துவக்கத்திலேயே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு குறைய துவங்கி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழையால், இந்த ஏரிகளில் கடந்த ஜனவரி மாதம் 11 டி.எம்.சி.க்கு மேல், நீர் இருந்தது. கோடை துவக்கத்திலேயே, சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், ஏரிகளில் இருந்து தண்ணீர் ஆவியாதல் அதிகரித்துள்ளது. எனவே, நீர் கையிருப்பு குறைய துவங்கியுள்ளது.
எனவே, நீர் ஆவியாதலை குறைப்பதற்காக, சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு நீர் திருப்பப்படுகிறது. விரைவில், பூண்டி ஏரியில் இருந்து, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர் திறக்கப்படவுள்ளது. குடிநீர் தேவைக்காக புழலில் இருந்து வினாடிக்கு 185 கன அடி, செம்பரம்பாக்கத்தில் இருந்து வினாடிக்கு 182 கனஅடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது.
புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகளின் ஒட்டுமொத்த கொள்ளளவு 11.7 டி.எம்.சி. ஆகும். தற்போது, புழலில், 2.92 டி.எம்.சி.யும், செம்பரம்பாக்கத்தில், 2.85 டி.எம்.சி.யும் நீர் இருப்பு உள்ளது. பூண்டியில் 2.01 டி.எம்.சி.யும், சோழவரத்தில் 0.62 டி.எம்.சி.யும் இருப்பு உள்ளது. தேர்வாய் கண்டிகையில், மொத்த கொள்ளளவான 0.50 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. கடந்தாண்டு, இதேநாளில், 9.43 டி.எம்.சி. நீர் இருப்பு இருந்தது. தற்போது, நீர்இருப்பு 8.92 டி.எம்.சி.யாக உள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry