எடப்பாடியார் VS ஸ்டாலின் VS விஜய்: மும்முனைப் போட்டியில் யாருக்கு ‘செக்’ வைக்கப் போகிறது அந்த 3 சதவீத வாக்கு?

0
7
vijay-tvk-impact-on-dmk-aiadmk-vote-share
Decoding the 2026 TN Election Arithmetic. Will Vijay’s TVK act as a spoiler for DMK or a catalyst for AIADMK? Explore how vote fragmentation determines the next CM.

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் ஐந்து ஆண்டுகால ஆட்சி மாற்றத்திற்கான வழக்கமான போட்டியாக மட்டும் அமையப்போவதில்லை. அது கடந்த ஐந்து ஆண்டுகளின் நிர்வாகத் திறன், பொருளாதாரப் பொறுப்பு, சமூக நம்பிக்கை மற்றும் அரசியல் நம்பகத்தன்மை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மதிப்பீடாக அமையப் போகிறது.

இந்தத் தேர்தலின் மையப்பொருள் என்னவென்றால், ஆட்சிக்கு எதிரான மனநிலை (Anti-incumbency) என்பது ஒரே திசையில் ஒருங்கிணையுமா? அல்லது பல திசைகளில் சிதறிப் பிளவுபடுமா? என்பதுதான். 2021-ல் மக்கள் திமுகவுக்கு வழங்கிய தீர்ப்பு ‘மாற்றம்’ என்ற ஒற்றை உணர்வு. ஆனால் 2026-ல் மக்கள் முன் நிற்கும் கேள்வி “தொடர வேண்டுமா? அல்லது திரும்ப வேண்டுமா?” என்பதுதான். இது ஒரு சாதாரண அரசியல் போட்டி அல்ல; இது அமைதியாக உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு மனநிலை புரட்சியின் வெளிப்பாடு.

வாக்கு பிளவு கணிதமும் த.வெ.க-வின் தாக்கமும்:

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை, தமிழகத்தின் பாரம்பரிய இருமுனைப் போட்டியை மும்முனைப் போட்டியாக மாற்றியுள்ளது. தேர்தல் கணிதத்தின்படி, வாக்கு சதவீதத்தை விட, வாக்கு பிளவின் திசையே இறுதி முடிவைத் தீர்மானிக்கும். உதாரணமாக, திமுக 38% வாக்கு பலத்துடனும், அதிமுக 34% வாக்கு பலத்துடனும் இருப்பதாகக் கொண்டால், த.வெ.க ஈர்க்கும் 8-10% வாக்குகள் யாரிடமிருந்து பிரிகிறது என்பதே முக்கியம்.

அந்த வாக்குகள் முழுமையாக திமுகவின் வாக்கு வங்கியிலிருந்து பிரிந்தால், திமுக 30%க்குச் சரிந்து, அதிமுக தனது 34% வாக்குகளைத் தக்கவைப்பதன் மூலம் பல தொகுதிகளில் எளிதாக வெற்றி பெறும். குறிப்பாக நகர்ப்புற இளைஞர்கள் மற்றும் மென்மையான திமுக ஆதரவாளர்கள் த.வெ.க பக்கம் சாய்ந்தால், அது அதிமுகவுக்கு மிகப்பெரிய மறைமுகப் பலனாக மாறும்.

ஆனால், மற்றொரு வாய்ப்பையும் மறுக்க முடியாது. த.வெ.க-வின் 10% வாக்குகள் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்பிலிருந்தும் கலவையாகப் பிரிந்தால், அது ஆளும் கட்சிக்குச் சாதகமாக முடியலாம். அதாவது திமுக 33% ஆகவும், அதிமுக 31% ஆகவும் குறைந்தால், “அதிக வாக்கு பெற்றவரே வெற்றி” என்ற முறைப்படி, எதிர்ப்பு வாக்குகள் மூன்று பக்கமாகச் சிதறுவதால் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிக இடங்களை வெல்ல முடியும். 2011-ல் திமுக எதிர்ப்பு வாக்குகள் முழுமையாக ஒரே திசையில் அதிமுக பக்கம் ஒருங்கிணையும் போது ஏற்பட்ட அந்த ‘மாற்ற அலை’, இம்முறை சிதறினால் அது ஆட்சி அமைப்பவரைத் தீர்மானிக்கும் காரணியாக மாறும்.

கூட்டணி கணக்குகளும் தேமுதிகவின் நிலையும்:

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தாலும், புதிதாக இணைந்துள்ள தேமுதிகவின் தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது. 2021-ல் 0.43% வாக்குகளை மட்டுமே பெற்ற தேமுதிக, அமைப்பு ரீதியான சிதைவைச் சந்தித்துள்ளது.

2011-ல் 29 இடங்கள் பெற்ற உச்சநிலையிலிருந்து இன்று முழுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ள அந்தக் கட்சி, திமுக கூட்டணிக்குச் சேர்வது அரசியல் ரீதியாக ஒரு ‘பெயர்’ அளவிலான பலமே தவிர, வாக்குகளை மாற்றும் சக்தியாக இல்லை. மேலும், விஜயகாந்த்தின் அரசியல் வரலாறு திமுக எதிர்ப்பின் மீது கட்டப்பட்டது. அந்த உணர்வு கொண்ட அடிப்படை விசுவாசிகள் இக்கூட்டணியை ஏற்பார்களா என்பது சந்தேகமே. 2024 மக்களவைத் தேர்தலிலேயே ‘அனுதாப வாக்கு’ பலனளிக்காத நிலையில், 2026-ல் அதற்கு வாய்ப்பில்லை.

பொருளாதார நெருக்கடியும் மக்களின் அதிருப்தியும்:

தமிழகத்தின் கடன் சுமை தற்போது ₹10.71 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. 2021-ல் இருந்த அளவிலிருந்து இது மிகப்பெரிய உயர்வு. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு சராசரியாக ₹5 லட்சம் கடன் சுமை இருப்பதாகப் பொருளாதார மதிப்பீடுகள் கூறுகின்றன. அரசின் வருவாயில் பெரும் பகுதி வட்டிக்கே செலவாகும் நிலை, எதிர்கால தலைமுறையின் வரிச்சுமையை அதிகரிக்கும்.

மக்கள் தினசரி வாழ்க்கையில் அனுபவிக்கும் விலைவாசி உயர்வு, அரசின் வண்ணமயமான விளம்பரங்கள் மூலம் ஈடுசெய்ய முடியாத ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்களின் போராட்டங்கள் சாதாரண பிரச்சனைகள் அல்ல. ‘சம வேலைக்குச் சம ஊதியம்’, ‘பழைய ஓய்வூதியத் திட்டம்’ போன்ற நிலுவையில் உள்ள கோரிக்கைகள், பல லட்சம் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. 2% வாக்கு மாற்றமே 40-50 தொகுதிகளின் தலைவிதியை மாற்ற முடியும் என்னும்போது, இந்த அரசு ஊழியர்களின் அதிருப்தி திமுகவுக்குப் பெரும் சவாலாகும்.

உதவித்தொகை திட்டமும் அதிமுகவின் மாற்றும்:

திமுக அரசின் ₹5,000 உதவித் திட்டம் குறுகிய கால நன்றியுணர்வை உருவாக்கலாம். ஆனால், “எனக்குக் கிடைக்கவில்லை” என்ற ஒரு கோடிக்கும் மேலான பெண்களின் ஆதங்கம், “எனக்குக் கிடைத்தது” என்ற உணர்வை விட வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு மாற்றாக அதிமுக முன்வைத்திருக்கும் ₹2,000 மாதாந்திர நிரந்தரத் திட்டம், ஒரு ஒப்பீட்டு மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. வாக்காளர் மனநிலை என்பது எப்போதும் நன்றி அடிப்படையில் மட்டும் அமையாமல், எதிர்காலப் பலன் மற்றும் நிர்வாகத் திறன் அடிப்படையிலேயே அமையும்.

அதிமுகவின் மீளெழுச்சி:

எப்போதும் போல அதிமுக மட்டுமே திமுகவுக்கு உண்மையான மாற்று சக்தியாகத் திகழ்கிறது. அக்கட்சியின் அடிப்படை வாக்கு வங்கி 25-30% அளவில் நிலைத்திருப்பதும், அதனுடன் அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் இணைந்தால் அது 35%-க்கும் அதிகமாகச் செல்ல வாய்ப்புள்ளது. பாமக போன்ற சமூக வாக்கு வங்கி கொண்ட கட்சிகளின் ஆதரவும், கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய வாக்கு பலமும் அதிமுகவுக்கு கூடுதல் வலு சேர்க்கின்றன.

2026 தேர்தல் முடிவு என்பது மூன்று பாதைகளில் ஒன்றாகச் செல்லும்: எதிர்ப்பு வாக்கு ஒருங்கிணையும் போது அதிமுக 120+ இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும். அல்லது எதிர்ப்பு வாக்கு சிதறும்போது திமுக குறைந்த வித்தியாசத்தில் ஆட்சியைத் தொடரலாம். ஆனால், தற்போது நிலவும் ஆட்சிக்கு எதிரான உணர்வு, ஒரு வலுவான மாற்றத்தை நோக்கியே நகர்கிறது.

இறுதியாக, 2026 தேர்தல் என்பது வெறும் எண்களுக்கான போட்டி அல்ல; அது ஒரு மனநிலைப் போர். மக்கள், “இன்னும் ஐந்து வருடம் இதே ஆட்சியா?” என்று சிந்திக்கும் அந்த ஒரு கணமே அதிமுகவின் வெற்றியைத் தீர்மானிக்கும். அதிமுக சரியான கணிதத்துடனும், வலுவான நிர்வாகத் திட்டத்துடனும் களமிறங்கினால், 2026-ல் புனித ஜார்ஜ் கோட்டையில் அதன் மீளெழுச்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.

கட்டுரையாளர் : நடுநாட்டான்

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry