பாடத்திட்டம் குறைப்பா? கல்வி ஆண்டு நீட்டிப்பா? எது மாணவர்கள் நலனுக்கு உகந்தது? வேல்ஸ்  மீடியா சிறப்புப் பார்வை!

0
16

1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு ஏற்கனவே பாடத்திட்டங்களை 50 சதவிகிதமாக குறைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஆனால் இதுமட்டும் தீர்வாகாது என்பது நடைமுறை உண்மை. பிரச்சனைக்கு தீர்வு காண அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் தேதி தற்போது வரை தெரியாத நிலையில், ஏற்கனவே 1 முதல் 9-ம் வகுப்பு வரை 40 சதவீதம் அளவிற்கும்,  10,11,12-ம் வகுப்புகளுக்கு சில பாடப் பகுதிகள் மட்டும் குறைக்கப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது பள்ளிகள் திறப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும் நிலை உள்ளதால், பாடத்திட்டங்களை 50 சதவீதமாக குறைப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “பாடத்திட்டம் குறைப்பது குறித்த நிபுணர் குழுவின் அறிக்கை வரும் திங்கட்கிழமை முதலமைச்சரிடம் வழங்கப்படும். முதலமைச்சரிடம் அறிக்கை தந்த 5 நாளில் பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்அதனை தொடர்ந்து சில நாட்களில், இதற்கான அரசாணை வெளியிடப்படும். தற்போதைய சூழ்நிலையில் அரையாண்டு தேர்வு நடைபெறாதுஎன்று தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்க இயலாத நிலையில், மாணவர்களின் அழுத்தம் காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவது வரவேற்கத்தக்கதே. அதேநேரம், சில அம்சங்களை கல்வித்துறை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, ஒரு வகுப்புக்கும், அதன் மேல் வகுப்புக்கும் தொடர்புடைய பாடங்களை குறைக்கக் கூடாது. உதராணமாக 8-வது கணிதத்தில் இருக்கும் அல்ஜீப்ராவின் தொடர்ச்சிதான் 9-வது கணிதத்திலும் இருக்கும். பாடத்திட்டத்தை குறைக்கும்போது, 8-வது அல்ஜீப்ரா போர்ஷன் குறைக்கப்பட்டால், அதைப் படிக்கும் மாணவன், 9-ம் வகுப்புக்கு செல்லும்போது அல்ஜீப்ரா புரியாமல் தடுமாறும் நிலை ஏற்படும்.     

மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், கல்வித்தொலைக்காட்சி மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் எந்த அளவுக்கு கற்றிருக்கிறார்கள் என்பதை அரசு கண்டறிய வேண்டியது அவசியம். தற்போதைய சூழலில் ஜனவரி மாதம்தான் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிகிறது. எனவே, 50 சதவிகித பாடங்களை குறைப்பது மட்டுமே இதற்கு தீர்வாகிவிடாது.

ஏப்ரல் மாதத்தில்தான் இறுதித் தேர்தவுகள் நடைபெறுவது வழக்கம். அப்படியிருக்க, ஜனவரி மாதத்தில் பள்ளிகளை திறந்து, 3 மாதத்தில் 50 சதவிகித பாடங்களை நடத்தி முடித்து, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவது, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மன அழுத்தத்தையே ஏற்படுத்தும். எனவே கல்வியாண்டை நீட்டிப்பது குறித்து அரசு பரிசீலித்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry