இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றதையடுத்து, இடதுசாரி சிந்தனையாளர் நாட்டின் அதிபராகியிருக்கிறார், கொள்ளையடித்த அரசியல்வாதிகளுக்கு சிறைதான்; இனப் பிரச்சனையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு விடுத்திருக்கிறார் என்றெல்லாம் வெளியான தகவல்கள் இலங்கை மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஆனால், இலங்கை உள்ளிட்ட உலகிலுள்ள இடதுசாரி அமைப்புகள் பலவும் இதனை ஒரு இடதுசாரியின் வெற்றியாகவே கருதவில்லை. ஏனெனில், ஜனதா விமுக்தி பெரமுனா(JVP) எனும் சிங்கள இனவெறி, பௌத்த மதவெறி, போலி கம்யூனிச இயக்கத்தின் தலைவர்தான் அநுர குமார திசாநாயக்க. கார்ப்பரேட்டுகளின் தேர்தல் பரப்புரை யுக்திகளால் இவர் வளர்ச்சி நாயகனாக ஊதிப் பெரிதாக்கப்பட்டார்.
இதன் விளைவாக, ஓராண்டுக்கு முன்பு நடந்த கருத்துக்கணிப்புகளின் போதே, அதிபர் தேர்தலில் அநுர திசாநாயக்க வெற்றி பெறுவார் என்று 51 சதவிகிதம் பேர் கூறியதாக அந்நாட்டு ஊடகங்களே பரப்புரை செய்தன. இதுவும் அநுரவை ஆட்சியில் அமரவைக்கும் ஒரு உளவியல் பிரச்சாரம்தான் என்கின்றன சர்வதேச இடதுசாரி இயக்கங்கள்.
இலங்கை அரசுக் கட்டமைப்பின் மீது நம்பிக்கை இழந்திருந்த மக்கள், இடதுசாரி போர்வைப் போர்த்திக் கொண்டிருக்கும் அநுரவை கார்ப்பரேட் ஊடகங்கள் மாற்றாக நிறுத்தும் போது, அதனை ஏற்கும் கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மற்றபடி, சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்கே ஆகிய இருவருக்கும் எந்த வகையிலும் மாற்றுப் பொருளாதார அரசியல் திட்டங்களைக் கொண்டவரல்ல, அநுர குமார திசாநாயக்க.
தேர்தல் பரப்புரையின்போது எந்த இடத்திலும் சிங்களப் பேரினவாதிகளை அவர் சாடவில்லை; வடக்குப் பகுதி தமிழர்களுக்கு நியாயம் வழங்குவோம் என்றும் கூறவில்லை. காரணம் ரணில் மற்றும் சஜித்தை ஆதரிக்கும் சிங்கள இனவாதிகளின், பவுத்த சாமியார்களின் ஆதரவை அவர் இழக்க விரும்பாததே இதற்குக் காரணம்.
சிங்கள மக்கள் வாழும் பகுதியிலிருந்து அநுரவுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்திருப்பது, ஜேவிபி-யின் இன அரசியலை பளிச்சென வெளிப்படுத்துகிறது. இலங்கை அரசியலில் நேரடியாக இனவாத அரசியல் வெளிப்படவில்லை என்று குறிப்பிடுபவர்கள், தமிழர்களின் ஆதரவு பெற்ற தலைவராக அநுர இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டி யிருக்கிறது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தமது கொள்ளையைத் தீவிரப்படுத்தவும், உழைக்கும் மக்களின் போராட்டங்களைத் திசைத்திருப்பி ஒடுக்கவும், ஏகாதிபத்தியங்கள், பேரினவாதம், பெரும்பான்மைவாதம், புலம்பெயர்ந்தவர்கள் மீதான வெறுப்பு, இனவெறி, மதவெறி, தேசவெறி, துவேசங்களை முன் தள்ளும் அரசியலின் பின்னணியில்தான் அநுரவின் வெற்றியைப் பார்க்கவேண்டும் என்பதே பெரும்பாலான இடதுசாரி அமைப்புகளின் கருத்தாக இருக்கிறது.
தமிழக அரசியல் கட்சிகளின் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாடும் மவுனிக்கப்பட்டுவிட்டது. தி.மு.க.வின் முப்பெரும் விழா; விஜய் அரசியல் மாநாடு; ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மோடி அரசின் அறிவிப்பு; கேஜ்ரிவால் சிறையிலிருந்து விடுதலை, அதிஷி முதல்வர் பதவி ஏற்பு; திருப்பதி லட்டு, அதில் மாட்டுக் கொழுப்பு; இப்படியாக பரபரப்பூட்டி இலங்கை அதிபர் தேர்தலை மேம்பூச்சாக மாற்றிவிட்டார்கள். இதனாலேயே அநுரவின் தேர்வு மிகப்பெரிய இடதுசாரிகளின் வெற்றியாக முன்னிறுத்தப்படுகிறது என்பதே அவர்களின் வாதமாகும்.
Also Read : பொன்முடி இலாகா மாற்றத்தின் பின்னணியில் எ.வ. வேலு, ஆளுநர் ரவி! Minister K. Ponmudi sidelined in DMK!
அநுர குமார திசநாயக்கவும் அவரது ஜேவிபி கட்சியும், பேரினவாத கட்சிகளின் ஆட்சியில் பங்குபெற்று தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது வெளியேறிய ஒரு அமைப்புதான். ஐஎம்எஃப் நெருக்கடியால் இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனை மீண்டும் பூதாகரமாக எழும்போது, சிங்கள மக்களைக் கவர அநுர திசாநாயக்க மீண்டும் ஒரு எதிரியை உருவாக்குவார். அதற்கு இலக்காகப் போவது தமிழினம்தான்.
தமிழர்கள் மீது தற்போது மேற்கொண்டு வரும் ராணுவ ஆட்சியை தொடர்வது, அவர்களது காணிகளை விடுவிக்காமல் இருப்பது, குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட மாகாணங்களை முடக்குவது என்று ஆரம்பித்து, புத்த பிக்குகளின் ஆசியுடன் தமிழர்களை போராட்டத்திற்கு தள்ளி அவர்களுக்கு எதிரான கருத்தை அவர் உருவாக்கினாலும் வியப்பதற்கில்லை.
அதைக் காட்டியே சிங்கள வாக்குகளை பெற்று விடுவார் அநுர குமார திசாநாயக்க. ஏனெனில் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் தள்ளிய ராஜபக்சவை விரட்டியடித்த மக்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய வழக்கறிஞர் நுவன் போபகேவும் அதிபர் தேர்தலில் களம் இறங்கினார். இவர் மார்க்சிய – லெனினிய கட்சி அடங்கிய இடதுசாரிகளின் போராட்ட கூட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்பட்டார்.
ரணில், சஜித் மீது அதிருப்தியில் இருந்த மக்கள், உண்மையான இடதுசாரியான நுவன் போபகே பக்கம் திரும்பிவிடக் கூடாது என்பதற்காகவே, இடதுசாரி என்கிற போர்வையில் அநுர குமார திசாநாயக்க களமிறக்கப்பட்டு கார்ப்பரேட்டுகளால் பிரச்சாரம் கட்டமைக்கப்பட்டது. இதையும் மீறி நுவன் போபகே 11,191 வாக்குகள் அதாவது 0.8 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறார். எந்த ஊடக வெளிச்சமும் இவர் மீது பாய்ச்சப்படவில்லை.
சமகால அரசியல் சூழலை அனுமானித்து, அதனை அடைவதற்கான செயல் தந்திரங்களை வகுத்துச் செயல்படும் பார்வை இல்லாததாலும், மக்கள் அடித்தளம் இல்லாததாலும், போபகேவை களமிறக்கிய கூட்டமைப்பு தேர்தல் அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது கவனம் பெறுகிறது. இனியாவது இவர்கள் இலங்கை மக்களிடம் மாற்றத்திற்கான கருத்தாக்கத்தை முன்வைத்து செயல்பட வேண்டும். இல்லையேல், அநுர, ரணில், சஜித் ஆகியோரே இலங்கையின் முகங்களாக அறியப்படுவார்கள். இலங்கையும் அன்னிய நாடுகளின் சந்தையாகவே மாறிவிடும்.
கட்டுரையாளர் :- K.V.S. (எ) கே.வி. செல்வராஜ், மூத்த ஊடகவியலாளர். 35 ஆண்டுகளுக்கும் மேலாக அச்சு, காட்சி ஊடக அனுபவம் கொண்டவர். பல முன்னணி பத்திரிகைகள், ஊடகங்களில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
Image Source : Getty Image.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry