பிசாபல்லா, கயன்னாவைச் சேர்ந்த 79 வயதான ராபர்ட் சாரா ஆகியோர் புதிய போப்புக்கான ரேசில் உள்ளனர்.
Image Source : Getty Images. With Input BBC.
Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &
  Tamilnadu  &  Pondicherry
  Pondicherry
