
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கியூபெர்டினோ என்ற இடத்தில் கடந்த 9-ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுக்கு “இட்ஸ் க்ளோடைம்” என்று ஆப்பிள் நிறுவனம் பெயரிட்டிருந்தது. இதில், ஐபோன் 16 சீரிஸில் உள்ள ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பாட்ஸ் 4, ஏர்பாட்ஸ் மேக்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 போன்றவை அறிமுகம் செய்யப்பட்டன.
ஐபோன் 16 வரிசையில் நான்கு ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவை ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 மேக்ஸ் ஆகும். தங்களின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான(Artificial Intelligence – AI) ஆப்பிள் இண்டலிஜன்ஸுடன், புதிய வடிவமைப்பில், பல சிறப்பம்சங்களைக் கொண்ட ஃபோன்களை தயாரித்துள்ளோம். ஜூன் மாதத்தில் மாதத்தில் வெளியான இந்த ஆப்பிள் இண்டலிஜன்ஸ், மிகவும் சக்தி வாய்ந்த எங்களின் இண்டலிஜன்ஸ் மென்பொருள், பல்வேறு வகையில் மிகவும் வித்தியாசமானது என ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் டிம் குக் நிகழ்ச்சியின்போது தெரிவித்தார்.
எழுத்துகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலும் இந்த ஆப்பிள் இண்டலிஜன்ஸின் பங்களிப்பை பயனாளர்கள் நன்றாக உணர முடியும். மட்டுமின்றி, போனின் செயல்திறனும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் உதவிக்கான SIRIயின் செயல் திறனும் முன்பை விட சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் இண்டலிஜன்ஸை பயனாளர்கள் உடனடியாக பயன்படுத்த இயலாது. சில மாதங்கள் கழித்தே போன்களில் அப்டேட்டாக வழங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. முதலில் இதன் ‘பீட்டா’ அம்சம் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு, மற்ற நாடுகளுக்கு பிறகு விரிவுபடுத்தப்படும்.
சிறப்பம்சங்கள்
பக்கவாட்டில் கேமராவின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் பட்டனுடன் ஐஃபோன் 16 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமரா செயலிக்குள் நுழைவது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பது, ஸூம் செய்வது, ஒளி அளவைக் கூட்டுவது, குறைப்பது போன்ற அனைத்தையும் இந்த பட்டன் மூலமே செய்ய முடியும். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எளிமையாக எடுக்க இந்த சிறப்பம்சம் உதவும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. ஆப்பிள் இண்டலிஜன்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, விஷூவல் இண்டலிஜன்ஸையும் பயனாளர்கள் பயன்படுத்த இயலும்.
ஆக்ஷன் பட்டன்
ஐஃபோன் 16 சீரிஸில் மற்றொரு சிறப்பம்சமாக ஆக்ஷன் பட்டனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஒரே நேரத்தில் ஒரு செயலியில் இருந்து மற்றொரு செயலிக்கு மாற இந்த பட்டனை அழுத்தினால் போதும். உதாரணத்திற்கு இந்த பட்டனை அழுத்தி நீங்கள் ஃப்ளாஷ்லைட்டை ஆன் செய்ய இயலும். கேமராவை இயக்க முடியும். போனை சைலண்ட் மோடுக்கு மாற்ற இயலும். இவை தவிர்த்த, கூடுதல் அம்சங்களும் இருக்கிறது.
ஆப்பிள் இண்டலிஜென்ஸை இயக்கும் வகையில் ஏ18 மைக்ரோசிப்பை இந்த சீரிஸில் உள்ள போன்களில் ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு வந்த ஐபோன் சீரிஸ் போன்களைக் காட்டிலும் இரண்டு தலைமுறை முன்னிலையில் உள்ளது இந்த மைக்ரோசிப். ஏ18 மைக்ரோசிப், பேட்டரியின் செயல்திறனை அதிகரிக்கும். ஐபோன் 16 சீரிஸில் இடம் பெற்றுள்ள ஐபோன் 16 ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்ஸல் இரட்டை கேமராக்களை கொண்டுள்ளது. டெலிபோட்டோ லென்ஸ் 2 மடங்கு காட்சியை விரிவுபடுத்தும் திறன் கொண்டது. ஐபோன் 16 ப்ரோவில் 5 மடங்கு காட்சியை விரிவுப்படுத்த இயலும்.
வீடியோ ப்ளேபேக்குடன் ஐபோன் 16 ஸ்மார்ட்போன் 27 மணி நேரம் இயங்கும். ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன் 33 மணி நேரம் இயங்கும். ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ் ஆகிய இரண்டு போன்களும் கருப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, டீல் நீலம், அல்ட்ராமரைன் நிறங்களில் கிடைக்கும். ஐபோன் 16 ப்ரோ, ப்ரோ மேக்ஸ் போன்ற போன்கள், கருப்பு மற்றும் வெள்ளை டைட்டானியம், நேச்சுரல் டைட்டானியம், டெசர்ட் டைட்டானியம் நிறங்களில் கிடைக்கிறது.

போனின் திரையைப் பொருத்தவரை, ஐபோன் 16 ஸ்மார்ட்போன் 6.1 அங்குலம் அளவுடையது. ஐபோன் 16 ப்ளஸ் – 6.7 அங்குலத்திலும், ஐபோன் 16 ப்ரோ 6.3 அங்குலத்திலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9 அங்குலத்திலும் உள்ளது. ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ் போன்களின் சேமிப்பு திறனானது 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபியாக உள்ளது. ஐபோன் ப்ரோவில் 1 டிபி (1TB) சேமிப்பு திறன் கொண்ட போன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் ப்ரோ மேக்ஸ் போனில் 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி சேமிப்புத் திறன் கொண்ட போன்கள் கிடைக்கின்றன.
ஐபோன் 16 சீரிஸ் ஃபோன்களை வாங்க இந்தியாவில் செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் ஆர்டர் செய்யலாம். செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் டெலிவரி செய்யப்படும். இந்தியாவில் ஐபோன் 16 போனின் விலை ரூ. 79,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐபோன் 16 ப்ளஸ் போனின் விலை ரூ. 89,900 ஆகும். ஐபோன் 16 ப்ரோ போனின் விலை ரூ. 1,19,900 ஆகவும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் போனின் விலை ரூ. 1,44,900 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு முன்பு வெளியான இதர கடிகாரங்களைக் காட்டிலும் இது மிகவும் மெல்லியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ள ஆப்பிள் நிறுவனம், இந்த கடிகாரத்தின் செயல்திறன் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. உடற்பயிற்சியில் ஈடுபடும் போது பயன்படுத்திக் கொள்ள ஏற்ற கடிகாரமாக இது அறியப்படுகிறது. ஆரோக்கியம் குறித்த தரவுகளையும் பயனாளிகள் அறிந்து கொள்ள இயலும்.
செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இந்த கடிகாரத்தின் விலை ரூ. 46,900 ஆகும். இது மட்டுமின்றி, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 என்ற கடிகாரமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. மேலும் ஏர்பாட்ஸ் 4, ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2 – இயர்போன்களையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
Images – Apple Newsroom
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry