டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக கர்வ் (Curvv) என்ற கான்செப்ட் காரை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களான நெக்ஸான் மற்றும் டிகோர் ஆகிய இரண்டு மாடல்களுக்கும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது.
எலெக்ட்ரிக் வாகன சந்தையைப் பொறுத்தவரையில் டூ வீலர் செக்மென்டில் நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் கார் என்று வந்துவிட்டால் குறைவான நிறுவனங்களே எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகின்றன. அதில் முதலிடத்தில் இருப்பது இந்திய நிறுவனமான டாடா மோட்டார்ஸ்தான். எலெக்ட்ரிக் கார் சந்தையில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்துக்கும் மேல் டாடா கைப்பற்றியிருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது புதிதாக கர்வ் (Curvv) என்ற கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுவாக கார் நிறுவனங்கள் புதிய காரை அறிமுகப்படுத்தும்போது முதலில் டீசல், பெட்ரோல் மாடல்களையும் அதன்பின்னர் அதில் சில மாற்றங்களைச் செய்து எலக்ட்ரிக் காராகவும் சந்தைக்கு கொண்டு வருவார்கள். ஆனால் இந்த விஷயத்தில் டாடா ஒரு புதுமையைத் தொடங்கி வைத்திருக்கிறது. கடந்த 6-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட கர்வ் முதலில் எலக்ட்ரிக் காராகவும் அதைத்தொடர்ந்து டீசல், பெட்ரோல் மாடல்களும் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளன.
எஸ்யூவியின் உறுதியையும், கூபே ஸ்டைலையும் கலந்து இந்த காரை முற்றிலும் புதிய டிஜிட்டல் ஸ்டைலில் வடிவமைத்துள்ளதாக டாடா தெரிவித்திருக்கிறது. சொன்னது போலவே கர்வ் காரின் முன்பக்கம் நீளமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. எல்இடி லைட் பார், முக்கோண வடிவிலான எல்இடி ஹெட்லைட்டுகள் என எஸ்யூவியை நினைவுபடுத்துகிறது. இந்த டிஸைன் மாற்றத்தைக் கூடிய விரைவில் தற்போது விற்பனையில் இருக்கும் கார்களிலும் பார்க்க முடியும். எதிர்காலத்தில் இருக்கப்போகும் போட்டியைச் சமாளிக்கும் வகையில் இந்த காரை ஜெனரேஷன் 2 EV கட்டமைப்பில் உருவாக்கப்படவுள்ளது. Internal Combustion Engine பொருத்தப்படுகிறது.
பெரிய பேட்டரிகளை வைப்பதற்கான இடம், டூயல் மோட்டார் செட்டப் மற்றும் ஆல் வீல் டிரைவ் போன்ற வசதிகளை காரில் கொடுப்பதற்கான மாற்றங்களுடன் ஜெனரேஷன் 2 EV கட்டமைப்பானது இருக்கும். பெரிய பேட்டரியை இந்த காரில் கொடுக்க முடியும் என்பதால் அதற்கேற்ற வகையில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் முதல் 500 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம் என டாடா தெரிவித்துள்ளது.
எலெக்ட்ரிக் வாகனத் துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.15,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும், பல்வேறு பிரிவுகளில் 10-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் உள்ளதாகவும் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் மற்றும் டாடா எலெக்ட்ரிக் மொபிலிட்டி-யின் நிர்வாக இயக்குனர், ஷைலேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.
4 பேர் அமரக்கூடிய வகையில் தயாராகும் கர்வ் (Curvv) கான்செப்ட் காரை வரும் 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்குக் கொண்டு வர டாடா முடிவு செய்துள்ளது. மேலும் இது கான்செப்ட் கார் என்பதால் பெயர் உட்பட பல்வேறு விஷயங்களில் மாற்றங்களுடன் இந்த கார் சந்தைக்கு வரலாம். இதன் விலை 20 லட்சம் ரூபாய்க்கு சற்று அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கலாம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry