சுட்டெரிக்கும் வெயில், வெப்ப அலையை பொருட்படுத்தாமல், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் உத்தரவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் 25ம் தேதி முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், “வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ மாணவிகள், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாக பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுகாக்க வேண்டும். பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் எனவும், குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்களை மிகக் கவனமாக பாதுகாக்க வேண்டும்” எனவும் கேட்டு கொண்டுள்ளார்.
இந்திய வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், “தமிழகம், புதுச்சேரி உள்பட ஒன்பது மாநிலங்களுக்கு வெப்ப அலை மற்றும் அனல் காற்று வீசக்கூடும். தமிழகத்தில் 111 டிகிரி ஃபாரன்ஹீட்டை வெயில் தாண்டும். எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இதை கவனத்தில் கொள்ளாததே சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
இதுகுறித்து ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் அனல் பறக்கிறது. 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம், 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை; வெயிலில் வெளியே வர வேண்டாம் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரை.
ஆனால், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குழந்தைகளின் உடல் பாதுகாப்பைப் பற்றி கிஞ்சித்தேனும் கவலைப்படாமல், மே 1 முதல் 11ஆம் தேதி வரை கோடைக்கால சிறப்பு பயிற்சி என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆணை வழங்கி வகுப்புகளை நடத்துகிறார்.வானிலை எச்சரிக்கை பற்றி கவலைப்படாத மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் அறிவுரையினைப் பற்றி கவலைப்படாத ஆட்சியர், வெயிலில் போகாமல் குழந்தைகளை அன்றாடம் பாதுகாத்து வரும் பெற்றோரை கவலைக்குள்ளாக்கி விட்டு, வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு கெடுபிடி தந்து பயிற்சி வகுப்பினை நடத்தி வருகிறார்.
கோடைக் காலத்தில் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்தாகிவிட்டது. வெயிலின் வெப்பத்தால் பள்ளி திறக்கும் நாளை இன்னும் அறிவிக்கும் நிலையில் இல்லை. இந்த நிலைமையில் மாணவர்கள் மீது கல்வி அக்கறையா? அல்லது பயிற்சி வகுப்பின் மூலம் ஏதாவது எதிர்பார்த்து செய்கிறார்களா? சுட்டெரிக்கும் வெயில், வெப்ப அலையால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்பட்டால் ஆட்சியர் பொறுப்பேற்பாரா?
விருதுநகர் மாவட்டத்தில் இருக்கின்ற இரண்டு மூத்த அமைச்சர்கள் மீது பெற்றோரும் ஆசிரியர்களும் சங்கடப்படுகிற சூழ்நிலையை ஆட்சியர் உருவாக்குகிறார். மே 1 தொழிலாளர் தினம் என்று கூட மாவட்ட ஆட்சியருக்கு தெரியாதா? அன்றைய தினம் பயிற்சி வகுப்பை ஆரம்பிப்பதா? முதலமைச்சரின் அறிவுரையினைப் பற்றி கவலைப்படாத ஒரு மாவட்ட ஆட்சியர், வானிலை அறிவிப்பைப் பற்றி கவலைப்படாத ஒரு ஆட்சியர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பயிற்சி வகுப்பினை ரத்து செய்துவிட்டு மாணவர்களைப் பாதுகாத்திட வேண்டுமாய் தமிழ்நாடு முதலமைச்சரை, தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பிலும், ஒரு மூத்த இயக்கப் பொறுப்பாளர் என்ற முறையிலும் பெரிதும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளா்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry