
மனித வாழ்வின் நீட்சி என்பது உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களை கவர்ந்த ஒரு கனவு. கடந்த சில தசாப்தங்களில், கலோரி குறைப்பு என்பது நீண்ட ஆயுளுக்கான முக்கிய வழி என்று அறிவியல் உலகம் கருதி வந்தது.
எலிகள், குரங்குகள், புழுக்கள் போன்ற விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள், குறைந்த கலோரி கொண்ட உணவு அவர்களின் ஆயுளை அதிகரிக்கிறது என்பதை நிரூபித்தன. ஆனால், சமீபத்திய ஆராய்ச்சிகள் உணவின் கலோரி மட்டுமல்ல, அதன் உள்ளடக்கமும், குறிப்பாக புரதத்தின் தன்மையும், மிக முக்கியமானது என்பதை வெளிப்படுத்துகின்றன.
புரதம் என்பது 20 வகையான அமினோ அமிலங்களால் ஆனது. இதில் ஒன்பது அமினோ அமிலங்கள் நம் உடலில் இயற்கையாக உருவாகாது; அவற்றை நாம் உணவிலிருந்து மட்டுமே பெற முடியும். ஆரம்பகால ஆய்வுகள், மொத்த புரதத்தைக் குறைப்பது, பசியின்றி கலோரி குறைப்பின் பலன்களை அளிக்கும் என்று கூறின. ஆனால், வயதானவர்களுக்கு புரதத்தை முழுமையாகக் குறைப்பது தசை இழப்பு, உடல் பலவீனம் போன்ற அபாயங்களை ஏற்படுத்தும். எனவே, உணவின் அம்சங்களை துல்லியமாக மாற்றும் புதிய அணுகுமுறை தேவைப்பட்டது.
இந்தப் புதிய அணுகுமுறையை விஸ்கான்சின் பல்கலைக்கழக (University of Wisconsin) ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்தனர். அவர்கள், புரதத்தின் அளவை மட்டும் கவனிக்காமல், அதன் தரத்தையும், குறிப்பாக கிளைத்த சங்கிலி அமினோ அமிலங்கள் (Branched-Chain Amino Acids – BCAAs) என்ற லூசின், ஐசோலூசின், வாலின் ஆகியவற்றை தனித்தனியாக ஆய்வு செய்தனர். இதில், ஐசோலூசின் என்ற அமினோ அமிலம் ஆயுளை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது என்று கண்டறிந்தனர்.
Also Read : உலகிலேயே ஆரோக்கியமான நாடுகள்: இந்தியா எத்தனையாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
அவர்கள் நடத்திய ஆய்வில், 30 மனித வருடங்களுக்கு இணையான வயதில் இருந்த எலிகளுக்கு, ஐசோலூசின் அளவை சுமார் மூன்றில் இரண்டு பங்கு குறைத்த உணவு வழங்கப்பட்டது. இதன் விளைவாக, உடல் கொழுப்பு குறைந்தது, வளர்சிதை மாற்றம் மேம்பட்டது, மற்றும் ஆண் எலிகள் 33% அதிகம், பெண் எலிகள் 7% அதிகம் வாழ்ந்தன. இந்தக் கூடுதல் ஆயுள், ரத்த சர்க்கரையில் சிறந்த கட்டுப்பாடு, வலுவான தசைகள், மற்றும் உடல் ஆரோக்கியத்தில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தியது. மேலும், புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் பிரச்சனைகள் குறைந்தன.

ஐசோலூசின் குறைப்பு உடலில் எப்படி வேலை செய்கிறது என்றால், mTOR (mechanistic target of rapamycin, also known as mammalian target of rapamycin-இது ஒரு புரதக் கூட்டுப்பொருள் மற்றும் சிக்னல் பாதையாகும். இது உயிரணுக்களில் வளர்ச்சி மற்றும் பெருக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது) சென்சார் அமைதி அடையும்.
இது வளர்ச்சி சிக்னல்கள் மற்றும் முதுமை தேய்மானத்தை குறைக்கும். உடல் குளிரை சமாளிக்கும் ஹார்மோன் அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றம் அதிகரித்து, எடை அதிகரிக்காமல் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. இந்த மாற்றங்கள், குறைந்த கலோரி அல்லது குறைந்த புரத உணவுகளுடன் இளம் வயதில் தொடங்கும் ஆய்வுகளிலும், நடுத்தர வயதில் தொடங்கும் ஆய்வுகளிலும் ஒரே மாதிரியாகவே செயல்படுகின்றன.
Also Read : ஆண் மலட்டுத்தன்மைக்குத் தீர்வு : விந்தணுவின் நீச்சல் ரகசியத்தை அவிழ்க்கும் விஞ்ஞானிகள்!
மனிதர்களுக்கான பரிந்துரைகள் குறித்து பேசும்போது, ஐசோலூசினை முழுமையாக நீக்க முடியாது, ஏனெனில் அது ஹீமோகுளோபின் உற்பத்தி, நோய் எதிர்ப்பு சக்தி போன்ற முக்கிய செயல்களுக்கு அவசியம். மேற்கத்திய உணவில் முட்டை, சீஸ், சோயா, சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றில் அதிக ஐசோலூசின் உள்ளது. அதிக BMI கொண்டவர்கள் அதிக ஐசோலூசின் உட்கொள்கிறார்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, பருப்பு வகைகள், முழு தானியங்கள், காய்கறிகள் அதிகம் சேர்க்கும் உணவு முறைகள் ஐசோலூசின் அளவைக் குறைக்க உதவும்.
இந்த ஆய்வுகள் பலதரப்பட்ட எலிகள் மீது நடத்தப்பட்டதால், மனிதர்களுக்கும் பொருந்தும் என்ற நம்பிக்கை அதிகமாக உள்ளது. இருப்பினும், கட்டுப்படுத்தப்பட்ட மனித சோதனைகள் இன்னும் தேவை. Fasting-Mimicking Diet போன்ற தற்காலிக ஐசோலூசின் குறைப்புகள் தற்போது ஆராய்ச்சி நிலையில் உள்ளன.
பொதுவாக ஆரோக்கியமான உணவுகள், குறைந்த ஐசோலூசின் அளவு, அதிக பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் – இவை நீண்ட ஆயுளுக்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் வழிகாட்டும். பால் பொருட்கள், சிவப்பு இறைச்சி குறைவாக எடுத்துக்கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது.
முடிவாக, நீண்ட ஆயுளுக்கான ரகசியம் உணவின் கலோரி மட்டுமல்ல; குறிப்பிட்ட அமினோ அமிலங்களை, குறிப்பாக ஐசோலூசினை குறைப்பது முக்கியம். ஆரோக்கியமான உணவுகள், சரியான சமநிலை, மற்றும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் – இவை எல்லாம் நீண்ட, ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டும். சரியாகச் சாப்பிடுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள், நீண்ட ஆயுள் பெறுங்கள்!
மூலம் : எர்த்.காம்
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry