
“ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர, அவசரமாக இந்த வழக்கை முடிக்க திமுக அரசு முனைந்தது ஏன்? SIRஐ காப்பாற்றியது யார் ? இந்த கேள்விகள், கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது.” என்று முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் இன்று காலை தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எந்தவித தண்டனைக் குறைப்புமின்றி ஞானசேகரன் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.
Also Read : இளைஞர்களே உஷார்! – தமிழகத்தில் அதிகரிக்கும் வேலையின்மை: ஈபிஎஸ் அம்பலப்படுத்திய அதிர்ச்சி ரிப்போர்ட்!
அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக. பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம். அதனால் தான் #யார்_அந்த_SIR என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம்.
FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே அந்த SIR Ruled-out செய்யப்பட்டது ஏன்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு? SIRஐ காப்பாற்றியது யார் ? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது!.” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம்.
இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.
அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம்…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) June 2, 2025
முன்னதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி இரவு மாணவி ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் பாலியல் கொடுமை செய்தார். இதுகுறித்து மறுநாள் கோட்டூர்புரம் போலீசில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.
ஞானசேகரன் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் வரலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ஐ.பி.எஸ். அதிகாரிகள் சினேகபிரியா, பிருந்தா, ஐமான் ஜமால் ஆகியோர் கொண்ட சிறப்பு புலன் விசாரணைக்குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில் ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். பின்னர் இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டுக்கு மார்ச் 7-ந் தேதி மாற்றப்பட்டது.

இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை ஏப்ரல் 23-ந் தேதி முதல் தொடங்கியது. தினந்தோறும் என்ற அடிப்படையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. 75 சாட்சி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 29 பேர் சாட்சியம் அளித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 20-ந் தேதி முடிவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை 28-ந் தேதி வழங்குவதாக நீதிபதி ராஜலட்சுமி அறிவித்து இருந்தார்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கடந்த 28-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும் அவருக்கு என்ன தண்டனை வழங்குவது? என்பது குறித்து வருகிற ஜூன் 2-ந் தேதி அறிவிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
அதன்படி, இந்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார். மேலும் ஞானசேகரனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தும், 30 ஆண்டுகள் எந்த தண்டனையும் குறைப்பும் இன்றி ஆயுள் தண்டனையை அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஞானசேகரன் ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry