எங்களை புறக்கணித்தால்…! எச்சரிக்கும் ஐபெட்டோ அண்ணாமலை! ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் விறுவிறு பின்னணி!

0
320
aifeto-annamalai-stalin-ops-broken-promise
The fallout of the Nov 18 JACTO-GEO strike. AIFETO Annamalai releases a statement on the OPS demand of 6.25 lakh employees and broken election promises. Strong criticism that the Stalin government is snatching benefits given by Karunanidhi. Calls for the government's self-assessment through the electoral process.

ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவம்பர் 18ல், மாவட்டத் தலைநகரங்களில், ஜாக்டோ ஜியோ பதாகையை உயர்த்திப் பிடித்து தங்ளது உள்ளக் குமுறல்களை கோரிக்கை முழக்கங்களாக எழுப்பிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் குரல்கள் நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டே இருப்பதை கேட்க முடிகின்றது.

AIFETO Annamalai

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள், தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள், ஓய்வூதியதாரர்கள், சிறப்பாசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் என்று அனைவரின் குரல்களும் ஒருமித்த எண்ணத்தோடு கேட்பது இதைத்தான். “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே..! உங்களின் தேர்தல் கால வாக்குறுதிகள் மறைந்து போனதா..? அல்லது மறந்து போய்விட்டதா..?. எங்களுடைய போராட்டம் அரசுக்கு எதிரானது அல்ல; எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் இருந்தபோது அனைத்துப் பிரிவினரின் போராட்டங்களிலும் கலந்து கொண்டு அளித்த வாக்குறுதி என்ன ஆயிற்று? என்று தான் கேட்கிறோம்.

ஆறே கால் லட்சம் பேர் புதிய ஓய்வூதிய திட்டத்தால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களை காடு வரை கரை சேர்க்கக் கூடியது பழைய ஓய்வூதிய திட்டம் அல்லவா? அவர்களுக்குப் பிறகும் அவர்கள் குடும்பத்தை காப்பாற்றக்கூடிய திட்டம் குடும்ப ஓய்வூதிய திட்டமல்லவா? ஏழு மாநிலங்களில் அறிவித்து விட்டார்களே? ஏன் இன்னமும் நீங்கள் அறிவிக்கவில்லை, அதுதானே எங்கள் உள்ளக் குமுறல்கள்.

Also Read : We Create Every Person in Parliament! – AIFETO Annamalai’s Speech Unlocks the Power of Educators!

மத்திய அரசு எட்டாவது ஊதியக் குழுவை அறிவித்து, அறிக்கையை அளிப்பதற்கு 18 மாதங்கள் கால அவகாசம் கொடுத்தாலும், ஜனவரி 2026 முதல் பணப் பயன்கள் கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளார்கள். அதை வரவேற்காமல் இருக்க முடியுமா? தமிழ்நாடு அரசு ஓய்வூதிய திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழு இடைக்கால அறிக்கையை மட்டும் தாக்கல் செய்துள்ளது. அந்தக் குழுவானது எப்போது முழு அறிக்கையை தாக்கல் செய்து, நீங்கள் எப்போது அவற்றை அமல்படுத்துவீர்கள்? இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டிற்கு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை? ஒப்பந்த அடிப்படை நியமனத்தினை ஏன் நிரந்தரப்படுத்தப்படவில்லை?

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது வழங்கிய பணப் பயன்கள் அனைத்தையும், அரசாணையை புறந்தள்ளிவிட்டு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என்று தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஊக்க ஊதிய உயர்வுக்கு பிடித்தம் செய்கிறார்களே? மறைந்த முதலமைச்சர் கருணாநிதி காலத்து நன்மைகளுக்கு அதிமுக அரசு எந்தப் பாதிப்பையும் செய்யவில்லை. ஆனால் அவரது அன்பு மகன் ஸ்டாலினின் அரசு அன்றாடம் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

டிட்டோஜாக், ஜாக்டோ ஜியோ என்று அனைத்து சங்கங்களும் இந்த விவரங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அவர் கண்டு கொள்ளவில்லையே? மகன் தந்தைக்கு ஆற்றும் பெருமை இது தானா? மறைந்த முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்கு செல்லும் போது கூட எங்கள் நினைவு வரவில்லையா?

Also Read : OPS Restoration Demand Intensifies: AIFETO Annamalai’s Strong Statement After JACTO-GEO Strike!

போராடுவது ஜனநாயக உரிமை. அரசு வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை, உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுங்கள் என்று கோரி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தால், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் செய்த எச்சரிக்கையை விட, பல விதிகளைத் தேடிப் பிடித்து அடையாள வேலைநிறுத்தத்தை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அறிக்கையினை வெளியிடுகிறார்கள்.

ஒன்றே முக்கால் லட்சம் பேரை ஒரே நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பணி நீக்கம் செய்த போது கூட கலங்காதவர்கள் நாங்கள். 999 இயக்கத் தலைவர்களை எட்டு மாத காலம் நிரந்தர பணி நீக்கம் செய்து வாழ்வாதாரத்தை இழக்கச் செய்த போது கூட கலங்காதவர்கள் நாங்கள். கருணாநிதியின் வழிகாட்டுதலுடன் உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்தி ஊதியம் உள்பட அனைத்தையும் பெற்று தந்தவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சிலர் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு சென்று இருக்கலாம். அவர்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள். பல்வேறு உரிமைகளை இழந்தவர்கள். இந்த அரசின் மீதான அவர்களின் அதிருப்தி மங்கிப் போய்விடவில்லை என்பதை அரசு உணர வேண்டும்.

வாக்காளர் சீர்திருத்தப் பணியை ஒரு பக்கம் நடத்துங்கள். வாக்குச்சாவடி வாரியாக வாக்குகளை சேகரிப்பதில் கவனம் காட்டுங்கள். ஆனால் வாக்காளர்கள் கணக்கெடுப்பை செய்பவர்கள், மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள், வாக்குச்சாவடியில் அமர்ந்து தேர்தல் பணியை செய்பவர்கள், வாக்கு எண்ணும் இடத்தில் இருப்பவர்கள், இவர்களை எல்லாம் அப்புறப்படுத்திவிட்டு தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று இந்த அரசு நம்புகிறதா? இந்த அரசின் சுய பரிசோதனையாக இது அமையட்டும்.

நாங்கள் இந்த அரசை எதிரியாக பார்க்கவில்லை. ஆனால் எங்களைப் பற்றிய சிந்தனையே வராமல் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று நினைத்தால், தேர்தல் மூலம் நாங்கள் யார் என்பதை அரசுக்கு உணர்த்துவோம். சங்கங்கள் தோற்றதாக வரலாறு இல்லை.

எங்கள் மூச்சு இருக்கும் வரை வாழ்வாதாரக் கோரிக்கைகளை பெற்றுத்தரவும், அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் களத்தில் நின்று போராடி வெற்றி பெறுவோம். கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் தேவை என்கின்ற தீர்ப்புக்கு முடிவு கட்டும் வரை கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை எங்களின் எதிர்ப்புக் குரல் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Contact AIFETO Mr. Annamalai @ 94442 12060 / 9962222314. annamalaiaifeto@gmail.com

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry