ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த நிகழ்வு ஆப்பிள் அதிகாரப்பூர்வ சேனல்களில் நேரலை செய்யப்படுகிறது.
இந்திய நேரப்படி செப்டம்பர் 12-ம் தேதி இரவு 10.30 மணிக்கு ஐபோன் 15 சீரிஸ் அறிமுக நிகழ்வு துவங்க இருக்கிறது. இதுதவிர பல்வேறு இதர சாதாகனங்கள் மற்றும் ஆப்பிள் சேவைகள் பற்றிய அறிவிப்புகள் இந்த நிகழ்வில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
ஐபோன் 15 சீரிசில், iPhone 15, iPhone 15 Pro, iPhone 15 Plus மற்றும் iPhone 15 Pro Max உள்ளிட்ட நான்கு மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 15 மாடல்கள் கருப்பு, பச்சை, நீலம், இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண வகைகளில் வரும் என்று தெரியவந்துள்ளது. ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகியவை நீலம், சில்வர், ஸ்பேஸ் பிளாக் மற்றும் டைட்டன் கிரே வண்ண வகைகளில் கிடைக்கும்.
புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில், சார்ஜிங் போர்ட், டைப்-சி யாக மாற்றப்பட உள்ளது. (ஐரோப்பாவில் புதிய சட்ட விதி படி அங்கு வெளியாகும் அனைத்து சாதனங்களின் சார்ஜர்கள், டைப்-சி யில் இருக்க வேண்டும் என அறிவிப்பு வெளியானது) தற்போது ஐபோன்களில் இருக்கும் ஐஓஎஸ் (IOS) 16 ஐ விட அதிக திறன் கொண்ட ஐஓஎஸ் (IOS) 17ம், மிகவும் சக்தி வாய்ந்த சிப்பான ஏ17 அறிமுகமாகலாம்.
இப்புதிய மாடல்களில் மியூட் பட்டன் இருக்காது. இதற்கு பதிலாக கஸ்டமைசேஷன் பட்டன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற வசதியை அந்த பட்டனில் ப்ரோகிராம் செய்து வைத்துக்கொள்ளலாம். புது மாடல் ஐபோனின் ஆரம்ப விலை 79,900 ரூபாயில் இருந்து அதிகபட்ச மாடலின் விலை 1,49,900 ரூபாய் வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
ஐபோன்கள் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இவை ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 என்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம். இது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும்.
புதிய இரண்டாம் தலைமுறை ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடல் 3டி ப்ரின்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இன் தோற்றம் கிட்டத்தட்ட அதன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry