“நன்றி மாநாடா? போராட்ட மேடையா?” – பிப்.8 ஜாக்டோ-ஜியோ மாநாட்டைச் சுற்றி அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

0
233
6.25 Lakh Govt Employees Await Old Pension Scheme Announcement
பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) அமல்படுத்தப்படுமா? பிப்ரவரி 8 ஜாக்டோ ஜியோ மாநாடு குறித்து மூத்த தலைவர் ஐபெட்டோ அண்ணாமலை வெளியிட்டுள்ள அனல் பறக்கும் அறிக்கை.

பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறவிருக்கும் ஜாக்டோ ஜியோ மாநாடு, வாழ்த்தொலிகள் முழங்கும் நன்றி அறிவிப்பு விழாவாக இருக்கப் போகிறதா? அல்லது உரிமைக் குரல்கள் வெடிக்கும் போர்க்களமாக மாறப் போகிறதா? என்று ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் தலைமையில் வரும் 5-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இது முதலீடுகளை ஈர்க்கும் கூட்டமாக இருக்கும் எனச் செய்திகள் வருகின்றன. ஆனால், தேர்தல்கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (CPS-ன் 10% பங்களிப்பை நீக்கிவிட்டு) 01.01.2026 முதல் அமல்படுத்துவதாக அந்த கூட்டத்தில் அறிவித்தால், பிப்ரவரி 8 மாநாடு நன்றி பாராட்டுவதுடன், ஆடல் பாடலோடு கொண்டாடும் விழாவாக மாறும் என்று 6.25 லட்சம் ஊழியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். மேலும், பள்ளிக்கல்வித்துறையின் 10 அம்ச கோரிக்கைகளை அறிவித்தாலும் அது புகழாரம் சூட்டும் மாநாடாக அமையும்.

வீரம் செறிந்த வரலாறு:

ஜாக்டோ ஜியோ என்பது சாதாரணமான அமைப்பு அல்ல; அது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வீரம் செறிந்த போராட்ட உணர்வைக் கொண்ட ஒரு போர்க்குணமிக்க அமைப்பு. இழந்த உரிமைகளை மீட்டெடுத்து ஊழியர்களிடம் ஒப்படைப்பதையே நோக்கமாகக் கொண்டது. 2003 ஏப்ரலில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் வந்தபோது, தலைமைச் செயலக ஊழியர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவரும் திரண்டு போராடினோம். ஒரே கையெழுத்தில் 1.75 லட்சம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். சங்கத் தலைவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

சட்டப் போராட்டமும் வெற்றியும்:

போராட்டத்தை முன்னின்று நடத்திய 999 பேர் 8 மாதங்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டனர். முதலமைச்சரின் கார் ஓட்டுநரே போராட்டத்தில் கலந்துகொண்டது அப்போதைய ஆட்சியாளருக்குப் பெருங்கோபத்தை உண்டாக்கியது. கருணாநியின் வழிகாட்டுதலில், செ. குப்புசாமி எம்.பி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரின் ஆலோசனையோடு, இடதுசாரி தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டு வெற்றி பெற்றோம். பணிநீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கும் சேர்த்து ஊதியத்தைப் பெற்றுத் தந்த அந்த வரலாற்றுத் தலைவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.

Also Read : அரசுக்கு ஆதரவு மாநாடா? அதிருப்தியை சேர்க்கும் மாநாடா? – ஏற்பாட்டாளர்களை எச்சரிக்கும் ஐபெட்டோ! 🔥

அரசியல் நிலைப்பாடுகள்:

2004-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்போது கூட்டணி ஆட்சியில் யார் இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் ஆட்சியில் இது கொண்டு வரப்பட்டபோது கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அப்போதும் கூட்டணி மந்திரி சபையில் இருந்தவர்கள் யார் என்பது ஊரறிந்த உண்மை.

டெல்லி பேரணியும் தமிழகத்தின் நிலையும்:

இன்று வரை இந்தியாவில் உள்ள அனைத்து இயக்கங்களும் “பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே வேண்டும்” என வலியுறுத்தி வருகின்றன. இதற்காக வரும் 5-ம் தேதி டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த AIFETO, STFI உள்ளிட்ட ஒன்பது இயக்கங்களைச் சேர்ந்த போராட்ட வீரர்கள் டெல்லி சென்றுள்ளனர். இந்தச் சூழலில், தமிழகத்தில் மட்டும் 10% பங்களிப்புடன் கூடிய திட்டத்தை ஏற்று நன்றி கூறுகிறோம் என்று சொல்வதைக் கேட்கவே நெஞ்சம் பதறுகிறது.

தீர்க்கப்படாத வாழ்வாதாரக் கோரிக்கைகள்:
* இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் இன்னும் களையப்படவில்லை.
* கருணாநி்தி வழங்கிய தேர்வுநிலை தர ஊதியம் மற்றும் அண்ணா வழங்கிய உயர்கல்வி ஊக்க ஊதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
* காமராஜர் காலம் முதல் தொடர்ந்த ஆசிரியர் முன்னுரிமை (ஒன்றிய அளவில்) மாற்றப்பட்டு, அரசாணை 243 மூலம் பெண் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* 1999-ல் நியமிக்கப்பட்டவர்களுக்கு 2006 முதல் ஊதிய உயர்வு இல்லாத நிலை (Pay Matrix சிக்கல்) உள்ளது.
* 23,000 தகுதித்தேர்வு தேர்ச்சியாளர்கள் வேலைக்காகப் போராடும் நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
* 10,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் இடங்கள் உட்பட அனைத்துத் துறை காலிப்பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.

முதலமைச்சரின் முடிவு:

தமிழகமே இன்று போர்க்களமாக உள்ளது. முதலமைச்சர், அமைச்சரவையில் முடிவெடுத்து மாநாட்டில் கோரிக்கைகளை அறிவித்தால், வரும் பொதுத் தேர்தலில் வாக்குச்சாவடிகள் ஊழியர்களின் ‘வாழ்க்கைச் சாவடியாக’ மாறி மகிழ்ச்சியைத் தரும். எந்த அறிவிப்பும் வராத பட்சத்தில், கூடும் கூட்டம் வெறும் கோரிக்கை முழக்கக் கூட்டமாகவே அமையும்.

எச்சரிக்கையும் அக்கறையும்:

நன்றி அறிவிப்பு மாநாடு நடந்தாலும் இல்லாவிட்டாலும், வாக்காளர்கள் தங்கள் விருப்பப்படிதான் வாக்களிக்கப் போகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை. ஜாக்டோ ஜியோ என்பது திமுக கூட்டணியின் பிரதிபலிப்பு என்று விமர்சனம் செய்பவர்களைப் பற்றி கவலையில்லை. நாங்கள் அண்ணாதுரை, கருணாநிதி, க. அன்பழகன் ஆகியோரின் உணர்வில் வளர்ந்தவர்கள். எங்களுக்கு யாரும் அரசியல் பாடம் சொல்லத் தேவையில்லை.

“சங்கமா? கட்சியா?” என்றால் எங்களுக்குச் சங்கம்தான் முக்கியம். கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால், தலைவர்கள் அனைவரும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். ஜாக்டோ ஜியோ என்பது எப்போதும் போராட்டக் கொள்கையில் பிறந்ததே தவிர, சமாதானக் கொள்கையில் பிறந்ததல்ல.

வாக்கு வங்கியினைப் பாதுகாத்த கருணாநிதியின் மகனான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் இதற்குத் தீர்வு காண வேண்டும். அனுபவம் மிக்க மூத்த தலைவன் என்ற முறையில் அக்கறையுடன் இதை வேண்டுகிறேன். மேற்கு வங்கத்தில் இன்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்வதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கல்லூரி ஆசிரியர்கள் இன்றும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்; அவர்களின் கோரிக்கையில் ஜாக்டோ ஜியோவின் பங்கு என்ன? இறுதியாக, இந்த மாநாடு வாக்கு வங்கியை அதிகரிக்குமா அல்லது சேதாரப்படுத்துமா என்பதை காலம்தான் சொல்லும்!” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Contact AIFETO Mr. Annamalai @ 94442 12060 / 9962222314. annamalaiaifeto@gmail.com

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry