
ஐபெட்டோ(AIFETO) தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், போராடும் உரிமையைக்கூட திராவிட மாடல் அரசு பறித்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், “8.12.2025 அன்று, சென்னையில் தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு முன்னால் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடத்தப் புறப்பட்ட டிட்டோஜேக் நிர்வாகிகளை 7.12.2025 அன்று இரவே, மகளிர் அணியினர் உள்பட பெரும்பாலானோரை இரவு 10 மணிக்கு மேல் அவர்களது இல்லத்திற்கு சென்று, அவர்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு போராட்டத்திற்கு போகக கூடாது என்று காவல்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளார்கள். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டாரம், பாபநாசம் வட்டாரம், பேராவூரணி, திருச்சி, மணப்பாறை, மருங்காபுரியில் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்திருந்து காலையில் விடுதலை செய்துள்ளார்கள்.
திராவிட மாடல் அரசில் பேராடுகிற உரிமையினையும் நாம் இழந்து நிற்கிறோம். ஜேக்டோ ஜியோ இணைப்பு சங்கங்கள் – காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அகில இந்திய அமைப்பான ஐபெட்டோ சார்பில் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயக்கப் பொறுப்பாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்று விண்ணதிர கோரிக்கை முழக்கமிட்டு, டிட்டோஜேக் பதாகையினை உயர்த்திப்பிடித்து வலிமையினைத் தேடி தந்துள்ளார்கள். உச்சிமுகந்து பாராட்டி மகிழ்கிறோம். சொந்த சங்கங்களின் மீதும், டிட்டோஜேக், ஜேக்டோ ஜியோ அமைப்புகள் மீதும் இயக்கப் பொறுப்பாளர்கள் நம்பிக்கை இழந்து வருவதை உணர முடிகிறது. சங்கங்களை பாதுகாப்பது அவசர அவசியம்.
பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அவர் என்ன செய்வார்? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அல்லவா முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை மே 7, 2021-ல் முதலமைச்சராக ஆட்சியில் அமர வைத்து, அழகு பார்த்ததில் நமக்கும் பங்கு உண்டு என்பதை இந்த திராவிட மாடல் அரசு மறந்தாலும், நம்மால் மறக்க முடியுமா? ஆசிரியர்கள் கொண்டுள்ள நம்பிக்கையினை இழக்கச்செய்யாமல் பாதுகாப்பதற்கு கரம் கோர்த்து சங்கங்களையும், சங்க உறுப்பினர்களையும் காப்பாற்றுவோம்.
தமிழ்நாடு முழுவதும் போர்க்களமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. அனைத்துப் பிரிவினரும் போராடி வருகிறார்கள். சங்கங்களை எவரும் தூண்டிவிட்டு போராட சொல்லவில்லை. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்து நான்கரை அண்டுகள் முடியப் போகிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கான பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியிட இன்னும் 3 மாதங்களே உள்ள நிலைமையில், தேர்தல் வாக்குறுதிகள் இதுவரையில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
ஜேக்டோ ஜியோ, டிட்டோ ஜேக், பிற கூட்டமைப்புகள் இணைந்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்த வேண்டுமென பல்வேறு போராட்ட முன் வடிவுகளை முன் வைத்து போராடி வருகிறோம். பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுகிறோம்.
கோரிக்கைகளைப் பெற்றுக்கொண்டு நாங்கள் செய்யாமல் வேறு யார் உங்களுக்கு செய்யப் போகிறார்கள். செய்து விடுவோம். உங்களை கைவிடமாட்டோம் என்று நான்கரை ஆண்டுகளாக ஒரே உறுதிமொழியினை அளித்து வருகிறார்.
பார்க்கச் செல்லும் தலைவர்களும் நாங்களும் உங்களைத் தவிர வேறு யாருக்கு ஓட்டுப் போடப்போகிறோம் என்ற உறுதிமொழியினை வெளிப்படையாக சொல்லாமல் நம்பிக்கையின் மூலம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலைமையில் கோரிக்கைகள் எப்படி நிறைவேறும்? நிறைவேறுவதற்கான அறிகுறிகள் கண்ணுக்கு எட்டின தூரம் வரை தெரியவில்லை!
தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு(டிட்டோஜேக்) சார்பாக 8.12.2025 அன்று சென்னை தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கு முன்பு கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை 3 நாள் காத்திருப்புப் போராட்டம் என்று அறிவித்தார்கள். பொறுப்பாளர்கள் மட்டும் வந்தால் போதும் என்றார்கள்.
டிட்டோஜேக் அழைக்கிறது, சென்னை நோக்கி செல்வோம், வெல்வோம் என்றார்கள். சென்னை நோக்கி காத்திருப்புப் போராட்ட பேனர்களுடன் வந்தார்கள். கோரிக்கை முழக்கமிட்டார்கள். கோரிக்கை முழக்கங்களை காணொலி மூலம் கேட்டால் ‘ஜேக்டோ ஜியோ’ கோரிக்கை முழக்கங்கள்தான்.
10 அம்ச கோரிக்கைகளை ஜேக்டோ ஜியோவிற்கும், டிட்டோ ஜேக் அமைப்புக்கும் வித்தியாசமில்லாமல் தயாரித்துள்ளார்கள். கைது செய்தார்கள். மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்கள். மாலை விடுதலை. டிட்டோ ஜேக் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூடினார்கள். மனநிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்க நேரமில்லை. உடன் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள். இன்றுடன் சென்னை காத்திருப்புப் போராட்டம் நிறைவு பெறுகிறது!
12.12.2025 அன்று வெள்ளிக் கிழமை மாவட்டத் தலைநகர்களில் பள்ளி வேலைநிறுத்தம், மாவட்டத் தலைநகரில் மறியல் போராட்டம் என்று அறைகூவல். இரண்டாம் நாள் சென்னை பயணத்திற்கு டிக்கெட் ரிசர்வ் செய்தவர்கள் ரத்து செய்துவிட்டார்கள். 13.12.2025 ஜேக்டோ ஜியோ உரிமை மீட்பு உண்ணாவிரதப் போராட்டம்! அதையும் மாவட்டத்தில் உள்ளவர்கள் நடத்தியாக வேண்டும். 15ஆம் தேதி முதல் பள்ளிக்கு அரையாண்டு தேர்வு நடத்தியாக வேண்டும்.
27.12.2025, சனிக்கிழமை அன்று மாவட்டத் தலைநகர்களில் பிரம்மாண்டமான ஜேக்டோ ஜியோ போராட்ட ஆயத்த மாநாட்டினை நடத்திக் காட்ட வேண்டும். சனவரி 6 முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம். காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம். 2003 ஜேக்டோ ஜியோ போராட்டத்தின் வீச்சினையே விஞ்சும் போராட்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். பேச்சு வார்த்தை என்ற மந்திரக் கோலினை கையில் எடுத்து சில நிமிடங்களில் போராட்டத்தினை தலைவர்களை வைத்து முடிவுக்கு கொண்டு வரும் அணுகுமுறையினைப் பெற்றவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
எதையும் செய்ய முன்வராத அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்த முன்வராத அரசு, ஊதிய முரண்பாடுகளை களைய முன் வராத அரசு, கருணாநிதி அளித்த பணப் பயன்களை அவர் மகன் காலத்தில் லட்சக்கணக்கான ரூபாயினை பிடித்தம் செய்து மன அழுத்தத்தை ஏற்படுத்தி வரும் அரசு என அடுக்கிக்கொண்டே போகலாம்
காமராஜர் காலம் முதல் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் முன்னுரிமைப் பட்டியல் ஒன்றிய அளவில் இருந்து வந்ததை மாநில அளவில் மாற்றி 243 அரசாணையினை பிறப்பித்து பெண் ஆசிரியைகள் 90 விழுக்காடு பேருக்கு பாதிப்பினை ஏற்படுத்தி வருகிற அரசாகவும் இது இருக்கிறது.
சிறப்பாசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் / தூய்மைப் பணியாளர்கள், போக்குவரத்துத்துறை ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர்கள் ஆகியோரின் குடும்பங்கள் பொதுத் தேர்தலில் ஆட்சிக்கு எதிராக வாக்களிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
நிதி அமைச்சர், நிதித்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள், தொடக்கக்கல்வி இயக்குநர், தணிக்கைத் துறையினைரை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 2 நாட்கள் சந்தித்துப் பேசினால் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு முழு தீர்வும் காண முடியும்.
Also Read : விஸ்வரூபமெடுக்கும் TET விவகாரம்! நாடாளுமன்றத்தில் DMK எம்.பி.க்கள் மௌனம் ஏன்? – ஐபெட்டோ சுளீர் கேள்வி!
கடந்த 1ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. மேற்கு வங்க பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர், ஆசிரியர் சங்கத் தலைவர்களுடன் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து, ஆசிரியர்களுக்கு TET-லிருந்து விலக்கு அளிக்கும் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டுமென விண்ணப்பம் அளித்ததுடன், சங்கத் தலைவர்களை பிரதமர் அவர்களுடன் இணைந்து நிற்கும் புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளார்.
மக்களவையில் உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் உறுப்பினர், சமாஜ்வாதி உறுப்பினர், தெலங்கானா உறுப்பினர் மற்றும் மாநிலங்களவையில் CPI உறுப்பினர் ஆகியோர் ஆசிரியர்களை ‘டெட்’டிலிருந்து பாதுகாப்பதற்கு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்கள்.
ஆனால் தமிழ்நாட்டின் நிலைமையோ…! டிசம்பர் 1 முதல் 8 தேதி வரை நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்த உறுப்பினர்கள் 20 பேர் உரையாற்றியுள்ளார்கள். மூத்த வழக்கறிஞர் வில்சன் மாநிலங்களவையில் இரண்டு முறை பேசியுள்ளார். எந்த உறுப்பினரும் டெட் தொடர்பாக பேசவில்லை. தமிழக அரசுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நம் நினைவே இல்லாமல் போனதேன்? காலம் பதில் சொல்லும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Contact AIFETO Mr. Annamalai @ 94442 12060 / 9962222314. annamalaiaifeto@gmail.com
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
