
மத்தியப்பிரதேச அரசின் கலாச்சாரத்துறை ஆதிசங்கரரின் அத்வைத கருத்துக்களை உலக அளவில் எடுத்துச் செல்ல ஒரு பெரு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 26 முறை, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பத்து நாள் புத்தாக்க முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.
அத்வைதம் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வது அவசியம். அத்வைதம் என்றால் ‘இரண்டல்ல’ என்று பொருள். ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறுபட்டவை அல்ல, அவை ஒன்றே. அத்வைதம் (அ + துவைதம், அத்துவிதம்) – அதாவது இரண்டற்ற நிலை. சீவன் (ஜீவாத்மா) என்பதும், இறைவன் (பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும், சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது என்றும் கூறும் தத்துவம்தான் ஆதிசங்கரர் தோற்றுவித்த ‘அத்வைதம்’.

“ஸத்யம் ஞானம் அன்வ்யதம் பிரம்மம்” (Satyem Jnanam Anvyatham Brahma) என்ற ஸ்லோகம் மூலம் சங்கரர் இதனை விளக்குகிறார். அதாவது, பிரம்மம் தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையான உண்மை, அது ஞானம் மூலம் அறியப்படக்கூடியது, மேலும் அது இரண்டற்றதாக, தனித்தன்மையாக உள்ளது.
ஆதிசங்கரரின் அத்வைத கருத்துகளை மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் மத்தியப்பிரதேச அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து 40 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஆதிசங்கரரின் அத்வைத கருத்துக்களை போதிப்பதோடு மட்டுமல்லாமல், இந்திய கலாச்சாரம், பண்பாடுகளையும் பயிற்றுவிக்கிறது.

‘Advaita Awakening Youth Retreat’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பயிற்சி முகாமானது, இளைஞர்கள் அத்வைத வேதாந்தத்தின் காலத்தால் அழியாத ஞானத்தில் மூழ்கி, அதன் வளமான கலாச்சாரத்தில் திளைத்து மகிழ வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது. ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை மத்தியப்பிரதேச மாநிலம் கங்கிரா மாவட்டம், தர்மசாலா அருகில் உள்ள சித்தபெரி என்னும் ஊரில், சின்மய தபோவனத்தில், சுவாமி மித்ரானந்த சரஸ்வதி தலைமையில் இருபத்தி ஆறாவது முகாம் நடைபெற்றது.

அனைத்து மாநிலங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட 45 இளைஞர்கள் பயிற்சி முகாமில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ஆதிசங்கரரின் கடைசி படைப்பான சாதனா பஞ்சகம் பயிற்றுவிக்கப்பட்டது. அத்வைத கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள், அத்வைத தூதர்களாக செயல்படுவதாக தங்களின் விருப்பத்தினை தெரிவித்துக் கொண்டனர். அதன்படி, தமிழகத்தின் அத்வைத தூதராக இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த இரா. மணிகண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அனுபவம் வாய்ந்த சந்நியாசிகள் மற்றும் ஆச்சாரியர்களால் வழிநடத்தப்படும் இந்த முகாம்கள், ஆதிசங்கரரின் போதனைகளை ஆராய்வதற்கும், இளைஞர்கள் தங்கள் உள்ளார்ந்த ஆன்மீகத்தை விழித்தெழச் செய்வதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகின்றன. பயிற்சி முகாம் மூலம் வாழ்வை மாற்றும் அனுபவத்தை பெற முடிந்ததாக இரா. மணிகண்டன் கூறியுள்ளார்.

பயிற்சி முகாமில் ஆதி சங்கரரின் கருத்துகள் ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கப்பட்டதால் சிரமமின்றி கற்றுக் கொள்ள முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிற மாநிலங்களில் இருந்து வந்த இளைஞர்களுடன் அத்வைத கருத்துக்களை பரிமாறிக் கொண்டதுடன், அவர்களது ஆன்மிக வழிபாட்டு முறைகள், கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த பரிவர்த்தனையை மேற்கொள்ள முடிந்தது. இதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த மத்திய பிரதேச அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஆதி ஆச்சாரியா் சங்கரரின் போதனைகளை ஆராய்வதற்கும், அவர்களின் உள்ளார்ந்த ஆன்மீகத்தை விழித்தெழச் செய்வதற்கும் இந்த பயிற்சி முகாம் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது என்பதில் சந்தேகமில்லை எனவும் தமிழகத்துக்கான அத்வைத தூதர் இரா. மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
நமது நாடு ஞானிகள், அறிஞர்கள், துறவிகள் நிறைந்த பூமி. நமது சமூகம் ஒரு கடினமான கட்டத்தை கடந்து செல்லும்போதெல்லாம், யாராவது ஒரு துறவி அல்லது ஞானி இந்த மண்ணில் தோன்றி சமூகத்திற்கு ஒரு புதிய திசையைக் காட்டுகிறார் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். அதை உண்மையாக்கும் விதமாக, அத்வைதம் தொடர்பான புத்தாக்க பயிற்சி முகாமை சுவாமி மித்ரானந்த சரஸ்வதி மூலம் மத்தியப் பிரதேச அரசு பயிற்றுவித்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry