
ஐபெட்டோ (AIFETO) தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் ஒன்றாம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ஆசிரியர்களுக்குப் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது. பணியில் நீடிக்கவும், பதவி உயர்வுக்கும் டெட் (TET) தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கறார் காட்டியுள்ளது. “பணியில் இருக்கும் ஆசிரியர்களை எப்படி காப்பாற்றப் போகிறோம்?” என எங்கள் உள்ளம் குமுறுகிறது.
நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் பிற மாநிலங்களின் உரிமைக்குரல்
டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் 19ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. டெட் சிக்கலைத் தீர்க்கப் பல மாநில எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உரிமைக் குரல் கொடுத்துள்ளனர்.
- காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் (சகரான்பூர், உ.பி.) மக்களவையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதை சபாநாயகர் ஓம் பிர்லா கவனத்தில் எடுத்து, “நாடாளுமன்றம் இதை கவனத்தில் எடுத்து, டெட்டில் இருந்து ஆசிரியர்களை காப்பாற்ற வேண்டும்” என நெஞ்சம் நெகிழும் வண்ணம் உருக்கமாகப் பேசியுள்ளார்.
- சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் சகோதரர் தர்மேந்திர யாதவ் (ஆஜம்கர், உ.பி.) டிசம்பர் 4 அன்று மக்களவையில் பேசினார். அப்போது, 2011-க்கு முன்னர் நியமனம் ஆன உ.பி. மாநில ஆசிரியர்கள் 2 இலட்சம் பேர் உட்பட, நாடு முழுவதும் 25 இலட்சம் பேரை TET-இல் இருந்து பாதுகாக்க, RTE ACT 2009 மற்றும் RTE AMENDMENT ACT 2017-இல் உரிய சட்டத்திருத்தம் கொண்டு வர வலியுறுத்தினார். மேலும், மூத்த ஆசிரியர்களின் வாழ்வாதாரம் மற்றும் 1-8ம் வகுப்பு மாணவர்களின் கல்வி நலன் காத்திட வேண்டுமெனவும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேசியிருக்கிறார்.
- CPI உறுப்பினர் பி. சந்தோஷ் குமார் (மாநிலங்களவை), டிசம்பர் 9-இல் AIFUCTO சார்பாக கல்லூரி ஆசிரியர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் பெரிய அளவில் தர்ணா போராட்டத்தினை நடத்தப்போவதாகக் கூறினார். அப்போது அவர், பல்கலைக்கழகங்களில் நியமனங்கள் இல்லை, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண வேண்டும், அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டெட் கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று உணர்ச்சி மேலிடும் வண்ணம் உரையாற்றியுள்ளார். அவரது உரையை மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் கவனமாகக் கேட்டார்.
இதேபோல் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மக்களவை உறுப்பினர் செளமித்ரா கான் (Saumitra Khan) ஆர்.டி.இ. சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதில் தீவிரமாக உள்ளார். ஆசிரியர்களை அழைத்துக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், ஆர்.டி.இ. சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டியதன் அவசியம் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மௌனம்
மக்களவையில் இதுவரை திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் மூன்று நாட்கள் உரையாற்றி உள்ளார்கள். ஆனால் ஒருவர் கூட டெட் சம்பந்தமாக உரையாற்றவில்லை என்பதை ஆளுங்கட்சியின் நாளேடான முரசொலியில் “நாடாளுமன்றத்தில் கழக உறுப்பினர்களின் உரிமைக் குரல்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள செய்தியின் மூலம் அறிய முடிகிறது. இதைப் படிக்கிற போது நம்மையும் அறியாமல் வேதனை வெளிப்படுகிறது. இன்றோ… நாளையோ பேசலாம், ஆனால் நம் மாநிலத்தைச் சார்ந்த எவரும் முதலில் பேசவில்லை என்பது வரலாற்றில் இடம் பெறுகிறது அல்லவா..?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், டெட்டில் இருந்து ஆசிரியர்களைப் பாதுகாக்க நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார். மேலும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி, நாடாளுமன்றத்தில் உரையாற்றத் திட்டமிட்டுள்ள பொருளில் 2010-க்கு முன்பு நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்குப் பணியும், பதவி உயர்வும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார். இதை எண்ணிப் பெருமிதம் கொண்டோம். ஆனால் உத்தரப்பிரதேச சமாஜ்வாதி கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உள்ள அக்கறை உணர்வு, திமுக எம்.பி.க்களுக்கு இல்லாமல் போனதே என்று எண்ணுகிற போது மனதில் அழுத்தம் ஏற்படுகிறது.
சட்ட திருத்தம் மட்டுமே விடியல்
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தான் சென்று பேசுகிற மாநிலங்களில், உச்ச நீதிமன்ற தீர்ப்பிலிருந்து ஆசிரியர்களை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவோம் என்று உறுதி அளித்து வருகிறார். சமீபத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிலிருந்து பாதுகாப்போம் என்று உறுதியளித்து உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.
நவம்பர் 14 இல் AIFETO சார்பாக டெட் எதிர்ப்பு தர்ணா போராட்டத்தை டெல்லி ஜந்தர் மந்தரில் முதன் முதலில் நடத்தினோம். நவம்பர் 24 இல் AIPTF சார்பில் நடத்தினார்கள். AIFUCTO சார்பாக டிசம்பர் 9 இல் நடத்துகிறார்கள். STFI மாணவர் அமைப்புகள் ஒருங்கிணைந்து, போராட வேண்டிய நேரத்தில் போராடியும், மாநிலங்கள் வாரியாக நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் கலந்துரையாடி ஆர்.டி.இ. சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்குக் குரல் கொடுக்குமாறு கேட்டு வருகிறோம். நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் செய்வதன் மூலம் மட்டுமே ஆசிரியர்களைப் பாதுகாக்க முடியும்.
இரு நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவின் மூலம் நல்ல தீர்வு வரும் என்று நம்புவதற்கு வாய்ப்பே இல்லை. ஏற்கனவே தீர்ப்பளித்த நீதிபதிகளே சட்ட திருத்தம் இருந்தாலே தவிர, தீர்ப்பை மாற்றி வழங்க முன்வர மாட்டார்கள். தமிழ்நாட்டு திரைப்படம் ஒன்றில் வரும் வசனம் போல் “நாட்டாமை தீர்ப்பை மாற்று” என்று நம்மால் கூற முடியாது. குளிர்காலக் கூட்டத்தொடர் முடிவதற்குள் நமக்கு ஒரு விடியல் ஏற்படுத்தி தர வேண்டும். பல லட்சம் ஆசிரியர்களின் நலனைக் கருதி மத்திய அரசு ஆர்.டி.இ. சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் என்ற நம்பிக்கை உணர்வுடன் செயல்பட்டு வருகிறோம்.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
