ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி காரில் ரூ.40 லட்சம் லஞ்சப் பணம்! அமைச்சர் பங்கா? என எதிர்க்கட்சிகள் கேள்வி!

0
265

திருச்சி மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் சரவணகுமார் 40 லட்சம் ரூபாய் லஞ்சப் பணத்துடன் சிக்கியிருப்பது துறை அமைச்சருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலராக இருப்பவர் சரவணகுமார். திருச்சியில் இருந்து நேற்று முந்தினம் சென்னை சென்று கொண்டிருந்த இவர், காரில் கட்டு கட்டாக லஞ்சப் பணம் எடுத்துச் செல்வதாக, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் பிற்பகல் 2: 30 மணியளவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கெடிலம் அருகே சரவணகுமார் சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, பைகளில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரையும், கார் டிரைவரான குளித்தலையைச் சேர்ந்த மணியையும் விழுப்புரம் பழங்குடியின அலுவலகத்துக்கு போலீஸார் அழைத்து சென்றனர். அங்கு, இயந்திரம் மூலம் எண்ணிப் பார்த்தபோது, 38 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.

திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சமையலர் பணிக்கு ஆட்கள் எடுத்ததாகவும், அதற்கான லஞ்ச பணத்தை சென்னை எழிலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரக உதவி செயற்பொறியாளர் கலைமோகனிடம் கொடுக்க எடுத்துச் சென்றதாகவும் சரவணகுமார் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். சரவணகுமாரிடம் வாக்குமூலம் பதிவு செய்தபின்னர், இருவரையும் லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து சென்று அடுத்த கட்ட விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விவகாரத்தில், தலைமை அலுவலக உதவி செயற்பொறியாளருக்கு தொடர்பிருப்பது உறுதியான நிலையில், அவர் யாருக்காக பணம் வாங்குகிறார்? ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கு தொடர்பிருக்கிறதா? என்பது குறித்தும் விசாரிக்கவேண்டும்” என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

மேலும், அதிகாரிகள் இவ்வளவு பணம் யாருக்காக வாங்குகிறார்கள், எதற்காக பணம் வசூலிக்கப்பட்டு சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது, இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நிச்சயமாக அந்தத் துறை சார்ந்த அமைச்சர்களுக்கோ இல்லை மூத்த அமைச்சர்களுக்கோதான் போகும். அதுகுறித்தும் முறையான விசாரணை நடத்தப்படவேண்டும்.

அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல்

எழிலகத்தில் ஏற்கனவே 35 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. வேலூரில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடமிருந்து 2 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. ஆனால், இவர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. 1500, 2000 ரூபாய் லஞ்சம் வாங்கும் மின்பொறியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளைக் கைது செய்து சிறையிலடைப்பவர்கள், மேல்மட்ட அளவில் உள்ள அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? ஏதாவது பிரச்னை என்றால் டிரான்ஸ்பர் செய்கிறார்கள். அது ஒரு தண்டனையா? என அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆதி திராவிடர் நலத்துறையில் இவ்வளவு பணம் லஞ்சம் வாங்குகிறார்கள் என்றால், ஆதிதிராவிட மக்களுக்கு எவ்வளவு பெரிய துரோகம் இந்த ஆட்சியில் இழைக்கப்படுகிறது என்பதை மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

With Inputs from Vikatan e-magazine

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry