சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் நடந்துகொள்ளும் விதம், பல கேள்விகளை முன்னெடுக்கிறது. முடிவெடுக்க முடியாமல் அதிமுக தலைமை தடுமாறுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஜெயலலிதா இருந்தவரையில், அதிமுக – திமுகவினர் கீரியும் பாம்புமாக இருந்து வந்தனர். இரு கட்சி நிர்வாகிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ நேரில் பார்த்துக்கொண்டால்கூட முகத்தைச் திருப்பிச் செல்வார்கள். ஜெயலலிதா மறைந்த பிறகு அந்த நிலை மாறி, அரசியல் நாகரீகம் கருதி, இரு கட்சி தலைவர்கள் பரஸ்பரம் நட்பு பாராட்டினார்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சிவரை இப்படியொரு நிலைதான் இருந்தது.
திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், அதிமுக சரண்டராகிவிட்டது. கொரோனா விவகாரத்தில் ஓபிஎஸ் தொடங்கி முன்னாள் அமைச்சர்கள் சிலர் திமுக அரசை புகழ்ந்தார்கள். திமுக அரசுக்கு ஓபிஎஸ் மூன்று முறை நன்றி தெரிவித்தார். அதேநேரம், அதிமுக–வில் ஒரு சாரார் பழைய கெத்துடன் வலம் வந்த நிலையில், தற்போதைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில், திமுக–விடம் அதிமுக பணிந்து பம்முகிறது. முதல் 2 நாட்கள் அதிமுக தரப்பில் இருந்து பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதன்பிறகு, அதிமுக–வினர் அடக்கி வாசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.39 கோடியில் நினைவிடம் கட்டப்படும் என்று, விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பை மனதார வரவேற்பதாக, முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் கூறினார். ‘எனது தந்தை கருணாநிதியின் தீவிர பக்தர், ஆகவே கலைஞருக்கு நினைவிடம் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி’ எனக் கூறினார். இத்தனை ஆண்டுகாலம் கலைஞர் மீதான பற்று பற்றி ஒபிஎஸ் கருத்து தெரிவிக்காதது ஏன்?
இதேபோல், பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சட்டமன்றம் உண்மையிலேயே கண்ணியத்தோடு நடைபெறுகிறது எனவும், இந்த அரசு செய்ய வேண்டிய பணிகளை சீரோடும், சிறப்போடும் செய்கிறது என்றும் பாராட்டினார். நல்ல திட்டத்தை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் பேசினார். இவரது பேச்சு முழுவதுமாக திமுக–வின் முரசொலி நாளிதழில் வெளியாகியுள்ளது. அதிமுக உறுப்பினர் திமுக அரசைப் பாராட்டி, அதை முரசொலி முழுவதுமாக வெளியிடுவது, இது முதல்முறையாக இருக்கலாம். கே.ஏ. செங்கோட்டையன் கூற்றுப்படி, கடந்த 10 ஆண்டுகளாக அவை கண்ணியத்தோடு நடைபெறவில்லையா?
அடுத்ததாக, சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலின்போது வேளாண் சட்டத்தை ஆதரித்துப் பேசிய அதிமுக, இந்தத் தீர்மானத்தை எதிர்க்காமல், வெளிநடப்பு செய்தது. கூடவே பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தார்கள்.
இந்த விவகாரம் பல கேள்விகளை எழுப்பக்கூடியதாக இருக்கிறது. சபை அலுவல்கள் ஒரு நாள் முன்னதாகவே உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.(உ-ம்: பா.ம.க. எம்எல்ஏ-க்கள் பச்சை துண்டு அணிந்து வந்திருந்தனர்) எனவே வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பது அதிமுக–வுக்கு தெரிந்திருக்கும். அப்படியிருக்கும்போது, தீர்மானம் கொண்டுவருவதற்கு முன்பாகவே, பிரச்சனை எழுப்பி வெளிநடப்பு செய்திருக்கலாம்.
அதைவிடுத்து, வேளாண் சட்டம் மீதான சாதக பாதகங்களை அறிந்து மத்திய அரசிடம் எடுத்துரைக்கலாம் என ஓபிஎஸ் கூற, வேளாண் சட்டத்தில் உள்ள பாதகங்கள் குறித்து குழந்தைக்குக் கூட தெரியும்; ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?” என அவை முன்னவர் துரைமுருகன் கேட்கிறார். அதற்கு, நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு, இதுதான் என் நிலை…! அதாவது, இருதலைக்கொள்ளி எறும்பாக, இருபக்கமும் நெருக்கடியான சூழலில் நான் இருக்கிறேன் என சரண்டர் ஆகிறார் ஓபிஎஸ். அப்படியென்ன அவருக்கு நெருக்கடி?
இவர்தான் இப்படி என்றால், வேளாண் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பது தெரிந்தும், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி அவைக்கு வரவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘ஸ்டாலின் போன்று விவசாயத்தை பற்றி அறியாதவன் அல்ல; பாதிப்பில்லை என விவசாயி ஆகிய நான் உணர்ந்ததால்தான், வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை’ என கூறியிருந்தார். அப்படியென்றால், அவைக்கு வந்து, வேளாண் சட்டத்தில் என்னென்ன சாதகங்கள் இருக்கின்றன என பட்டியலிட்டு இருக்க வேண்டாமா? இல்லையெனில், தன் சார்பிலான உரையை, தமது கட்சி உறுப்பினர் மூலம் அவையில் பதிவு செய்திருக்க வேண்டாமா?. இது எதையும் செய்யாமல், முக்கியமான இந்த நாளில் எடப்பாடி பழனிசாமி அவையை புறக்கணிக்க காரணம் என்ன?
திமுக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள்தான் ஆகிறது. அதற்கு முன் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி செய்துள்ளது. தங்கள் ஆட்சியின்போது தொடங்கிய பணிகளை கைவிடாமல் முடிக்குமாறு அரசை அதிமுக வலியுறுத்தலாம். ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் தொடங்கி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பலர், தங்களது தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும் என கோரிக்கைகளாக வைக்கிறார்கள். 10 வருடம் ஆட்சியில் இருந்து என்ன செய்தீர்கள்? என அமைச்சர் ஒருவர், முன்னாள் அமைச்சரை கேட்டபோது பதிலே இல்லை.
திமுக அமைச்சர் கேட்டதில் எந்தத் தவறும் இல்லையே?. ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ. செங்கோட்டையன் போன்ற மூத்த நிர்வாகிகள் சரண்டராக, முக்கியமான நாளில் எடப்பாடி பழனிசாமி அவைக்கு ஆப்சென்ட் ஆக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. நாமும் திமுக–வை எதிர்த்துப் பேசக்கூடாது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டதாகவே தெரிகிறது. 66 எம்.எல்.ஏ.க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக இருந்தும், பேரவையில் முழுபலத்தை பயன்படுத்த முடியாமல் அதிமுக தலைமை தடுமாறுவது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. அதிமுக தலைமையின் இந்த நடவடிக்கை, தமிழ்நாட்டில் பாஜக–வை வளர்க்கவே உதவும். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தலைவர்கள் மாறிக்கொள்வார்கள், தொண்டர்கள்…? ஆரோக்கியமான அரசியல் என கடந்துபோவார்களா?
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry