எரியும் விவசாயி… அலறும் தமிழகம்! – “இதற்கு மேல சீரழிய முடியாது!” – விடியா திமுக அரசை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தெடுத்த எடப்பாடியார்!

0
8
Farmer Burnt Alive in Panruti: EPS Slams DMK for Law and Order Collapse in Tamil Nadu
AIADMK General Secretary EPS slams the DMK government over the horrific burning of a farmer in Cuddalore, citing it as proof of the complete collapse of law and order in Tamil Nadu.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு என்பது வெறும் காகித அளவில்தான் இருக்கிறதா? அல்லது காவல்துறையின் கைகள் ஆளுங்கட்சியின் அரசியல் அழுத்தத்தால் கட்டிப்போடப்பட்டுள்ளதா? என்ற கேள்விகள் இன்று ஒவ்வொரு தமிழரின் மனதிலும் ஓங்கி ஒலிக்கிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஒரு விவசாயி உயிருடன் எரிக்கப்பட்ட கொடூரம், திமுக அரசின் நிர்வாகத் தோல்விக்கு மற்றுமொரு சாட்சியாக மாறியுள்ளது.

பண்ருட்டி கொடூரம்: உயிருடன் எரிக்கப்பட்ட விவசாயி!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதிய விவசாயி ராஜேந்திரன், தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிய, அவர் சாலையில் அலறியபடி ஓடிய காட்சி காண்போரின் நெஞ்சை உறைய வைத்துள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, “தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல; தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்” எனச் சீறியுள்ளார். “இன்னும் என்ன கொடுமை நடக்கப் போகிறதோ?” என்ற அச்சத்திலேயே மக்கள் வாழ வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், “கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இராஜேந்திரன் என்ற விவசாயி மர்ம கும்பலால் கொடூரமான முறையில் உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் யாரை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எரிக்க முடியும் எனும் நிலைக்கு திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு இந்தக் கொடிய நிகழ்வே சான்று.

மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது விவசாயி இராஜேந்திரன் இன்னொருவரின் இரு சக்கர ஊர்தியில் ஏறி பண்ருட்டி நகரத்திற்கு சென்று கொண்டிருந்த போது மகிழுந்தில் பின்தொடர்ந்து வந்த கும்பல் இந்த படுபாதகச் செயலைச் செய்திருக்கிறது. இதில் 70% தீக்காயம் அடைந்த இராஜேந்திரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே சட்டம் – ஒழுங்கு அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. பொது இடங்களில், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறும் படுகொலைகள், தாக்குதல்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 7500 படுகொலைகள் நடந்திருக்கின்றன. ஆனால், கொலைகளையும் குற்றச்செயல்களையும் தடுப்பதற்கு திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டம் – ஒழுங்கை இந்த அளவுக்கு சீர்குலைத்ததற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து தினம் தோறும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், அது குறித்து ஆட்சியாளர்கள் எந்தக் கவலையும்படுவதில்லை. அதன் விளைவு தான் 70 வயது விவசாயியை உயிருடன் எரித்து படுகொலை செய்யும் முயற்சி அரங்கேறியிருக்கிறது. காயமடைந்த விவசாயிக்கு சிறப்பான மருத்துவம் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும் வழங்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அடுக்கடுக்கான கொலைகள்.. முடங்கிப்போன பாதுகாப்பு!

பண்ருட்டி சம்பவம் ஒரு தொடக்கமே தவிர, சில நாட்களில் மட்டும் தமிழகம் கண்ட கொடூரங்கள் ஏராளம்:

* அடையாறு படுகொலை: சென்னையின் இதயப்பகுதியான அடையாறில், பிழைப்புத் தேடி வந்த வடமாநில குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 2 வயது குழந்தையைச் சிதைத்த கஞ்சா கும்பலின் வெறிச்செயல் இன்னும் ஈரம் காயவில்லை.
* நந்தனம் கல்லூரி வளாகக் கொடூரம்: அரசு கலைக்கல்லூரி வளாகத்திலேயே ஒரு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, கல்வி நிலையங்களின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. அமைச்சரோ ‘தெரியாது’ என நழுவுகிறார்.
* குடியாத்தம் மூதாட்டி சிதைப்பு: 75 வயது மூதாட்டியை ஒரு இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், காமக் கொடூரர்களுக்குச் சட்டத்தின் மீதான பயமே இல்லை என்பதை நிரூபிக்கிறது.

எடப்பாடியாரின் அதிரடி கேள்வி!

“ஒவ்வொரு முறையும் சட்டம்-ஒழுங்கு இதற்கு மேல் சீரழிய முடியாது என்று மக்கள் நினைக்கும்போது, அதைவிடக் கொடூரமான சம்பவங்கள் திமுக ஆட்சியில் நடக்கின்றன” என எடப்பாடியார் குற்றம் சாட்டியுள்ளார். குற்றவாளிகளுக்கு இரும்புக்கரமாக இருக்க வேண்டிய காவல்துறை, திமுக ஆட்சியில் ‘கரும்புக்கரமாக’ மாறி ஜிலேபி கொடுத்துக் கொண்டிருக்கிறதோ என்ற நையாண்டியான விமர்சனமும் எழுந்துள்ளது. குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry