இலங்கை அதிபராக அநுர திஸாநாயக்க பதவியேற்பு! வெற்றியின் பின்னணியில் இந்தியா! தமிழர்களுக்கு இணக்கமான அரசாக இருக்காது என கணிப்பு!

0
94
Soon after being elected president, Dissanayake said Sri Lanka didn’t have any geopolitical concerns, and he was committed to whatever was in Sri Lanka’s best interests.

4.00 Mins Read : இலங்கையின் புதிய அதிபராக 55 வயதாகும் அனுர குமார திசாநாயக்க இன்று பதவி ஏற்றார். இவர் இலங்கையின் ஒன்பதாவது அதிபராவார். இவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் டெல்லியிலிருந்து இலங்கைக்கு ஒரு முக்கிய அழைப்பு செல்கிறது. அந்த அழைப்பை ஏற்று இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க டெல்லிக்கு வருகிறார். தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலும் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கரும் அவருடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். தெற்காசிய அளவில் முக்கியமான சந்திப்பாக இது பார்க்கப்பட்டது. இந்நிலையில், அதிபர் தேர்தலில் அநுர திசநாயக்க வெற்றி பெற்றிருக்கிறார். இதன் பின்னணியில் இந்தியா இருப்பது உறுதியாகிறது. ஆனால் இந்த சந்திப்பால் தனது கட்சியின் அரசியல், பொருளாதார கொள்கையில் மாற்றம் இருக்காது என்ற திஸாநாயக்க கூறியிருந்தார்.

அநுர குமார திசாநாயக்க, அநுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம பகுதியில் 1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி அநுராதப் புரத்தில் கூலித்தொழிலாளியின் மகனாக பிறந்தவர். இலங்கை பெரும்பாலான சமயங்களில் எதோ ஒரு அரசியல் நெருக்கடியால் பீடிக்கப்பட்ட தேசமாகவே இருந்திருக்கிறது. அநுர குமார வளர்ந்து வந்த காலக்கட்டமும் ஜனதா விமுக்தி பெரமுனா பரபரப்பை கிளப்பிக் கொண்டிருந்த காலக்கட்டமும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தவை.

1980 களின் இறுதியில் இந்திய ராணுவம் இலங்கையில் கால் பதித்ததற்கு எதிராகவும், ராஜிவ் காந்தி ஜெயவர்த்தனா ஒப்பந்தத்துக்கு எதிராகவும் ஜனதா விமுக்தி பெரமுனா ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டது. இந்த சமயத்தில் கல்லூரி படிப்பை படித்துக் கொண்டிருந்த அநுரா, தனது 19வது வயதில் இலங்கையின் மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் இடதுசாரிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவில் இணைந்தார். 1995ஆம் ஆண்டு வாக்கில் அவரை சோஷலிச மாணவர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக ஜே.வி.பி. நியமித்தது. அக்கட்சியின் மத்திய பணிக் குழுவிலும் அவருக்கு இடமளிக்கப்பட்டது.

கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனவின் தேசிய பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்தில் நுழைந்தார் அநுர குமார திசாநாயக்க. 2001ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 39 இடங்கள் அக்கட்சிக்குக் கிடைத்தன. குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க, 1,53,868 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஜே.வி.பியும் இணைந்து ஆட்சி அமைத்தன. இந்த அரசாங்கத்தில் விவசாயம், கால்நடைகள், காணி, நீர்பாசனத் துறை அமைச்சராக அநுர குமார பதவியேற்றார். ஆனால், சுனாமிக்குப் பிறகு, வடக்கிலும், கிழக்கிலும் புலிகளுடன் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சந்திரிகா குமாரதுங்க அரசு முடிவு செய்தபோது, அதை எதிர்த்து ஜே.வி.பி. அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினர். அநுரவும் பதவி விலகினார்.

2014ஆம் ஆண்டு நடந்த ஜே.வி.பியின் தேசிய மாநாட்டில், அக்கட்சியின் புதிய தலைவராக அநுர குமார திசாநாயக்க தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் 2019ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி 2019ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க முதல் தடவையாகப் போட்டியிட்டார். வெறும் சுமார் 3 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையே அவர் பிடித்தார்.

Also Read : சிறார் ஆபாச படங்களை போனில் பார்த்துவிட்டு டெலிட் செய்வதும் குற்றம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ தேர்வான நிலையில், ஊழலுக்கு எதிராக அநுர குமார திஸாநாயக்க தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்தார். இதனால், அவருக்கான ஆதரவுத்தளம் வலுவடைய ஆரம்பித்தது. மேலும் பொருளாதார நெருக்கடியின்போது நடந்த போராட்டங்களிலும் அநுர குமார முன்னணியில் இருந்தார். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அநுர குமார திஸாநாயக்க போட்டியிடுவதாக அறிவித்தார். அவருக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் திரண்டனர். கடந்த தேர்தலில் வெறும் 3 சதவீத வாக்குகளைப் பெற்ற ஒருவர், 2024 தேர்தலில் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.

அநுர குமார திசாநாயக்கவை தெரிந்துகொண்ட நிலையில், அவரின் மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுனா) கட்சியைப் பற்றியும் பார்த்தாக வேண்டும். கிளர்ச்சிகள், போராட்டம், வன்முறைகள், அடக்குமுறை என எவ்வளவோ விஷயங்களை கடந்துதான் ஜனதா விமுக்தி பெரமுனா அதிபர் தேர்தலில் வெல்லும் நிலைக்கு வந்திருக்கிறது.

Anura Kumara Dissanayaka | Getty Images

1990 களுக்குப் பிறகு ஆயுதப் போராட்டங்களை விடுத்து ஜனநாயக அரசியலுக்குள் முழமையாக இறங்குவதாக ஜனதா விமுக்தி பெரமுனா அறிவிக்கிறது. அநுராவும் மாணவர் அமைப்பு மூலம் கட்சிக்காக தீவிரமாக உழைக்கிறார். 1995 இல் சோசலிச மாணவர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராக அநுரா தேர்வாகிறார். ஜனதா விமுக்தியின் மத்திய குழுவிலும் அவருக்கு இடம் கிடைக்கிறது. 1998 இல் கட்சியின் முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும் பொலிட்பியூரோவில் உறுப்பினராகிறார். 2000 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் வெற்றிபெற்றார். படிப்படியாக முன்னேறியவர் 2014 இல் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்து சேர்ந்தார்.

2022ல் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான் மக்களை ஜனதா விமுக்தியை நோக்கி திரும்ப வைத்தது. ‘நாட்டு மக்கள் இதுவரை ஆட்சி செய்த கட்சிகளின் மீது அதிக நம்பிக்கையை வைத்திருந்தனர். ஆனால், அவர்கள் மக்களை ஏமாற்றிவிட்டனர். இங்கே ஒரு அடிப்படை மாற்றமே தேவைப்படுகிறது.’ என அநுரா பிரசாரம் செய்தார். கிட்டத்தட்ட பாழ்பட்டு போயிருக்கும் சமூகத்தை மீட்க வந்த புரட்சியாளனாக தன்னையும், ஜமுதா விமுக்தி பெரமுனாவையும் மக்கள் நினைப்பதாக அநுரா பறைசாற்றினார். இப்போது தேர்தல் முடிவுகள், அவரை இலங்கையின் 9-வது அதிபராக்கியிருக்கின்றன.

Getty Image

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அநுரா குமார திசாநாயக்க-வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், “இலங்கை அதிபர் தேர்தலில் நீங்கள் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துகள். இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் கடல்சார் தொலைநோக்கு ஆகியவற்றில் இலங்கை உயர் முன்னுரிமை இடத்தைக் கொண்டுள்ளது. நமது மக்கள் மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் மேம்பாட்டுக்காக நமது பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்த உங்களுடன் விரிவாக பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு அநுரா குமார திசாநாயக்க நன்றி தெரிவித்து பதில் பதிவு இட்டுள்ளார். அதில் “உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி. நமது நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான உங்கள் உறுதிப்பாட்டை நான் பகிர்ந்து கொள்கிறேன். நமது மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாம் இணைந்து பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா – சீனா ஆகிய இரு நாடுகளுமே இலங்கைக்கு மிக முக்கியமானவை. இரு நாடுகளுமே இலங்கைக்கு மிகப்பெரிய அளவில் கடனுதவிகளைச் செய்திருக்கின்றன. ஜே.வி.பி ஒரு இடதுசாரி கட்சியாக இருப்பதால், இயல்பாகவே சீனாவுக்கு நெருக்கமாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறது. மேலும், மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை வலியுறுத்தும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஜே.வி.பி. தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்த ஒப்பந்தம் இலங்கை மீது இந்தியாவால் திணிக்கப்பட்டதாகவும் கருதுகிறது.

இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை அளிப்பதற்காக 13வது சட்டத் திருத்தம் இலங்கையின் அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்டது. நிலம், காவல் மற்றும் நிதி தொடர்பாகக் கூடுதல் அதிகாரத்தை இந்த சட்டத் திருத்தம் மாகாண சபைகளுக்கு அளிக்கிறது. ஆனால், இதுவரை மாகாண சபைகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வடக்கு – கிழக்கு பகுதிகளுக்குப் பயணம் செய்த அநுர குமார, யாழ்ப்பாணத்தில் பேசினார். அப்போது, “நான் 13வது சட்டத் திருத்தத்தைச் செயல்படுத்துகிறேன். பதிலுக்கு எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்க நான் வரவில்லை. கூட்டாட்சி முறையை அளிக்கிறேன், எனக்கு வாக்களியுங்கள் எனக் கேட்க வரவில்லை” என்றார். இது அந்தத் தருணத்தில் தமிழர் தரப்புக்கு ஏமாற்றத்தையே அளித்தது.

ஆனால், தேர்தலுக்கு நெருக்கமாக அநுர குமார தனது நிலைப்பாட்டை சற்று மாற்றிக்கொண்டார். ஜூன் மாதத்தில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்து தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார் அநுர. அந்த சந்திப்பிற்குப் பிறகு பேசிய அவர், மாகாண சபைகள் தொடர்ந்து செயல்படும் எனக் கூறினார். ஆனால், மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது பற்றி அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. மேலும், ஜனதா விமுக்தி பெரமுனவை பொறுத்தவரை, அது நீண்ட காலமாகவே அதிகாரப் பகிர்வை எதிர்த்து வருகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry