முதலமைச்சர் வாக்குறுதிப்படி அகவிலைப்படி உயர்வினை உடனடியாக அறிவிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு ஐபெட்டோ வலியுறுத்தல்!

0
246
அமைச்சர் தங்கம் தென்னரசு, ஐபெட்டோ அண்ணாமலை

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை, அகவிலைப்படி தொடர்பாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “தாங்கள் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தங்களின் முன்னிலையில் அகவிலைப்படி உயர்வினை முதலமைச்சர் அறிவித்தபோது, இனி மத்திய அரசு அகவிலைப்படி அறிவிக்கிற போதெல்லாம் தமிழ்நாடு அரசு அகவிலைப்படியினை உயர்த்தி அறிவிக்கும் என்ற உறுதியினையும் வெளிப்படுத்தி இருந்தார்.

அப்போது, தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் நாங்கள் நேரில் சந்தித்தபோது, எங்கள் மகிழ்ச்சியினையும், பாராட்டினையும் பெருமிதத்துடன் தங்களுக்கு தெரிவித்துக் கொண்டோமே! தாங்களும் ஒரு இனம் தெரியாத உரிமை உறவுடன் எங்களுடன் கலந்துரையாடி பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது எப்படி ஆலோசனைகளை வழங்கி வந்தீர்களோ, அதே போல் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள காலத்திலும், அடிக்கடி நேரில் சந்தித்து ஆசிரியர்களுடைய பிரச்சினைகளை தீர்வு காண்பதற்கு ஆலோசனைகளை சொல்லுங்கள் என்று கரம்பற்றி சொன்னபோது எங்கள் இதய உணர்வுகள் நம்பிக்கையுடன் பூத்துக் குலுங்கியது.

மத்திய அமைச்சரவை 4 சதவீத அகவிலைப்படி உயர்வினை, அதாவது 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தி ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் நிதி செலவினத்துறையில் அதற்கான குறிப்புகளை வெளியிட்டுள்ளார்கள்.

மத்திய அரசின் அரசாணை வெளிவராவிட்டாலும், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலினை பார்வைக்கு எடுத்துக் கொண்டு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், 01.07.2023 முதல் நிலுவைத் தொகையுடன் 4% அகவிலைப்படி உயர்வினை அறிவித்து ஆணை வழங்கியுள்ளார்கள். அகவிலைப்படி தொடர்பாக கோரிக்கை வைத்தாலும் கோரிக்கை வைக்காவிட்டாலும், இந்த முறை 01.07.2023 முதல் நிலுவை தொகையுடன் 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

மறைந்த கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது முதுகுத் தண்டுவட பிரச்சினை காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த சமயத்தில் மத்திய அரசு அகவிலைப்படியினை உயர்த்தி அறிவித்தது. நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன், கருணாநிதியை சந்திப்பதற்கு சென்ற போது, மத்திய அரசு அகவிலைப்படி உயர்வினை அறிவித்து விட்டார்கள். எந்த சங்கமாவது அகவிலைப்படி உயர்வினை கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்களா? என்று கேட்டுள்ளார்.

Also Read : உங்கள் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் டிஜிட்டல் புத்தகம்! Know what’s better for your heath? – a digital book or a print book?

இதுவரை எந்த சங்கமும் அகவிலைப்படி உயர்வு கேட்டு அறிக்கை வெளியிடவில்லை என்று நிதித்துறை செயலாளர் பதிலளித்துள்ளார். அப்படியானால் சங்கங்கள் அகவிலைப்படி உயர்வு கேட்பதற்கு முன்பாகவே அகவிலைப்படி உயர்வினை அறிவித்து ஆணையினை வெளியிடுங்கள் என்று கருணாநிதி உத்தரவிட்டவுடன், நிதித்துறை சார்பில் உடனடியாக ஆணையினை வெளியிட்டு பெருமை சேர்த்தார்கள். அந்த நிகழ்வு இன்றளவும் வரலாற்றுப் பதிவில் உள்ளதை தாங்கள் அறியாத ஒன்றல்ல.

ஒடிசா முதலமைச்சர் வரிசையில் தமிழ்நாடு முதலமைச்சரும் உடனடியாக மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வினை நிலுவைத் தொகையுடன் உயர்த்தி ஆணை வழங்கினால்… தாங்கள் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள காலத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கை ஒளி ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையும் என்று நீண்ட காலம் பொது வாழ்வில் தங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற முறையில் தங்களை பெரிதும் வேண்டுகிறோம்.

இது கோரிக்கை அல்ல..! நம்பிக்கை உணர்வினை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பளித்திட வேணுமாய் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு வா. அண்ணாமலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry