பாரதி என்பவன் தமிழனின் கர்வம்! சீண்ட நினைத்தால் சிதறிப்போவீர்கள்! – ‘ஆத்திகர் படை’ கண்டனம்!

0
11
defending-poet-bharathi-legacy-aathigar-padai-warning
The 'Aathigar Padai' has issued a powerful condemnation against YouTuber 'Minor' for derogatory remarks on Mahakavi Bharathiyar. Read the full statement on protecting Tamil heritage.

“அக்னிக் குஞ்சு” என்று தன்னை அழைத்துக்கொண்டு, அடிமைப்பட்டுக் கிடந்த பாரத தேசத்தையும், அதன் ஆன்மிகப் பண்பாட்டையும் தன் கவிதைகளால் தட்டி எழுப்பிய சித்தாந்தச் செம்மல் மகாகவி பாரதி. அந்தப் புரட்சியாளரை, வரலாற்றுத் திரிபுவாதிகள் சிலர் தரம் தாழ்ந்து வசைபாடுவதை ஆத்திகர் படை கடுமையாக கண்டித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில தினங்களுக்கு முன்பாக, ’சனாதன பாரதியும் சமத்துவ பெரியாரும்’ எனும் தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கத்தில் U2 Brutus என்ற வலையொளியை நடத்திவரும் மைனர் வீரமணி என்பவர் பாரதியாரைப் பற்றி உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி, அவரைச் சிறுமைப்படுத்த முயன்றுள்ளார். அடுக்கடுக்கான பொய்களைச் சொல்லி, பாரதியின் புகழைச் சிதைக்க நினைக்கும் இத்தகைய தீயசக்திகளுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

ஆத்திகர் படையின் அனல் பறக்கும் கேள்விகள்:

1. சாதி ஒழிப்பின் முன்னோடி பாரதி: “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடியது மட்டுமல்லாமல், திராவிட இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்பே, ஒரு தலித் இளைஞருக்குப் பூணூல் அணிவித்து ‘பார்ப்பனன்’ என்று அறிவித்த புரட்சியாளர் பாரதி. சாதிப் பெருமையை ஒழிக்கத் துணிந்த அந்தச் சிம்மத்தை, ஏதோ சாதி ஆதரவாளர் போலச் சித்தரிப்பது வீரமணி என்ற தற்குறியின் அறியாமையை அல்லது வஞ்சகத்தை காட்டுகிறது?
2. பக்தியும் தேசபக்தியும் இரு கண்கள்: பாரதி வெறும் கவிஞன் அல்ல; அவன் ஒரு தேசியத் தலைவன். சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிப் பாடவில்லை என்று கூசாமல் பொய் சொல்லும் அந்த தற்குறி, அவர் பாடிய “வாழ்க நீ எம்மான்” போன்ற பாடல்களையும், திலகர் மற்றும் லாலா லஜபதி ராய் போன்றோருக்காக அவர் சிந்திய வரிகளையும் படிக்கவில்லையா?
3. தமிழ் மொழியின் காவலன்: “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமிழை உலகறியச் செய்த மகாகவியை, தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தும் சிலர் வசைபாடுவது வேடிக்கையாக இருக்கிறது. பாரதியை அவமதிப்பது நம் தாய்மொழியான தமிழை அவமதிப்பதாகும்.

எச்சரிக்கை!

பாரதி என்பவன் ஒரு தனிமனிதன் அல்ல; அவன் தமிழர்களின் அடையாளம், வீரத்தின் விளைநிலம். தனது வறுமையிலும் தமிழ் மானத்தைக் காக்கப் போராடிய அந்த மாமனிதரைப் பற்றி, குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு தரம் தாழ்ந்து விமர்சிக்கும் ‘யு டூ புரூட்டஸ்’ போன்ற தற்குறிகளைத் தமிழினம் அடையாளம் கண்டுள்ளது.

தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் ஆத்திகர் படை விடுக்கும் முக்கிய வேண்டுகோள்: மகாகவி பாரதி போன்ற தேசத்தின் சொத்துக்களை, தமிழகத்தின் பெருமைகளை ஒரு சில யூடியூபர்கள் தங்கள் விளம்பர வெறிக்காக கொச்சைப்படுத்துவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

அரசியல் லாபத்திற்காக பாரதியைச் சிறுமைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். “நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்று வாழ்ந்த அந்தப் பாட்டுடைத் தலைவனைப் பழித்த வீரமணி என்ற தற்குறி உள்ளிட்ட அனைத்துத் தீய சக்திகளும் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில், பாரதியின் கவிதைகளைப் போலவே எங்களது போராட்டமும் அனலாக வெடிக்கும்.

“தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா” என்று பாடிய அந்தத் தேசபக்தருக்குப் பெருமை சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை; அவரைச் சிறுமைப்படுத்தித் தமிழர்களின் ரத்தத்தைக் கொதிக்க வைக்காதீர்கள்.“ இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry