பழங்குடியினர் நலத் துறையின் கீழ் பயின்று வரும் மாணவர்களின் கல்வி நலனைப் பாதுகாக்கும் நோக்கில், ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு வேண்டுகோள் விடுத்த சங்க மாநிலப் பொறுப்பாளர்கள் மீது 17(B)ன் நடவடிக்கை எடுப்பது நியாயமா? என்று ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
“சொற் குற்றமா?.. பொருள் குற்றமா?” என்ற வினாவுடன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 212 தொடக்கப் பள்ளிகளும், 49 நடுநிலைப் பள்ளிகளும், 31 உயர்நிலைப் பள்ளிகளும், 28 மேல்நிலைப் பள்ளிகளும் என 320 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 30000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றார்கள்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லாததால், 50க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பழங்குடியின மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி நலன் கருதி, காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்ட காரணத்திற்காக, ஆசிரியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் விவேக், சுதாகர், சங்கர சபாபதி ஆகியோர் மீது 17(B)ன் குற்றச்சாட்டுகளை சுமத்தி பழங்குடியினர் நல இயக்குனர் அண்ணாதுரை CLS பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
பழங்குடியின மாணவர்களின் கல்வி நலனில் மீது அக்கறை காட்டாமல், அதிகாரம் செய்வதற்காகவே அவர் பதவியினைப் பயன்படுத்தி வருகிறார். துறையின் அமைச்சரை மதிக்காமல், துறை சங்கங்களின் கோரிக்கைகளை காது கொடுத்துக் கேட்காமல் சர்வாதிகாரமாக நடந்து வரும் அண்ணாதுரை CLS-ஐ உடனடியாக மத்திய அரசுப் பணிக்குத் திருப்பி அனுப்பிட ஐபெட்டோ (AIFETO) அகில இந்திய அமைப்பின் சார்பில் வலியுறுத்துகிறோம். மத்திய அரசுப் பணியில் உள்ளவரை, மாநில அரசு நிர்வாகப் பணிக்கு மாற்றுப் பணியில் கொண்டு வந்தததன் விளைவுதான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம். மத்திய அரசின் சர்வாதிகாரத்தை மாநில அரசின் நிர்வாகத்தில் காட்டுவதா?
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 76 வருடங்கள் ஆகிவிட்டது. கருத்துச் சுதந்திரம் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள சர்வாதிகார ஒழுங்கு நடவடிக்கையினை திரும்பப் பெற வேண்டுமென பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வளவு நிர்வாகச் சிக்கலுக்கும் காரணமான, மத்திய அரசு தொகுப்பிலிருந்து மாற்றுப் பணியில் பணிபுரியக்கூடிய பழங்குடியினர் நல இயக்குனர் அண்ணாதுரை CLS-ஐ மாநில அரசின் பணியிலிருந்து விடுவித்து, மத்திய அரசுப் பணிக்குத் திருப்பி அனுப்பிட வேண்டுமென ஐபெட்டோ (AIFETO) அகில இந்திய அமைப்பின் சார்பிலும், தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பிலும் தமிழ்நாடு முதலமைச்சரை பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். பழங்குடியின மாணவர்களின் கல்வி நலன் பாதுகாக்கப்பட வேண்டும். தங்களின் விரைவான நடவடிக்கைக்கு பழங்குடியின மாணவர்களும், ஆசிரியர்களும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry