“யாரை ஏமாற்ற இந்த நாடகம்?” – ஜாக்டோ-ஜியோ மாநாட்டை அக்குவேறு ஆணிவேராக அலசும் ஐபெட்டோ அண்ணாமலை!

0
7
jacto-geo-thanksgiving-conference-annamalai-fiery-report
AIFETO Annamalai, National Secretary of AIFETO, criticizes the JACTO-GEO Thanksgiving Conference. He explains why the TAPS scheme is a disappointment and how the conference turned into a DMK political event.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ’நன்றி அறிவிப்பு மாநாடு’ பற்றி, ஐபெட்டோ (AIFETO) தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:

கடந்த 8-ஆம் தேதி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் ‘நன்றி அறிவிப்பு மாநாடு’ நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “அரசுத் திட்டங்கள் மக்களிடம் பாராட்டு பெறுவதற்கு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களுமே முக்கியக் காரணம். நீங்கள் எங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறீர்கள், நாங்களும் உங்களுக்கு எப்போதும் துணையாக இருப்போம். வரும் 2.0 ஆட்சியிலும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும்” என்று உறுதியளித்தார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையாக ‘தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டம்’ (TAPS) என்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நிதி நெருக்கடி இருந்தபோதிலும், இந்தத் திட்டத்திற்கு முதற்கட்டமாக 13,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், ஆண்டுதோறும் இதே அளவு நிதி ஒதுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். ஆனால், ஊழியர்கள் செலுத்த வேண்டிய 10% பங்களிப்புத் தொகை பற்றி முதல்வர் எதையும் சொல்லவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள 6.25 லட்சம் ஊழியர்களிடம் கருத்து கேட்டால், இந்த TAPS திட்டத்தை எத்தனை பேர் வரவேற்கிறார்கள் என்பது அரசுக்குத் தெளிவாகத் தெரிந்துவிடும்.

ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் பேசும்போது, “மேலை நாடுகளிலும் பங்களிப்பு ஓய்வூதிய முறைதான் இருக்கிறது; அதைத் தமிழ்நாட்டில் அமல்படுத்தியதற்கு நன்றி சொல்லவே இந்த மாநாட்டை நடத்துகிறோம்” என்றார்கள். அதை நாமும் வரவேற்கிறோம். ஆனால், மேற்கு வங்காளத்தில் ஜோதிபாசு முதல்வராக இருந்தபோது கொண்டு வந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை, இப்போது முதல்வராக இருக்கும் மமதா பானர்ஜி தொடர்ந்து செயல்படுத்தி வருவதை அவர்கள் ஏன் சொல்லவில்லை என்று தெரியவில்லை.

எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது போலவே, இந்த ஜாக்டோ-ஜியோ நன்றி அறிவிப்பு மாநாடு ஒரு திமுக மாநாடு போலவே நடந்தது. முதலில் பேனரில் திமுக கொடியைப் போட்டுவிட்டு, எதிர்ப்பு வந்த பிறகு அதை நீக்கினார்கள். மேடையில் ஒரு ஒருங்கிணைப்பாளர் பேசும்போது, “அடுத்த ஆட்சியும் ஸ்டாலின் தலைமையில் தான் அமையும்” என்றார். இன்னொருவர், “2036 வரை ஸ்டாலின் தான் முதல்வர்” என்று பகிரங்கமாக அறிவித்தார். மற்றொருவரோ, “ஓய்வறியா உதயசூரியனே, நீங்களே நிரந்தர முதல்வர்” என்று புகழ்ந்தார்கள்.

JACTO-GEO Conference : AIFETO Annamalai Slams DMK Govt and Unions.

ஆனால் அங்கு கூடியிருந்த சங்க உறுப்பினர்களோ, எதையும் அறியாதவர்களாக அமைதியாக அமர்ந்திருந்தார்கள். இதுவரையில் ஜாக்டோ-ஜியோ சார்பில் கூட்டப்பட்ட கூட்டங்களிலேயே, உறுப்பினர்களின் ஆதரவை இழந்த கூட்டமாக இதுதான் இருந்தது. இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ‘உரிமை மீட்பு மாநாடு’ நடத்தியிருந்தால் பெரிய எழுச்சியாவது ஏற்பட்டிருக்கும்.

ஒரு விழாவில் தேசிய கீதம் பாடினால் நிகழ்ச்சி முடிந்துவிட்டது என்று அர்த்தம். அதுபோல, இந்த ‘நன்றி அறிவிப்பு மாநாடு’ என்பது இனி கோரிக்கைகளுக்காக ஜாக்டோ-ஜியோ சார்பில் எந்தப் போராட்டத்தையும் நடத்த வாய்ப்பில்லை என்பதைக் காட்டும் ஒரு முற்றுப்புள்ளி நிகழ்வாகவே கருதப்படுகிறது. தனிப்பட்ட சங்கங்கள் இதுபோல நன்றி சொல்லலாம். ஆனால், உரிமைக்காகப் போராடும் கூட்டமைப்புகள் இப்படி நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தியது இதுவே முதல்முறை. இதுவே கடைசி மாநாடாகவும் இருக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் கட்சி மீது பற்று இருக்கலாம். ஆனால், ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் சங்கம்தான் முக்கிய அடையாளம் என்பதை நிர்வாகிகள் மறந்துவிட்டார்கள். எந்தப் புதிய அறிவிப்பும் இல்லாமலேயே மாநாடு முடிந்துவிட்டது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிர்வாகிகள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகளில் ஒன்றாவது நிறைவேறியுள்ளதா? இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு தீர்ந்ததா? இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைதான் வெளிவந்ததா? எதுவுமே இல்லை.

சுமார் 60 ஆண்டுகளாகத் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான சீனியாரிட்டி பட்டியல் ஒன்றிய அளவில் இருந்தது. அதை மாநில அளவில் மாற்றி, பெண் ஆசிரியர்களைப் பாதிக்கும் வகையில் அரசாணை 243-ஐ அரசு வெளியிட்டது. அந்த அரசாணையில் ஒரு சிறிய திருத்தத்தையாவது செய்தார்களா? அந்த அரசாணை வந்தபோது நன்றி சொன்னவர்கள் தான் இந்த மாநாட்டையும் நடத்தினார்கள். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்குத் தகுதியற்றவர்கள் என்று எழுதிக் கொடுத்தவர்களுடன் சேர்ந்துதான் இந்த மாநாடு நடந்து முடிந்துள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ₹5400 தர ஊதியத்தைப் பறிக்க வேண்டும் என்று மனு கொடுத்தவர்கள் தான் இந்த மாநாட்டை நடத்தி இருக்கிறார்கள் என்பதை மறக்கவோ, மறுக்கவோ முடியுமா? சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தத் தீர்மானம் வந்ததா? காலியிடங்களை நிரப்ப உறுதி கிடைத்ததா? இல்லை! இல்லை! சங்க அடையாளம்தான் ஆதார் அட்டை போன்றது என்பதை நிர்வாகிகள் ஏன் மறந்தார்கள்?

மாநாட்டின் அழைப்பிதமிழில் தமிழக ஆசிரியர் கூட்டணிக்கு நன்றியுரை ஒதுக்கி இருந்தார்கள். கொள்கைப் பிடிப்புள்ள எங்கள் சங்க நிர்வாகிகள் யாரும், சங்கத்திடம் இருந்து முறையான அறிவிப்பு இல்லாததால் இதில் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநாட்டு அழைப்பிதழில் பெயர் இருந்தும், STFI அமைப்பின் கீழ் உள்ள 8 ஆசிரியர் சங்கங்கள் இந்த மாநாட்டைப் புறக்கணித்தன. பல போராட்டங்களை நடத்தியவன் என்ற முறையில் அவர்களை நான் பாராட்டி மகிழ்கின்றேன்.

எந்தப் பயனுள்ள அறிவிப்பும் இல்லாததால், இந்த மாநாட்டிற்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடனும் கோபத்துடனும் தான் வெளியேறினார்கள். இந்த மாநாடு திமுகவின் வாக்கு வங்கியை அதிகரிக்காது, மாறாகச் சேதப்படுத்தும் மாநாடாகவே அமைந்தது என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த அரசிலும் இல்லாத வகையில், தமிழகத்தில் இப்போது அதிகாரிகள் மட்டுமே ஆட்சி நடத்துகிறார்கள். இதனால் ஊழியர்கள் நாள்தோறும் பாதிக்கப்படுகிறார்கள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Contact AIFETO Mr. Annamalai @ 94442 12060 / 9962222314. annamalaiaifeto@gmail.com

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry