
மின் கட்டண உயர்வு மற்றும் ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு வழங்குவதை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்ற கடந்த 3 ஆண்டுகளில் 3-வது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்தவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. மின் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் மற்றும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயிலை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கட்சி அமைப்பு ரீதியான 82 மாவட்டங்களிலும் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கழக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, வடசென்னை தெற்கு(கி) மாவட்டத்தின் சார்பில், மாவட்ட கழகச் செயலாளரும், கழக அமைப்புச் செயலாளரும் – முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார் தலைமையில், மின்ட் பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர் இராயபுரம் மனோ உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்று திமுக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோல், தென்சென்னை தெற்கு(கி) மாவட்ட கழகத்தின் சார்பில், மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எம்.கே. அசோக் தலைமையில் வேளச்சேரி காந்தி ரோடில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அம்மா பேரவை இணை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் ஜெ. ஜெயவர்தன், தலைமைக் கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஹரிக்கேன் விளக்குகளை கைகளில் ஏந்தியவாறு திமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.


கண்டன உரை நிகழ்த்திய மாவட்ட கழகச் செயலாளர் எம்.கே. அசோக், மூன்றாவது முறையாக மின் கட்டணத்த உயர்த்தி இருக்கும் முதலமைச்சரே, இப்போது மின் கட்டணம் ஷாக அடிக்கலையா என கேள்வி எழுப்பினார். மின் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மின் கட்டண உயர்வு பற்றி புள்ளிவிவரங்களுடன் விளக்கினார். சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடப்பது பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.


மாநில நிர்வாகிகள் கே.டி. தேவேந்திரன், சரவணன், நாராயண ராவ், சீனுவாசன், தனஸ்ரீ, மாவட்ட நிர்வாகிகள் வேளச்சேரி முருகன், அடையாறு கண்ணன், வி. ஷ்யாம்குமார், பகுதி கழகச் செயலாளர்கள் பி. கணேஷ்பாபு, விஜயபாஸ்கர், சிவசுப்பிரமணியன், ஜெயச்சந்திரன், மூர்த்தி, கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry