ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து, ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் -4 2024 வரை அமலில் இருப்பதால் அமைச்சர்கள் தங்களது அலுவலகம் வருவதைத் தவிர்த்து வருகிறார்கள். தலைமைச் செயலாளர் தொடங்கி, தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வரும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், பார்வையாளர்களை சந்திப்பதற்கு அனுமதியளிப்பதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அசுர வேகத்தில் அனுமதி ஏன்?
தேர்தல் நடத்தை விதிகளை இவ்வாறு பின்பற்றும் நிலையில், மே 13ஆம் தேதி விண்ணப்பம் பெறுவதில் தொடங்கி, 2024-25 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வினை நடத்துவதற்கு, கடித எண் 3835/ பக 5 (1) நாள் 29.4.2024ன்படி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அனுமதி வழங்கி இருப்பதை முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டும்.
Also Read : வெயில் காலத்தில் தயிர்சாதம் சாப்பிடலாமா? கோடை காலத்தில் புளித்த உணவுகளை உண்பது சரியானதா?
60 ஆண்டு காலமாக தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் ஒன்றிய அளவில் பின்பற்றப்பட்டு வந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பினை சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளாமல், மாநில அளவில் முன்னுரிமை பட்டியல் – மாறுதல் – பதவி உயர்விற்கு நடைமுறைப் படுத்துவதற்கு, அரசாணை எண் 243 நாள் 21.12.2023ஐ வெளியிட்டு, அவசரமாக மாறுதல் கலந்தாய்வினை அமல்படுத்தி வருவதை தமிழக ஆசிரியர் கூட்டணி உள்பட தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் அழுத்தமான எதிர்ப்புணர்வினை வெளிப்படுத்தி வருகிறோம்.
பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ள ஆசிரியர்கள் – குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பாதிப்பினை ஏற்படுத்தவல்ல அநீதி இழைக்கும் அரசாணை ஆகும். மரபினை, வரலாற்றினை சேதாரப்படுத்தி வெளிவந்துள்ள அரசாணையாகும். ஆட்சிக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் ஒட்டுமொத்த ஆசிரியர் மத்தியில் வெறுப்புணர்வை உச்சம் தொடச் செய்து வரும் அரசாணை ஆகும்.
நேரில் வலியுறுத்தல்
இந்நிலையில், தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில், தலைமைச் செயலகத்தில் இன்று (10.5.2024) பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சிறப்பு நேர்முக உதவியாளர், நேர்முக உதவியாளர்- 1 ஆகியோரை சந்தித்து ஆசிரியர்களின் உணர்வுகள் எடுத்துரைக்கப்பட்டது. அப்போது அரசாணை எண் 243-ஐ மறுபரிசீலனை செய்து திருத்திய அரசாணை அல்லது தெளிவுரையினை வெளியிடாத வரை தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வினை ஒத்தி வைத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
10 ஆண்டுகாலமாக இடைநிலை ஆசிரியர் நியமனம் நடைபெறவில்லை. உச்ச நீதிமன்றத்தில் பதவி உயர்வு வழக்கு மேல்முறையீட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது. பணி நியமனம், பதவி உயர்வு இல்லாத நிலையில், மாணவர்கள் சேர்க்கை 3 லட்சத்து 50 ஆயிரத்தினை தாண்டியுள்ளது. தற்போது பள்ளிகள் திறக்கவில்லை, பள்ளிகள் திறந்த உடன் மாணவர்கள் சேர்க்கை மேலும் நடைபெற வாய்ப்புண்டு.
பாழாகும் கல்வி நலன்
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான கலந்தாய்வினை ஒத்திவைத்து, அறிவிப்பினை வெளியிட வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் எங்களது மனம் திறந்த உணர்வினை தெரிவிக்குமாறு நேர்முக உதவியாளர்களிடம் கேட்டுக்கொண்டோம். மீண்டும் அதிகாரப் பார்வையில் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றால், கலந்தாய்வு நடைபெறும் தேதியன்று, மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஆசிரியர்கள் இதயக் குமுறலாக கோரிக்கை முழக்கங்களுடன் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்திட திட்டமிட்டுள்ளோம்.
தொடர் மறியல் போராட்டம்
மாறுதல் கலந்தாய்வினை ஒத்திவைப்பதுடன், அரசாணை எண் 243ஐ மறுபரிசீலனை செய்து திருத்திய அரசாணை வெளியிட வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக் ) சார்பாக 12 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து முடிவெடுத்து அறிவித்துள்ளார்கள். தமிழக ஆசிரியர் கூட்டணி முழு சக்தியினையும் இணைத்துக் கொண்டு போராட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது எனவும் முடிவெடுத்துள்ளோம் என்பதையும் அமைச்சரது நேர்முக உதவியாளர்களிடம் தெரிவித்து வந்துள்ளோம். மட்டுமல்லாமல், தமிழக ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை விண்ணப்பங்களையும் நேரில் கொடுத்துதுள்ளோம்.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களுக்கு மனம் திறந்து இந்தக கருத்தினை பதிவு செய்கிறோம். தாய்மண் தமிழகத்தை சார்ந்தவர் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பொறுப்பு வகிக்கும் போது, தீராப்பழியினையும், வரலாற்று சேதாரத்தினையும் ஏற்படுத்தும் வகையிலான அரசாணையை திருத்திடும் வாய்ப்பினை தனதாக்கிட, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தொடக்கக்கல்வி இயக்குனர், பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோருடன் கலந்துரையாடி தீராப்பழியிலிருந்து விடுவித்துக் கொள்ளலாம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry