
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். இந்தக் கொலைக்கு, காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும்.” என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை. ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல். இதனை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வந்து விசாரிக்க வேண்டும்.
திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக… pic.twitter.com/G69I2ytIMb
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) July 1, 2025
இந்த நிலையில், அஜித்குமார் உயிரிழந்ததற்கு காரணம் “வலிப்பு” என FIR பதிவு செய்துள்ளது ஸ்டாலின் அரசின் காவல்துறை. “Deja Vu” எல்லாம் இல்லை- சென்னையில் விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது ஸ்டாலின் எந்த பச்சைப்பொய்யை சட்டப்பேரவையில் கூச்சமின்றி சொன்னாரோ, அதே பொய்யை அப்படியே அஜித்குமாருக்கு மீண்டும் சொல்கிறது ஸ்டாலினின் காவல்துறை.
நீங்கள் இப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்வீர்கள் எனத் தெரிந்து தான், எனது அறிவுறுத்தலின்படி, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் #JusticeForAjithkumar பதாகைகளை ஏந்தி, நீதிக்கான குரலாக ஒலித்தனர். நாடு முழுக்க #JusticeForAjithkumar #NationWithAjith என பெரும் அதிர்வலைகளை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய முதல்வர் ஸ்டாலின் எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறார்?
“ஆய்வுக் கூட்டம் நடத்துகிறோம்; CBCID-க்கு மாற்றுகிறோம்” என்ற உங்கள் நாடகங்களை சில ஊடகங்கள் நம்பலாம். மக்களும் சரி, நாங்களும் சரி- துளி கூட நம்பவில்லை! முதல்வரின் தறிகெட்ட ஆட்சியில் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள். போலீஸின் போலி FIR மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை CBI-க்கு மாற்ற வேண்டும். இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும். வீடியோ ஷூட் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் ஸ்டாலின் அவர்களே? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read : 25வது லாக்அப் மரணம் – திமுக அரசின் வெற்றிக் குறியீடா? கோவில் காவலாளியின் கொடூர மரணம், நீதிக்கு சவாலா?
இதனிடையே, போலீஸ் விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. “சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் மரணம் வழக்கு கு.எண்:303/2025 கொலை வழக்காக மாற்றப்பட்டு கொலை குற்றச்சாட்டில் தொடர்புடைய 5 குற்றவாளிகளை(தனிப்படை காவலர்கள்) கைது செய்து 15.07.2025 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வழக்கு மேலும் விசாரணைக்காக சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை பணியிடைநீக்கம் செய்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
யாரை காப்பாற்ற முயற்சி? – உண்மையை சொல்ல தமிழக அரசு மறுக்கிறது : ஐகோர்ட்
இதுதொடர்பாக அதிமுக வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரியா கிளீட், தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காளிப்படை ஏன் பணியிடை நீக்கம் செய்யவில்லை, யாரை காப்பாற்ற முயற்சி நடக்கிறது என நீதிபதிகள் வினவியுள்ளனர். மேலும், நகை காணாமல் போன வழக்கில் ஏன் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யவில்லை, யாருடைய உத்தரவின் பேரில் விசாரணையானது சிறப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டது, சிறப்பு படையினர் தாங்களாகவே வழக்கை கையில் எடுத்து விசாரிக்கலாமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மட்டுமல்லாமல், எஸ்பி ஆஷிஷ் ராவத்தை அவசரமாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது ஏன், உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும் என உண்மையை மறைக்க கூடாது, சமூக வலைதளங்களில் வந்த தகவலை பார்த்து 2 மணி நேரத்தில் தனிப்படை விசாரணையை தொடங்கியதா, போலீசார் மாமூல் வாங்கும் ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உள்ளனவே, 2 மணி நேரத்தில் விசாரிப்பீர்களா?, அடிப்பதற்கு காவல்துறை எதற்கு, புலனாய்வு செய்வதற்குதான் காவல்துறை. முழு உண்மையையும் சொல்ல தமிழக அரசு மறுக்கிறது.
சிசிடிவி காட்சிகளில் இருந்து மறைக்க, வெளியிடங்களுக்கு கொண்டு சென்று இளைஞர் அஜித்குமாரை போலீஸ் அடித்து துன்புறுத்தியதா?, 2 நாட்களாக வேறு வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விசாரிக்கும் அதிகாரத்தை சிறப்பு படைக்கு கொடுத்தது யார்?, காவல்துறை, நீதித்துறையை சேர்ந்தவரின் குடும்பத்தை சார்ந்த ஒருவரை அடித்து கொலை செய்தாலும் போலீசார் இப்படித்தான் நடந்துகொள்வார்களா? உயர் அதிகாரிகளின் சட்டவிரோத கட்டளைக்கு போலீசார் கீழ்படிய வேண்டிய அவசியமில்லை இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry