
சைவ மீன் குழம்பு சாப்பிட்டதுண்டா? அதென்ன சைவ மீன் குழம்பு என்று யோசிக்கிறீர்களா? செட்டிநாடு உணவு வகைகளில் புகழ்பெற்ற ”சைவ மீன்குழம்பு” செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
- கடலைமாவு – 1/2 கப்.
- வாழைக்காய், பெரிய சைஸ்.
- தக்காளி – ஒன்று.
- எண்ணெய் – 20 மில்லி.
- சின்ன வெங்காயம் 15.
- பூண்டு 10 பற்கள்.
- இளம் கறிவேப்பிலை.
- கொத்துமல்லித்தழை – சிறிதளவு.
- புளி – நெல்லிக்காய் அளவு.
- உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் – தலா 1 டீஸ்பூன்.
- மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்.
அரைப்பதற்கு தேவையான பொருள்கள்:
- வரமிளகாய் – 4
- சோம்பு – 1/2 டீஸ்பூன்
- சீரகம், மிளகு, உப்பு – தலா 1/4 டீஸ்பூன்
- தேங்காய் கால் மூடி
- சின்ன வெங்காயம் – 2
- பூண்டு – 1 பல்.
தாளிப்பதற்கு தேவையான பொருள்கள்:
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு, உளுந்து, வெந்தயம் -தலா 1/2 டீஸ்பூன்
- பெருங்காயம் – சிறிய துண்டு
- கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை:
வாழைக்காயின் தோலைச் சீவி, குச்சிக் குச்சியாக நீளமாகச் சீவவும். கடலைமாவில் 1/4 டீஸ்பூன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, தோசைமாவுப் பக்குவத்தில் கரைக்கவும். இந்த மாவை, சூடான தோசைக்கல்லில் தோசையாக ஊற்றி, நடுவில் 2 வாழைக்காய்த் துண்டுகளை 2 இன்ச் இடைவெளியில் போட்டு, மூன்றாகவோ நான்காகவோ மடித்து மடித்து எடுக்கவும். இதை, மீன் துண்டுகள்போல வெட்டி, எண்ணெய்யில் பொரித்துவைக்கவும்.
சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளியைச் சுத்தம்செய்து, நறுக்கி வைக்கவும். புளியை 2 கப் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்யைக் காயவைத்து, கடுகு, உளுந்து, வெந்தயம் தாளித்து, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து, வதக்கவும்.
இதில், கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றவும். 2 கொதிகள் வந்ததும், அரைத்து வைத்துள்ளவற்றை 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, கொதிக்கும் குழம்பில் ஊற்றவும். நன்றாகக் கொதிவரத் துவங்கியதும், பொரித்துவைத்த வாழைத் துண்டுகளைக் குழம்பில் சேர்க்கவும். தற்போது ரொம்பவும் கிளறாமல், மெதுவாகக் கிளறி இறக்கினால் அட்டகாசமான சைவ மீன்குழம்பு தயார்.
Courtesy – Kumudam Snegithi, Mr. Muthu Sabarethinam.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry