அரசுப் பள்ளிகளை பலவீனப்படுத்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு பாராட்டு விழாவா? அண்ணாமலை சுளீர் கேள்வி!

0
498
AIFETO Annamalai urges Chief Minister to reconsider the function to encourage privatisation.

ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் 2023- 2024 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்விலும், 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்விலும் 100% தேர்ச்சி பெற்ற மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் நிர்வாகிகளையும், பள்ளி முதல்வர்களையும் ஆசிரியர்களையும் அழைத்து ஊக்குவிப்பதற்காக பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்க இருக்கிறார்கள் என்ற தகவலினை தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் சார்பில் தனியார் பள்ளி இயக்குனர் செய்திக் குறிப்பாக வெளியிட்டுள்ளார்.

அமைச்சகம் ஆணையிடுகிறது, அலுவலர்கள் அமல்படுத்துகிறார்கள். அரசுப் பள்ளிகளின் பாராட்டு விழாவில் தலைமையாசிரியர்கள் மட்டும் அழைக்கப்பட்டார்கள். பாட ஆசிரியர்கள் பள்ளி ஆசிரியர்கள் அழைக்கப்படவில்லையே..? கல்வித்துறை வரலாற்றில் முதல்முறையாக கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புகளில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும், தமிழில் 100% தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் அழைத்து சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஐம்பெரும் விழாவாக பள்ளிக்கல்வித்துறை நடத்தி வரலாற்றில் இடம்பெற்றது.

ஐபெட்டோ அண்ணாமலை

விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டு சான்றிதழினை வழங்கி புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்கள். ஆனால் பள்ளி ஆசிரியர்கள், பாட ஆசிரியர்களை அழைக்கப்பெறவில்லை. புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், உயர் கல்விப் பயின்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வரவேற்பினைப் பெற்றுள்ளது. மாணவர்கள் சேர்க்கைக்கு வழிகாட்டுகிறது. இதயம் குளிர பாராட்டுகிறோம்..!

திராவிட மாடல் அரசு முதன் முறையாக இலவச கட்டணமில்லா அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி நலனை புறந்தள்ளி, உயர்தரக் கல்விக் கட்டணம் வசூலித்து, வணிக நோக்கில் பள்ளிகளை நடத்தி வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளை ஊக்குவிக்கும் பாராட்டு விழா நடத்துவது, அரசுப் பள்ளியில் படித்து வரும் ஏழை எளிய குடும்பத்து பிள்ளைகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் ஏற்படுத்த முனையும் ஆபத்தாகும்.

Also Read : நீட் தேர்வும் வேண்டாம், நியமனத் தேர்வும் வேண்டாம்! டெட் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்த தமிழக அரசுக்கு ஐபெட்டோ வலியுறுத்தல்!

அரசுப் பள்ளிகளில் 12 ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமனம் இல்லை. நீட் தேர்வை எதிர்க்கிறோம்..! ஆனால் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் நியமனத் தேர்வினை வலியுறுத்துகிறோம்..! இதுமட்டுமா, தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் பலரை நியமனம் செய்து, அவர்கள் கல்வித்துறையில் வணிக நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள்.

தனியார் மயத்தை ஊக்குவிப்பதற்காக நடத்தும் விழாவினை முதலமைச்சர் மறுபரிசீனை செய்ய வேண்டுமெனவும், அரசுப் பள்ளிகளை பாதுகாத்திட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முன்வருமாறும், தமிழக ஆசிரியர் கூட்டணி அமைப்பின் மூத்த தலைவர் என்ற முறையிலும், AIFETO அமைப்பின் அகில இந்தியச் செயலாளர் என்ற முறையிலும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry