
ஈரான் மீதான இஸ்ரேலின் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கை, ஈரானின் அணுசக்தி திட்டங்கள், அணுசக்தி நிலையங்கள் மற்றும் விஞ்ஞானிகள், அதன் இராணுவத் தலைமையை குறிவைத்துள்ளது. ஈரானில் இதுவரை சுமார் 650 பேர் பலியான நிலையில், 2000க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
20 அணு சக்தி தளங்கள், 16 எண்ணெய் வயல்கள் இஸ்ரேலால் அழிக்கப்பட்டுள்ளன. “முதலில் தாக்குதல்” (First Strike) உத்தி, ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் திறனை முன்கூட்டியே அழிப்பதை நோக்கமாகக் கொண்டது என இஸ்ரேல் கூறினாலும், இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Also Read : இஸ்ரேல்-ஈரான் மோதல்: உலகளாவிய அணு பேரழிவுக்கு வழிவகுக்கும் புதிய போர் முறை!
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் அவசரமாகக் கூடி விவாதித்தது. அங்கு, ஐ.நா.வுக்கான இஸ்ரேலிய தூதர் டேனி டானன், இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை “முன்கூட்டிய தடுப்புத் தாக்குதல்” என்றும், “துல்லியமான நோக்கம் கொண்ட மற்றும் மிக மேம்பட்ட உளவுத்துறை தகவல்களோடு” மேற்கொள்ளப்பட்டதாகவும் வாதிட்டார்.
இஸ்ரேலின் நோக்கமாக அவர் குறிப்பிட்டது:
* ஈரானின் அணுசக்தி திட்டத்தை முடக்குவது.
* அதன் பயங்கரவாதம் மற்றும் ஆக்கிரமிப்பின் வடிவமைப்பாளர்களை ஒழிப்பது.
* இஸ்ரேல் நாட்டை அழிப்போம் என்ற ஈரானின் தொடர் சூளுரையை தடுப்பது.
சரி, சர்வதேச சட்டம் தற்காப்பு நடவடிக்கை பற்றி என்ன சொல்கிறது? இஸ்ரேலின் இந்தச் செயல்கள் சர்வதேச சட்டப்படி, சட்டவிரோதமா? இல்லையா?
ஐ.நா. சாசனம் பிரிவு 2.4:
* எந்த நாடும் மற்றொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக படைபலத்தை பயன்படுத்தக் கூடாது.
* இரண்டு விலக்குகள் மட்டும்:
1. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அனுமதி
2. தற்காப்பு நடவடிக்கை (பிரிவு 51 – தனிநபர் அல்லது கூட்டுத் தற்காப்புக்கான உள்ளார்ந்த உரிமை)
தற்காப்பு நடவடிக்கை என்றால் என்ன?
* ஒரு நாடு மீது நேரடி ஆயுதத் தாக்குதல் நடந்தால் மட்டும் முன்கூட்டிய தற்காப்பு (anticipatory self-defence) நடவடிக்கை சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது.
* 9/11 தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்களுக்கும் தற்காப்பு உரிமை நீட்டிக்கப்பட்டது.

2002 இல், அமெரிக்கா தனது தேசிய பாதுகாப்பு திட்டத்தில் “தடுப்பு கோட்பாடு” (pre-emptive doctrine) ஒன்றை அறிமுகப்படுத்தியது. இது, பயங்கரவாதம் மற்றும் பேரழிவு ஆயுதங்கள் போன்ற புதிய அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் நிகழ்வதற்கு முன்பே அவற்றைத் தடுக்க படைபலத்தைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தியது.
ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் உட்பட விமர்சகர்கள், தடுப்புத் தற்காப்பு என்ற கருத்தை நிராகரிக்கின்றனர். இது ஊகத்தின் அடிப்படையிலான உளவுத் தகவல்களின்படி நாடுகள் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட அனுமதிக்கும் என்று எச்சரிக்கின்றனர்.
தடுப்பு இராணுவ நடவடிக்கைக்கு சரியான காரணங்கள், அவற்றை நியாயப்படுத்த நல்ல ஆதாரங்கள் ஆகியவை இருந்தால், அவை பாதுகாப்பு கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அது விரும்பினால் அத்தகைய நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கலாம். அவ்வாறு செய்யவில்லை என்றால், வரையறையின்படி, சமாதானம், பேச்சுவார்த்தை, தடுப்பு மற்றும் கட்டுப்பாடு போன்ற பிற உத்திகளைப் பின்பற்றுவதற்கு நேரம் இருக்கும் – மற்றும் இராணுவ விருப்பத்தை மீண்டும் பரிசீலிக்கலாம். இதுதான் ஈரானைத் தாக்குவதற்கு முன் இஸ்ரேல் செய்யத் தவறியது.

வரலாற்றிலிருந்து பாடங்கள்:
ஈரானின் அணுசக்தி திட்டத்தை சேதப்படுத்துவதும், தமக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தப்படக்கூடும் என்று கூறி, ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதைத் தடுப்பதான் நோக்கம் என இஸ்ரேல் கூறுகிறது. தற்போது, ஈரானிடம் அணு ஆயுதம் இல்லாத நிலையில், எதிர்கால அச்சுறுத்தல் எனக் கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
1981 இல், பாக்தாத்தின் புறநகர்ப் பகுதியில் கட்டுமானத்தில் இருந்த ஈராக்கின் ஒசிராக் அணு உலை மீது இஸ்ரேல் குண்டு வீசியது. அணு ஆயுதம் கொண்ட ஈராக் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று இஸ்ரேல் கூறியது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இந்தத் தாக்குதலைக் கண்டித்தது.
சர்வதேச சட்டம் தற்போதுள்ள நிலையில், ஆயுதத் தாக்குதல் உடனடியானதாகவும், தவிர்க்க முடியாததாகவும் இல்லாவிட்டால், அத்தகைய தாக்குதல்கள் சட்டவிரோதமாகக் கருதப்படும் என்கிறது. அச்சுறுத்துவதாக கருதப்படும் தாக்குதலைத் தடுக்க, ஆயுதமற்ற வழிகளைப் பயன்படுத்த இன்னும் நேரமும், வாய்ப்பும் இருக்கும்போது இஸ்ரேல் தற்காப்புக்காகச் செயல்பட வேண்டிய அவசியமில்லை.
ராஜதந்திர வழிகள், பொருளாதாரத் தடைகள், மற்றும் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) மூலம் ஈரானின் அணுசக்தி திட்டத்தைக் கண்காணிப்பது – ஆகியவைதான் ஈரானின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள சட்டபூர்வமான வழிமுறைகளாகும்.

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாத்தல்:
இஸ்ரேலின் தடுப்பு தாக்குதல்கள் (Preemptive Strikes) போரின் விதிகளை மாற்றுகின்றன. முன்கூட்டிய தற்காப்பு சட்டப்பூர்வமானதாக இல்லாத நிலையில், மிகவும் சர்ச்சைக்குரியதாகவும் உள்ளது. ஆகவே, இஸ்ரேல் மேற்கொண்ட இந்த “முதலில் தாக்குதல்” (First Strike) உத்தி, சர்வதேச சட்டப்படி நியாயமானதா என்ற கேள்விக்கு, “இல்லை” என்றே பதில் சொல்ல வேண்டும்.
சர்வதேச சட்ட வல்லுநர் மார்கோ மிலானோவிச் கூற்றுப்படி: “முன்கூட்டிய தற்காப்பில் செயல்படுவதாக கூறும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை, அடிப்படையிலேயே நிராகரிக்கப்பட வேண்டும். இந்த சட்ட வரம்புகளைப் பாதுகாப்பது, கட்டுப்பாடற்ற ஆக்கிரமிப்பைத் தவிர்ப்பதற்கும், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கும் அவசியம்.
இஸ்ரேல் சற்றேறக்குறைய 20,767 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. ஆனால் ஈரான் 16,48,946 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலானது. தமிழ்நாட்டின் பரப்பளவு 1,30,058 என்ற நிலையில், தமிழ்நாட்டை விட பரப்பளவில் சிறிய நாடுதான் இஸ்ரேல் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &
  Tamilnadu  &  Pondicherry
  Pondicherry
