
2.45 Mins Read : மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான குரல்கள், தமிழக பாஜகவிலேயே வலுவாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. திமுகவின் கைக்கூலிதான் அண்ணாமலை என வெளிப்படையாக விமர்சித்திருக்கும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தருமான கல்யாணராமன், தமிழ்நாட்டில் பாஜக வாக்கு வங்கி உயர்ந்திருப்பதாக அண்ணாமலை கூறுவது பொய் என்றும் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் 23 இடங்களில் பாஜக நேரடியாகப் போட்டியிட்டது. தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தென்சென்னையில் போட்டியிட்டார். அதேபோல மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் என பிரபலமான முகங்கள் களம்கண்ட போதிலும், பாஜகவால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தருமபுரி, விருதுநகர், சிதம்பரம், ஆரணி, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தென்காசி, ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் அதிகம் என்பதைச் சுட்டிக்காட்டி, அதிமுக – பாஜக கூட்டணி அமைந்திருந்தால் சில தொகுதிகளை வென்றிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்தார்கள்.
தமிழிசை சௌந்திரராஜன் இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “கட்சி வளர்ந்திருந்தாலும் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. கூட்டணி சரியாக அமைத்திருந்தால் 35 பிரதிநிதிகள் வரை கிடைத்திருப்பார்கள். நான் இருக்கும்போது குற்றவாளிகளைக் கட்சிக்குள் சேர்க்க மாட்டேன். ஆனால், தற்போது சமூக விரோதிகள் பலருக்கும் பாஜகவில் பொறுப்புகள் வழங்கப்படுகிறது” என்று கூறியிருந்தார். இதற்காக அண்ணாமலை ஆதரவாளர்கள் டாக்டர் தமிழிசையை எக்ஸ் பக்கத்தில் தரம் தாழ்ந்து விமர்சித்தனர்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், அறிவுசார் பிரிவு நிர்வாகியும், ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தருமான கல்யாணராமன், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் சமயம் வலையொளிக்கு அளித்துள்ள நேர்காணலில், “கட்சி மேலிடம் அதிமுக கூட்டணியை விரும்பியது. ஆனால், கூட்டணியை அதிமுக நிராகரிக்கும்படியான சூழ்நிலையை உருவாக்கி கட்சி மேலிடத்துக்கு இக்கட்டை ஏற்படுத்தியது அண்ணாமலைதான். திமுகவின் கைக்கூலியாக அண்ணாமலை செயல்பட்டிருக்க வாய்ப்புள்ளது. பணம் என்ற சக்திகூட இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
அதிமுக கூட்டணி கூடாது என்று ரவீந்திரன் துரைசாமி, ஜே.வி.சி. ஸ்ரீராம் போன்றவர்கள் அண்ணாமலையிடம் கூறியதுடன், அவரிடம் உங்களைப் போன்ற ஹீரோ இல்லை என்ற கற்பனையை ஆழ்மனதில் விதைத்துவிட்டார்கள். அண்ணாமலை சின்னப்பையன். நான் சொல்வதில் நியாயம் இருப்பதால்தான் பல தலைவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசினார்கள். அதிமுக உடனான கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த அண்ணாமலை முயற்சிப்பதை அறிந்துதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடந்த ஆண்டு ஜனவரியில் சந்தித்துப் பேசினேன்.
அவரைச் சந்திக்க சென்றபோது, சந்திப்புக்கு அப்பாயின்ட் வாங்கினீர்களா என என்னிடம் அவர் கேட்டார். அப்போது, உங்களுக்கு இரண்டு கொம்பு முளைத்துள்ளதா? என நேரடியாகவே கேட்டேன். தகுதி இருப்பதுபோல அண்ணாமலை நடிக்கிறார், கட்சி மேலிடத்தில் முடிவெடுக்கும் இருக்கும் பலர் அண்ணாமலையை விரும்பவில்லை, சில நிர்ப்பந்தத்தின் பேரிலேயே அவர் நீடிக்கிறார்.

தமிழகத்தில் 5.56% ஆக இருந்த பாஜகவின் வாக்கு வங்கி, 11.24% ஆக உயர்ந்துள்ளது என தவறான, பொய் கணக்கை சொல்லி கட்சி மேலிடத்தையும், தொண்டர்களையும், மக்களையும் அண்ணாமலை ஏமாற்றுகிறார். 2014ல் 9 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 5.5% வாக்கு வாங்கியது. தற்போது 23 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. அப்படியானால் குறைந்தது 14% வாக்குகள் கிடைத்திருக்க வேண்டுமே. 2014ல் பாஜக உள்பட 7 கட்சி கூட்டணி வாங்கிய வாக்கு சதவிகிதம் 18.8. தற்போது 12 கட்சி கூட்டணியுடன் வாங்கியுள்ள வாக்கு 18.2%. 2014ல் 2 தொகுதிகளில் வெற்றி, தற்போது ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 2014ல் 9 தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு, தற்போது 23 தொகுதிகளில் போட்டியிட்டு 11 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு. கிட்டத்தட்ட 50%. இதைச் சொல்லாமல், வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அண்ணாமலை பொய் சொல்கிறார்.” என பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடக்கத்திலிருந்தே தடாலடியாக முடிவுகளை எடுப்பது, ஆதாரமற்ற புள்ளிவிவரங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளைச் சொல்வது, தமிழ்நாட்டின் தலைவர்களை விமர்சிப்பது, தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களை ஒதுக்கியது என எதேச்சதிகாரப் பாதையை அண்ணாமலை பின்பற்றுகிறார் என்று பிபிசி-யிடம் கூறியுள்ள மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.இராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை மாநில தலைவராக இருந்தபோது, பத்திரிகையாளர்களை மிகவும் நிதானமாக கையாண்டார், கூட்டணி கட்சிகளையும் சரியாக வழிநடத்தினார். ‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ என்று அவர் கூறிய வாசகத்தைத் தானே இன்று வரை தமிழக பாஜகவினர் பயன்படுத்துகின்றனர்” என்கிறார்.

மேலும், தமிழ்நாட்டில் அண்ணாமலையின் தலைமையில் பாஜக வளர்ந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ஆர்.கே.இராதாகிருஷ்ணன், “தமிழ்நாடு முழுக்க பாஜக கொடிக்கம்பங்கள், போஸ்டர்கள் எனப் பார்க்கும்போது, அந்தக் கட்சி வளர்ந்துவிட்டது போல ஒரு மாயத் தோற்றம் உண்டாகலாம். ஆனால் உண்மையில் 2014ம் ஆண்டை விட, பாஜகவின் நிலை தமிழகத்தில் மோசமாகவே உள்ளது” என்று கூறியுள்ளார்.
இதே கருத்தை வழிமொழியும் மூத்த பத்திரிகையாளர் பிரியன், 23 இடங்களில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டும் கூட பாஜகவின் வாக்கு சதவீதம் முந்தைய மக்களவைத் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது என்று பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார். ஊடக பலத்தை வைத்துக்கொண்டு யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், சேற்றை வாரி இறைக்கலாம் என செயல்பட்டவர் அண்ணாமலை. ஆனால் உண்மையில் களத்தில் இறங்கி வேலை பார்த்தவர் தமிழிசை. எனவே தமிழ்நாட்டில் பாஜக வளர வேண்டுமென நினைத்தால், கல்யாணராமன் கூறுவதற்கும் பாஜக மேலிடம் செவி சாய்க்க வேண்டும்” என்கிறார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry