மானம் காத்திட வீதிக்கு வராவிட்டால் காலிப் பணியிடம் மட்டுமல்ல; பணியாற்றிக் கொண்டிருக்கும் இடமும் விலை மதிப்பீட்டை பொறுத்து மாறும் அபாய சூழ்நிலை வெகு தூரத்தில் இல்லை என்று தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைரும், ஐபெட்டோ தேசியச் செயலாளருமான அண்ணாமலை கூறியிருக்கிறார்.
இதுதொடர்பான அவரது அறிக்கையில், “போர்க்குண தழும்புகள் பெற்றுள்ள தொடக்கக் கல்வி ஆசிரியர் பேரினமே..! தலைமை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு மற்றும் கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல் செய்யும் நடைமுறை ஜூலை 3 முதல் தொடங்க உள்ளது.
டிட்டோஜாக் அறைகூவலை ஏற்று மாறுதல் கலந்தாய்வினை தடுத்து நிறுத்திடவும், அரசாணை எண்:- 243 க்கு திருத்திய அரசாணையினை வெளியிட வலியுறுத்தியும், ஜூலை 9ஆம் தேதி பதவி உயர்வு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வரை ஒட்டுமொத்த ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வினை நிறுத்தி வைத்திட வலியுறுத்தியும், மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் 58 மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டத்தினை, ஒன்றிய அளவிலான முன்னுரிமையினை மீண்டும் கொண்டு வந்து நிறுத்திட வைக்கும் போராட்டமாக நடத்தி காட்டுவோம். அனைத்து ஆசிரியர்களும் முதல் நாள் மறியல் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடுவோம்.
முசிறியில் நடந்ததென்ன..? ஜூலை மாதம் ஒன்றாம் தேதி ஒன்றிய அளவில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் நடைபெற்றது. ஆனால் கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில், முறைப்படி விண்ணப்பம் அனுப்பாத தலைமை ஆசிரியருக்கு, திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியத்திற்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலிடத்தின் விசுவாசத்தினை சிரமேற்கொண்டு முசிறி மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி), மாறுதல் பெற்றவரை அவரே அழைத்துச் சென்று பணியில் அமர்த்தி வந்துள்ளார். இதை Self service என்பதா? பெருந்தொண்டு என்பதா?
டிட்டோஜாக் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் முசிறி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் மாலை வரை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். ஆனாலும் மாறுதல் ஆணை ரத்து செய்யப்படவில்லை. மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவித்துள்ளார்கள். டிட்டோஜாக் பெரும்படையே..! மறியல் போராட்டத்தின் போது, அன்றாடம் நடத்தி வரும் நிர்வாக மாறுதலினை பட்டியலிட்டு விலைப்பட்டியலினையும் தொகுத்து அறிவியுங்கள்.
எது வரினும் எதிர்கொள்வோம்..! முன்னாள் முதல்வர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் காலத்தினை கொண்டு வந்து நிறுத்தி பார்த்தாலும் ஆறுதல் பெற முடியவில்லையே..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் செயல்பாடுகளை முதலமைச்சர் உள்ளும் புறமும் ஆய்வு செய்து, உண்மைத் தன்மையை உணர்ந்திட வேணுமாய் பெரிதும் வேண்டுகிறோம். ஆசிரியர்கள் நிர்வாக மாறுதலினை கையில் எடுத்துக் கொண்டு முற்றிலும் வியாபாரத் துறையாக பள்ளிக்கல்வித்துறை செயல்பட தொடங்கி விட்டதா..? கல்வியா? செல்வமா? மானமா? என்று இவர்களிடம் கேட்டால் செல்வம்தான் என்று சொல்லுவார்கள். அரசுக்கும், கல்வித்துறைக்கும் வரலாற்றுப் பிழை ஏற்படாமல் பாதுகாப்போம்..!” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry