
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது வரை பாஜக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்தக் கூட்டணியில் இப்போது டிடிவி தினகரன் இணைந்துள்ளார். சென்னையில் அமமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின்னர் டிடிவி தினகரன் இதனை அறிவித்தார்.
தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன், டிடிவி தினகரன் சந்திப்பு நடத்தினார். அப்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்,முருகன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற வேண்டும் என்கிற பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் கனவை நிறைவேற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு, விட்டுக்கொடுத்து கூட்டணியில் இணைந்திருக்கிறோம். என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும்.
பழைய விஷயங்களை நினைத்துக் கொண்டு கட்சி மற்றும் தமிழக நலனை பின்னுக்கு தள்ளிவிடக் கூடாது. எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான். விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை. ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய ஓரணியில் சேர்கிறோம். மக்கள் விரும்பும் நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம்.” என்றார்.
தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும்,
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட,
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள்…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) January 21, 2026
இந்நிலையில், “தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள மரியாதைக்குரிய டிடிவி தினகரனை வரவேற்கிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்றுப் புள்ளியை வைத்திடவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டிடிவி.தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” எனத் தெரிவித்துள்ளார். கூட்டணிக்கு வரவேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ள டிடிவி தினகரன், தேவைப்படும்போது அவரை சந்திப்பேன் என கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
