ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் வழிகாட்டல் நெறிமுறைகளை புறந்தள்ளி செயல்பட்டு வருகிற, முதலமைச்சரின் அறிவுரையினை அலட்சியப்படுத்தி வருகிற, வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கோடைகால கால பயிற்சி வகுப்பினை கடந்த 1ஆம் தேதியில் இருந்து 10 ஒன்றியங்களின் தலைநகரங்களில் உள்ள வட்டார வளமையங்களில் நடத்தி வருகிறார்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6,7,8,9ம் வகுப்புகளில் படிக்கக்கூடிய மாணவர்கள் கிராமத்தில் இருந்து வட்டார வள மையங்களில் நடைபெறும் பயிற்சிக்கு கொளுத்தும் வெயிலில் அன்றாடம் சென்று வர வேண்டும். வட்டார வள மையத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை பயன்படுத்தி தலைமையாசிரியர்களுக்கு அழுத்தம் கொடுத்து அந்தப் பயிற்சியினை நடத்தி வருகிறார்கள். வெயிலின் தாக்கத்தால், முதல் நாள் பயிற்சியில் கலந்து கொண்ட பல மாணவர்கள், மறுநாள் வர முடியவில்லை. கோடைகால பயிற்சிக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆசிரியர்களும் அவ்வப்போது உடல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இந்த பயிற்சி வகுப்பினை நிறுத்த உத்தரவிடுமாறு தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளித்திருந்தோம். பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் புலனப்பதிவு வழியாக தெரியப்படுத்தி இருந்தோம். இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனரும், தனியார் பள்ளிகள் இயக்குனரும் இணைந்து, கொளுத்தும் வெயிலில் சிறப்பு வகுப்பா? கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உடனடியாக எழுத்துப்பூர்வமாக எச்சரிக்கையாக அனுப்பி இருக்கிறார்கள். காட்சி ஊடகங்களிலும், நாளேடுகளிலும் இந்தச் செய்தி வெளிவந்துள்ளது.
இந்தப் பயிற்சிகள் இல்லாமல், குறள் ஒப்புவித்தல் என்ற பெயரால், சிவகாசிக்கு பக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 260 மாணவர்கள், 60 தமிழ் ஆசிரியர்களைக் கொண்டு நேற்று தொடங்கி பத்து நாட்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி என்று அறிவித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நடத்தி வருகிறார். மாணவர்களை வீட்டுக்கு அனுப்பாததால், ஆசிரியர்களையும் 10 நாட்களுக்கு அந்த இடத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
விருதுநகர் மாவட்டம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் இயங்குபவர்தான் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர். மாநிலம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில், வெப்ப அலையின் கொடுமை அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அனுமதி இல்லாமல், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவராகவே ஒரு கொள்கை முடிவு எடுத்து ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகளைக் கொண்டு கோடை பயிற்சி வகுப்பை நடத்த சொன்னது யார்?
யாருடைய அனுமதி பெற்று இவர் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்? குளிர் சாதன அறையை விட்டு வெளியே வராதவர்கள், கோடை விடுமுறையில் எங்கள் பிள்ளைகளை அன்றாடம் முப்பது கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து வசதி இல்லாத ஒன்றியங்களின் தலைமை இடங்களுக்கு அனுப்பி பயிற்சி வகுப்பு நடத்தி சித்திரவதை செய்வது ஏன்? இவர்கள் வீட்டுப் பிள்ளைகளை 100 அடி பக்கத்தில் உள்ள மையத்துக்கு இந்த வெயிலில் பயிற்சிக்கு அனுப்புவார்களா?
பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கையையும் மீறி திட்டமிட்டபடி பயிற்சி நடைபெறும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் அறிவித்துள்ளார். பயிற்சிக்கு செல்லும் ஒரு மாணவனுக்கு பாதிப்பு ஏற்படுமேயானாலும் மாவட்ட ஆட்சியர்தான் பதில் சொல்ல வேண்டும், பள்ளிக் கல்வித்துறையும் பதில் சொல்ல வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக பள்ளிக்கல்வித்துறையின் அமைச்சராக இருக்கக்கூடிய அன்பில் மகேஸ் பொய்யாமொழி இதற்கு என்ன விளக்கம் சொல்ல போகிறார்?
தனது கட்டுப்பாட்டில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பயிற்சியினை நிறுத்திட வலியுறுத்துகிறோம். இந்த பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் நாளையும் தொடர்ந்து நடத்தினால், கல்வித்துறை நிர்வாகத்தினை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமே ஒப்படைத்துவிடலாமா?
மாநில முதலமைச்சரின் அறிவுரையினை புறந்தள்ளிவிட்டு, பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கையினை புறக்கணித்துவிட்டு, அதிகார வரம்பினை மீறி மனிதநேயமற்ற உணர்வுடன் செயல்பட்டு வருகின்ற ஒரு மாவட்ட ஆட்சியரை எமது 51 ஆண்டு கால பொது வாழ்வில் முதன்முறையாக சந்திக்கிறேன்.
சுட்டெரிக்கும் வெயிலையும், வெப்ப அலையையும் பொருட்படுத்தாமல் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்படாவிட்டால், பயிற்சிக்கு செல்லக்கூடிய மாணவர்கள், ஆசிரியர்களை புகைப்படங்கள் எடுத்து அனைத்து ஊடகங்களுக்கும் தெரியப்படுத்திட உள்ளோம். ஆட்சிக்கு கட்டுப்படாத மாவட்ட ஆட்சியர் என்ற தலைப்பில் செய்தியாளர்களை அழைத்து பேட்டியும் கொடுத்திட உள்ளோம் என்பதை மாணவர்கள் மீது கொண்டுள்ள, அரசின் மீது கொண்டுள்ள அக்கறை உணர்வுடன் வெளிப்படுத்துகிறோம்.” இவ்வாறு ஐபெட்டோ அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry