நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என்பது தொடர்பான சஸ்பென்ஸ் ரசிகர்கள் மத்தியில் இந்த நிமிடம் வரை நீடிக்கிறது. தனது குருவான மகா அவதார் பாபாஜி அவதார தினத்தில் ரஜினி முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
உடல் நிலையை காரணம் காட்டி டிவிட்டர் பதிவு, பாஜக–வை ஆதரிக்கும் நிலையில் இல்லை என்று அமித் ஷா–விடம் ஃபோனில் கூறியது போன்றவற்றால், ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்தது. இதுகுறித்து வேல்ஸ் மீடியாவில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
Also Read: தனிக்கட்சியா? 1996 வியூகமா? ரஜினியுடன் ஃபோனில் ஆலோசித்த அமித் ஷா! விறுவிறு மாற்றங்கள்!
இந்த பரபரப்பான சூழலில், சென்னையில், கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது அரசியல் நிலவரம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இப்போது கட்சி தொடங்கலாமா? கட்சி தொடங்கும் சூழல் உள்ளதா? என்பது குறித்து நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்தார். நிர்வாகிகள் தங்கள் பகுதி நிலவரங்கள் மற்றும் தங்களின் கருத்துக்களை ரஜினியுடன் பகிர்ந்துகொண்டனர். முதல்வர் வேட்பாளராக ரஜினிகாந்த் போட்டியிட வேண்டும் என்ற கருத்தையும் பலர் முன்வைத்துள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் ரஜினிகாந்த், பால்கனியில் நின்றபடி ரசிகர்களை நோக்கி கையசைத்தும், வணங்கியும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், விரைவில் நல்ல முடிவு எடுத்து அறிவிப்பதாக கூறினார். என்ன முடிவு எடுத்தாலும் ஆதரவு அளிப்பதாக மாவட்ட செயலாளர்கள் உறுதி அளித்திருப்பதாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
ஆலோசனைக் கூட்டம் குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேசிய போது, ‘தனது குருவான பாபாஜி அவதார தினத்தில் அவர் முக்கிய முடிவை எடுத்துள்ளார். கட்சி தொடங்க அவர் முடிவெடுத்துள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும். திராவிடக் கட்சிகளுடனோ, தேசிய கட்சிகளுடனோ கூட்டணி இல்லை. ஊழல் சாயம் இல்லாத சிறிய கட்சிகளை உடன் வைத்துக்கொண்டு தேர்தலை சந்திக்க அவர் முடிவு செய்துள்ளார்” என்று கூறினார்கள்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry