ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்துவதன் அவசியத்தை விளக்கும் ஐபெட்டோ !

0
143
The Unified Pension Scheme, which does not even pay the savings of government employees, should not be implemented. AIFETO Annamalai Urge the Central Government to implement the long standing demand of the Old Pension Scheme | Getty Image.

எந்தவித பிடித்தமும் மேற்கொள்ளாமல் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை, கம்முட்டேஷன் (Commutation – ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை ஒப்பளித்து பணம் பெற்றுக்கொள்ளுதல்) போன்ற பலன்களைக் கொண்ட பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றுத் திட்டமாக UPSஐ ஒருக்காலும் ஏற்க முடியாது என்பதை ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS(AIFETO) சார்பாக மத்திய அரசுக்கு அழுத்தமாக பதிவு செய்கிறோம் என ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான அண்ணாமலை கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 24.08.2024 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், UPS எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ‘மத்திய அரசு ஊழியர்கள் 23இலட்சம் பேர் பயன்பெறுவார்கள், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும். இது நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது’ என பிரதமர் மோடி கூறுகிறார்.

AIFETO Annamalai

மட்டுமல்லாமல், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு கண்ணியத்தையும், நிதி பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. அவர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான எங்களின் அர்ப்பணிப்பும் அதில் இணைந்துள்ளது என்கிறார் பிரதமர்.

அதேநேரம் பிரதமரை சந்தித்துள்ள சில சங்கங்களின் பிரதிநிதிகள், எந்தவித பங்களிப்பும் பெறாமல் சிவில் சர்வீஸ் விதிகளின்படி ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தித்தினை வழங்குகிற பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள சிறப்பான அம்சங்கள், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில்(UNIFIED PENSION SCHEME) இல்லை, எனவே இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.

Also Read : பூசணி விதைகளில் மூழ்கிக் கிடக்கும் மருத்துவ மகிமை! ஆச்சரியம்… ஆனால் உண்மை..! வயாகரால்லாம் பக்கத்துலயே நிக்காது..!

பழைய ஓய்வூதியத் திட்டம்(OPS), தேசிய ஓய்வூதியத் திட்டம்(NPS), ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்(UPS) பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

1) பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS):- எவ்வித பங்களிப்பும் செலுத்தாமல், ஓய்வூதியம் 50%+ அகவிலைப்படி, கம்முடேஷன் ஆகியவை உண்டு. இதனுடன் GPFம் பெறலாம். ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வின்போதும் ஓய்வூதியம் உயரும். ஆண்டுக்கு ஒருமுறை GPF-ல் கடன் பெறலாம். பகுதி நேர முன்பணமும் பெறலாம். விருப்ப ஓய்வில் சென்றாலும் ஓய்வூதியம் பெறலாம். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000 + அகவிலைப்படி. குடும்ப ஓய்வூதியம் – ஓய்வூதியத்தில் 30%.

2) தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS):- 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து பிரதமர் வாஜ்பாய் காலத்தில் அமல்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டம் பிறகு தேசிய ஓய்வூதியத் திட்டமாக மாறியது. National Pension Scheme. ஓய்வூதியம் உறுதிபடுத்தப்படவில்லை. உறுப்பினர்களின் பங்களிப்பு 10%, மத்திய அரசு 14% பங்களிப்பு. ஓய்வு பெறும்போது மத்திய அரசு பங்களிப்புத் தொகையுடன் சேர்த்து வரும் மொத்தத் தொகையில் 60 விழுக்காட்டினை வட்டியுடன் வரி இல்லாமல் சேர்த்து வழங்கப்படும். மீதமுள்ள 40% தொகை பங்குச் சந்தையில் செலுத்தப்பட்டு, அதிலிருந்து வரும் வட்டியினை சேர்த்து குறைந்தபட்சம் ஓய்வூதியம் வழங்கப்படும்.

அகவிலைப்படி உயர்வுக்கேற்றவாறு ஓய்வூதியம் உயராது. சேர்த்து வைத்த பணத்தில் கடன்பெற முடியாது. ஓய்வு பெறும்போது பணிக்கொடையினை மத்திய அரசு உரிய விதிமுறைகளுடன் வழங்கும். இறந்து போனாலும் பணிக்கொடையினை மத்திய அரசு வழங்கி வருகிறது. விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு NPS திட்டத்தில் சேர்த்து வைத்த பணத்தில் 20% வழங்கப்படும். 80% சேமிப்பில் வைத்து ஓய்வூதியம் வழங்கப்படும்.

3) ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம்(UPS) :- ஓய்வூதியம் 50%+ அகவிலைப்படி, உறுப்பினர்களின் பங்களிப்புத்தொகை 10%, அரசு பங்களிப்பு – அடிப்படை ஊதியம் + அகவிலைப்படியில் 18.5%. இதுவும் மாறுதலுக்கு உட்பட்டது. அதாவது சுகன்யா சம்ரிதி திட்டம், பிபிஎஃப் மற்றும் பிற மத்திய சேமிப்பு திட்டங்களைப் போலவே சதவிகிதம் குறைக்கப்படலாம். மத்திய அரசு விதிகளின்படி பணிக்கொடை 25 லட்சம் உண்டு. சேர்த்து வைத்த பணத்தில் கடன்பெறுவது தொடர்பாக குறிப்பிடப்படவில்லை. GPF இல்லை. ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயரும் போது ஓய்வூதியமும் உயரும். பணிக்காலத்தில் ஆசிரியர் (அ) அரசு ஊழியர் ஒருவர் சேமித்து வைத்திருந்த தொகை சுமார் 1 கோடியாக இருந்தாலும் கூட அந்தத்தொகை முழுவதும் பென்ஷனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். திருப்பித்தர மாட்டாது.

மத்திய அரசு கூறும் UPS ஓய்வூதியப் பலன் :- ஓய்வு பெறும்போது கிராஜுவிடி எனப்படும் பணிக்கொடையுடன் கூடுதலாக ரொக்கப் பலனும் கிடைக்கும். பணி ஓய்வின்போது பெற்ற மாதச் சம்பளத்தில் அடிப்படை ஊதியம் மற்றும் D.A. ஆகியவற்றில் 10-ல் ஒரு பங்கு ரொக்கப் பலனாக கிடைக்கும். நிறைவு செய்த ஒவ்வொரு ஆறு மாத பணியின் அடிப்படையில் இது வழங்கப்படும். இதனால் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் குறையாது.

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒன்றிய அரசு பங்களிப்பு 14% வழங்கப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் 18.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான குறைந்தபட்ச தகுதியாக 25 ஆண்டுகள் பணிக்காலம் இருக்க வேண்டும். 10 – 25 ஆண்டுகள் பணிக்காலம் இருந்தால், விகிதாச்சார அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் 60% ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

Also Read : ‘இந்த’ பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காயை சாப்பிடவே சாப்பிடாதீங்க..! Side Effects of Ladies Finger!

விருப்பம் அளித்தல் :- தேசிய ஓய்வூதியத் திட்டம் அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் இரண்டில் ஒன்றை தேர்வுசெய்ய ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்தப் புதிய திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள் நிலுவைத் தொகையுடன் மார்ச் 31, 2025வரை ஓய்வு பெற்றவர்களுக்கும் பொருந்தும். UPS தொடர்பாக நிதி அமைச்சகமோ அல்லது ஓய்வூதியம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைச்சகமோ இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. மத்திய அரசின் PIB தான் (Press Information Bureau) UPS தொடர்பான செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டுமென்று கடந்த 20 ஆண்டுகளாக டெல்லி ஜந்தர்மந்தரில் பேரணி, ஆர்ப்பாட்டம், நாடாளுமன்ற முற்றுகை என தொடர்ந்து போராடி வருகிறோம். மேற்கு வங்கத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்த தொடங்கி விட்டனர். ஐந்து மாநில சட்டசபை தேர்தல் வரவிருக்கும் சூழ்நிலையில், தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நாங்கள் பழைய ஓய்வூதியத்திட்டத்தினை மீண்டும் அமல்படுத்துவோம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

மத்திய அரசின் கவனத்தை பெரிய அளவில் ஈர்க்கும் வண்ணம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை மாற்றி அமைத்திட, அனைத்து மாநிலங்களிலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து டெல்லியை மையப்படுத்தியும், மாநில தலைநகரை மையப்படுத்தியும் போராட்ட களம் காண்போம். வெற்றி கிட்டும்வரை களத்தில் கரம் கோர்த்து நிற்போம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry