அரசுக்கு ஆதரவு மாநாடா? அதிருப்தியை சேர்க்கும் மாநாடா? – ஏற்பாட்டாளர்களை எச்சரிக்கும் ஐபெட்டோ! 🔥

0
247
Teachers Raise Concerns Over TAPS Scheme Ahead of Feb 8 Meet
Ahead of the February 8 teachers’ conference in Chennai, concerns are rising over the TAPS pension scheme, CPS transition, and unresolved demands. AIFETO cautions that growing dissatisfaction could shape the event.

ஐபெட்டோ (AIFETO) தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கை: ஜாக்டோ ஜியோ சார்பாக கடந்த 27.01.2026 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழு கூட்டத்தில், “பிப்ரவரி 8-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் உரிமை மீட்பு மாநாடு நடைபெறும், அதில் முதலமைச்சர் கலந்து கொள்வார்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 10% பிடித்தத்தை மறுபரிசீலனை செய்யக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், கள நிலவரம் வேறாக உள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர்களில் 10 பேர் மட்டுமே கையொப்பமிட்டுள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள், பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் போன்றே ‘TAPS’ திட்டத்தைக் கொண்டு வந்ததற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு இது என்கிறார்கள்.

CPS-ஆ? TAPS-ஆ? எது சிறந்தது?

பத்து சதவீதப் பங்களிப்பு பிடித்தம் இல்லை என்றால் ஆசிரியர்கள் இதைக் கொண்டாடி மகிழலாம். ஆனால், 20 முதல் 39 ஆண்டுகள் பணிக்காலம் உள்ளவர்கள், “பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதில் கொண்டு வரப்பட்ட இந்த TAPS திட்டத்தை விட CPS பரவாயில்லை” என்று சொல்லும் அளவுக்கு அதிருப்தியில் உள்ளனர்.

கடந்த கால படிப்பினைகள்:

2022 செப்டம்பர் 10-ல் சென்னையில் நடந்த ‘வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில்’, முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போதே எதிர்பார்த்த அறிவிப்புகள் வராததால் ஆசிரியர்கள் வெளிநடப்பு செய்தனர். முதலமைச்சரின் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன. ஆட்சியின் மீது அக்கறை கொண்டவர்கள் அன்று நெஞ்சம் பதறினார்கள். ஆனால், 2026 ஜனவரி 3-ல் TAPS அறிவிப்பு வந்தவுடன், ஜாக்டோ ஜியோ மற்றும் ஃபோட்டோ ஜியோ அமைப்புகள் போட்டி போட்டுக்கொண்டு முதலமைச்சருக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தன.

நிறைவேற்றப்படாத கோரிக்கைகள்:

கடந்த 24-ஆம் தேதி சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். அதை வரவேற்ற சங்கங்கள் அவரைச் சந்தித்துப் பாராட்டின. ஆனால், 10 அம்ச கோரிக்கைகளில் பள்ளிக்கல்வித்துறையால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படாமல் போராட்டங்கள் தொடர்கின்றன.

60 ஆண்டுகாலமாக இருந்த ஆசிரியர்களின் ‘ஒன்றிய முன்னுரிமையை’, அரசாணை 243 மூலம் ரத்து செய்து, மாநில முன்னுரிமையாக மாற்றியுள்ளனர். இதனால் பெண் ஆசிரியர்கள் பதவி உயர்வில் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிந்தும் திருத்தப்பட்ட ஆணை வெளியிடப்படவில்லை. உயர்கல்வி பெற்ற ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி ஆட்சியில் வழங்கப்பட்ட தேர்வு நிலை ஊதியத்தை, இன்று தணிக்கைத் தடை என்ற பெயரில் ஓய்வுபெறும் தலைமை ஆசிரியர்களிடம் 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை பிடித்தம் செய்கிறார்கள். ஓய்வூதியம் இல்லாமல் அவர்கள் தவிக்கிறார்கள். தகுதித்தேர்வு மற்றும் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 23,000 பேர் பணி வேண்டி இன்றும் போராடுகிறார்கள்.

மாநாடு நடத்துபவர்களுக்கு ஒரு கேள்வி:

மாநாட்டிற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், இத்தனை சிக்கல்களையும் முதலமைச்சர் மாநாட்டுப் பந்தலில் தீர்க்க முடியுமா? பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் மாநாட்டிற்கு வருவார்கள். 2022 மாநாட்டில் நடந்த குழப்பங்களை விட, இதயத்தால் தாங்க முடியாத முழக்கங்கள் அங்கே எழுந்தால் அதை மாநாடு நடத்துபவர்களால் கட்டுப்படுத்த முடியுமா? தேர்தல் நேரத்தில் இத்தகைய எதிர்ப்புகள் ஏற்பட்டால், அது எதிர்க்கட்சிகளுக்கு ஆதாரமாக அமைந்துவிடும்.

டெல்லி போராட்டமும்… புறக்கணிப்பும்:

8 ஆசிரியர் இயக்கங்கள் பிப்ரவரி 5-ல் டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கிப் போராட்டம் நடத்துகின்றனர். தகுதித் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடும் அவர்கள், பிப்ரவரி 12-தான் சென்னை திரும்புவார்கள். அவர்கள் கேட்டும் எவ்வித மாற்றமும் இல்லாமல் பிப்ரவரி 8-ல் நன்றி அறிவிப்பு மாநாட்டை நடத்துகிறார்கள்.

மத்திய அரசின் UPS vs தமிழக அரசின் TAPS:

CPS திட்டத்தில் உள்ள 6.5 லட்சம் பேரில், 15% பேர் மட்டுமே TAPS திட்டத்தை வரவேற்கிறார்கள். மத்திய அரசின் UPS திட்டத்தில் அரசுப் பங்களிப்பு 18.5% மற்றும் 25 ஆண்டுப் பணிக்கு முழு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசின் TAPS திட்டத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றினால்தான் 50% முழு ஓய்வூதியம் என்கிறார்கள். UPS-ல் பணிக்கொடை, அகவிலைப்படி எனப் பல சலுகைகள் உள்ளன. இருந்தும் அவர்களே பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காகத்தான் போராடுகிறார்கள். மேற்கு வங்கத்தில் இன்றும் பழைய ஓய்வூதியத் திட்டமே அமலில் உள்ளது.

வரலாறு சொல்லும் பாடம்:

1985, 1988 மற்றும் 2003 போராட்டங்களை முன்னின்று நடத்திச் சிறை சென்றவர்கள் நாங்கள். கருணாநிதியின் வழிகாட்டுதலில் சட்டப் போராட்டம் நடத்திப் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள். ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கி, அவர்களின் சமூக அந்தஸ்தை உயர்த்தியவர் கருணாநிதி. போனஸ் வழங்கியது, 54,000 தொகுப்பூதிய ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்தது என அவர் செய்த சாதனைகள் ஏராளம்.

அவருடைய மகன் ஆட்சியில் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல மக்கள் நலத்திட்டங்கள் வருகின்றன. ஆனால், அத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வேதனை தீர்க்கப்படவில்லையே என்கிற குமுறல் வளர்ந்து கொண்டே இருக்கிறது. முதலமைச்சர் மீதான அக்கறை காரணமாகவே ஆசிரியர்களின் மனநிலையை நாங்கள் அவருக்குத் தெரிவித்து வருகிறோம். ஆதரவு மாநாடு நடத்தப் போய் அது எதிர்ப்பினைத் தேடித்தரும் மாநாடாக அமைந்துவிடக் கூடாது என்பதே எங்களின் இதயப்பூர்வமான கவலை!” இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Contact AIFETO Mr. Annamalai @ 94442 12060 / 9962222314. annamalaiaifeto@gmail.com

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry