ஆந்திராவில், கொரோனா பீதியில், ஒரு குடும்பம் சுமார் 15 மாதங்கள் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளேயே வசித்த சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு கோதாவரி மாவட்டம் கடாலி என்ற கிராமத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சுட்டுகல்லா பென்னி(50), அவரது மனைவி ருதம்மா(45), மகள்கள் காந்தாமணி(30), ராணி(32) ஆகிய நால்வரும் சிறிய வீட்டில் வசிக்கின்றனர். கொரோனா முதல் அலையின்போது, 15 மாதங்களுக்கு முன்பாக இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் கோவிட் தொற்றால் உயிரிழந்தார்.
வெளியே வந்தால் கொரோனா தொற்றிவிடும் என்ற அச்சத்தில் பென்னி குடும்பத்தினர் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்துள்ளனர். 15 மாதங்களாக பெண்கள் மூவரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பென்னி மட்டும் அவ்வப்போது வெளியே சென்று வந்துள்ளார். அரசின் வீட்டு மனை ஒதுக்கும் திட்டத்துக்கு கைரேகை பெறுவதற்காக ASHA திட்ட ஊழியர்கள் ருதம்மா–வை அணுக முயன்றுள்ளனர். ஆனால் அவர் வெளியே வரவில்லை. சில மாதங்களாகவே இப்படி நடந்துள்ளது.
15 மாதங்களாக ருதம்மாவும் அவரது மகள்கள் இருவரும் வீட்டுக்குள்ளேயே பூட்டிக்கொண்டு அடைந்து கிடப்பதால், அவர்களது உடல்நிலை மோசமடைந்திருக்கலாம் என உறவினர்கள் கிராம முக்கியஸ்தர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். கிராமத்தினர் வீட்டுக்குச் சென்று அழைத்தபோது, அவர்கள் வீட்டிற்குள் இருந்து கொண்டே, நாங்கள் வெளியே வந்தால் கொரோனாவால் இறந்து விடுவோம் என்று கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், கிராம நிர்வாக அலுவலருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். ரஜோல் காவல்நிலைய போலீஸார், பென்னி வீட்டுக்குச் சென்று உடனடியாக ருதம்மாவையும் அவரது இரு மகள்களையும் மீட்டுள்ளனர். ஒழுங்காக சாப்பிடாமலும், தலை வாராமலும், பல நாட்களாக குளிக்காமலும் இருந்த அவர்களது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. அந்த சிறிய வீட்டின் உள்ளே இருந்த இருட்டு அறையிலேயே அடைந்துகிடந்த அவர்கள், அங்கேயே இயற்கை உபாதைகளையும் கழித்து வந்துள்ளனர். சுகாதாரத்துறை ஊழியர்களும், போலீஸாரும் இணைந்து 10 நாட்களுக்கு முன் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். வழக்கமான சிகிச்சையுடன், மனநல சிகிச்சையும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இன்னும் ஒரு வாரம் இதே நிலையில் இருந்திருந்தால், மூவரும் இறந்திருக்கக் கூடும் என போலீஸார் கூறுகின்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry