ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்களது இதயக் குமுறலின் ஒலி கேட்கவே இல்லையா?
முதிர்ச்சியற்ற நிர்வாகமே காரணம்
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முதிர்ச்சியற்ற நிர்வாகமே ஆசிரியர்களின் தொடர் போராட்டங்களுக்குக் காரணமாகி வருகிறது என்பதை, எங்களைப் பாதுகாத்து வந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திலிருந்து கூறுகிறோம், இது சத்தியம்! சத்தியம்.! சத்தியம்..! வாய்ப்பளித்தால் நீதிமன்றத்தில் ஏறி நின்று, நாங்கள் சொல்வது எல்லாம் உண்மையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று சாட்சி சொல்லவும் தயாராக உள்ளோம்.
மரபை அழிக்கத் துணியலாமா?
தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவான டிட்டோஜாக் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தியபோது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஏற்றுக் கொண்ட 12 கோரிக்கைகளுக்கு இதுவரை அரசாணைகள் எதுவும் வெளிவரவில்லை. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மரபை அழிக்கத் துணிகிறார். 60 ஆண்டுகளாக தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் ஒன்றிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
Also Read : ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை மறப்பது நியாயமா? போராட்ட களத்தில் உள்ள ஆசிரியர்கள் குமுறல்!
அதனை மாநில அளவில் முன்னுரிமைப் பட்டியலாக்கி, நடைமுறைப்படுத்தி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வினை நடத்த வேண்டுமென்ற வணிக உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டது தான் அரசாணை எண் 243, நாள் 21.12.2023 ஆகும். இந்த அரசாணையால் 10 சதவீதம் பேர் மட்டுமே நன்மை அடைவார்கள், 90 சதவீதம் பெண் ஆசிரியைகள், மாறுதல் – பதவி உயர்வு வாய்ப்பினை இழப்பார்கள் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் மனந்திறந்து கலந்துரையாடினோம், வலியுறுத்தினோம், செவி மடுக்கவே இல்லை.
அரசாணை எண்.243 படுத்தும் பாடு
இரண்டு சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்த, அரசாணை எண் 243க்கான நன்றி அறிவிப்பு மாநாட்டில் பங்கேற்று, ‘நான் இருக்க பயமேன்’ என்ற வாக்குறுதியினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அளித்து வந்துள்ளார். நடைபெற்ற மாறுதல் கலந்தாய்வில் சத்தியமங்கலம், தளி, தாளவாடி, மேட்டூர், ஏற்காடு மற்றும் குக்கிராமங்களில் உள்ள ஆசிரியர்கள் மாறுதல் பெற்று சென்று விட்டார்கள்.
140 பிள்ளைகள் படித்துவரும் சத்தியமங்கலம் மலைப்பகுதியில் ஓராசிரியர் கூட பள்ளியில் பாடம் நடத்த இல்லை. ஒன்றியத்திற்கு 100, 80, 70, 60 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுதான் அரசாணை எண்.243 படுத்தும் பாடு. அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததால் பெற்றோர்கள் சுயநிதிப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கும் கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
நிறைவேற்றத் தகுந்த கோரிக்கைகள்தானே?
பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துங்கள்; இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதிய நிர்ணயம் செய்யும் வரை இடைக்கால நிவாரணம் PPயுடன் வழங்கிடுங்கள்; முடக்கப்பட்ட சரண் விடுப்புப் பயன் தொடரவேண்டும்; ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு, பழைய நடைமுறைப்படியே மீண்டும் வழங்க வேண்டும்; டிட்டோ ஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒப்புதல் அளித்தபடி அரசாணைகள் வெளியிடப்பட வேண்டும்;
ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனைப் பாதுகாத்திட, அனைத்து காலிப் பணியிடங்களிலும் நிரந்தரம் அல்லது தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து மாணவர்களின் கல்வி நலனை பாதுகாத்திட வேண்டும்; தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நிதித்துறை அரசாணைப்படி தேர்வு நிலைக்கு வழங்கப்பட்ட ரூ.5400 தர ஊதிய தணிக்கைத் தடையினை உடனடியாக இரத்து செய்து அறிவித்திட வேண்டும்; உள்நோக்கத்துடன் தடை செய்யப்பட்டுள்ள தணிக்கைத் தடையினை உடன் இரத்து செய்திட வேண்டும்; அனுமதி பெறாமல் கூடுதல் கல்வித் தகுதியினை உயர்த்திக் கொண்டவர்களின் பின்னேற்பு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்பட நிறைவேற்றத் தகுந்த 31 அம்ச கோரிக்கைகளை கேட்டுத்தானே டிட்டோஜாக் போராடி வருகிறது.
ஏறெடுத்தும் பார்க்கலையே..! நம்பிகை இழந்து நிற்கிறோமே..!
கேளுங்கள் தரப்படும்! தட்டுங்கள் திறக்கப்படும் என்றார் இயேசுபிரான். தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்று தானே கேட்கிறோம். சொன்னீங்களே! செய்தீங்களா! சொன்னதையே செய்யல! சொல்லாததையா செய்வீங்க! எங்களரசு, எங்களரசு என்றோமே, ஏறெடுத்தும் பார்க்கலையே! நமது அரசு, நமது அரசு என்றோமே, நம்பிகை இழந்து நிற்கிறோமே!
மூன்று நாள் முற்றுகைப் போராட்டத்திலும் அன்றாடம் 5 ஆயிரம் பேருக்கு குறையாமல், அதாவது 15 ஆயிரம் பேருக்குக் குறையாமல் போர்க்களத்தில் நின்றிருக்கிறார்கள். தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் பங்கேற்றோர் 70 ஆயிரம் பேர். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் 30 ஆம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையின்போது ஆகஸ்டு மாதத்திற்குள்ளாக அரசாணை எண் 243-க்கு தீர்வு காண முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்கள். இணக்கமான நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு வரும் என்ற நம்பிக்கையில் ஒட்டுமொத்த ஆசிரியர்களும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
முதலமைச்சர் மீது நம்பிக்கை
பொதுத் தேர்தல் அறிவிப்பு வரும் நாள் வரை ஆசிரியர்கள் போராட்டக் களத்தில் தான் நிற்க வேண்டுமா? என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும். எங்கள் போராட்டம் அரசுக்கு எதிரானது அல்ல, எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணுவதற்கான போராட்டமாகும். “நான் செய்யாமல் வேறு யார் உங்களுக்கு செய்யப் போகிறார்கள்”, இது முதலமைச்சரின் சந்திப்பில் கேட்ட கொள்கை வரிகள். எங்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண முதலமைச்சர் முன் வருவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry