போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தனி நபர் ஒருவர் பொதுச் சாலையை ஆக்கிரமித்ததுள்ளதாக வில்லிவாக்கத்தைச் சேர்ந்த எஸ்.சீனிவாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். பொதுச் சாலையை ஆக்கிரமிக்க மாநகராட்சி அதிகாரிகள் அந்த நபருக்கு உதவியதாக மனுவில் குற்றம்சாட்டியிருந்த அவர், சொத்தை அளவீடு செய்து எல்லைகளை வரையறுக்க சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிடுமாறும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி ஏ.டி.மரியா கிளேட்டே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், மாநகராட்சி அதிகாரிகளிடம், “மற்றவர்களின் சொத்துக்களை ஆக்கிரமிக்க அனுமதிப்பதற்காக பில்டர்களிடம் பணம் வசூலிக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று காட்டமாகக் கேட்டனர்.
Also Read : கலப்பட நெய்யும், ஊழியர்களுக்கு தண்டனையும்: திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து விளக்கும் கோவில் கல்வெட்டு!
ஒரு பொதுச் சாலையை, அதிகாரிகளின் உடந்தையுடன் தனியார் ஆக்கிரமித்துள்ளதாக பொதுநல மனு குற்றம்சாட்டி உள்ளது. புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் உதவி பொறியாளர்கள், வார்டு கவுன்சிலர்கள், போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். “அங்கே அவர்கள் என்ன செய்கிறார்கள்? லஞ்சம் வாங்குவதற்காக அல்லவா?” என்று அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மற்றும் அத்துமீறல்களைத் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக வழக்கறிஞர் தெரிவித்தார். இருப்பினும், திருப்தி அடையாத நீதிபதிகள், நகரில் கிட்டத்தட்ட அனைத்து கட்டிடங்களும் ஆக்கிரமிப்புகள் என்று அவதானித்தனர். இந்த உண்மையை மாநகராட்சி எதிர்க்க முடியுமா? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். நகரம் இப்போது ஒரு கான்கிரீட் காடாக மாறியுள்ளது, இது குடியிருப்பாளர்களை அமைதியற்றவர்களாக ஆக்குகிறது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன், வார்டு கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை கடுமையாக கண்டித்த நீதிபதிகள், நிலங்களை ஆக்கிரமித்து விதிகளை மீறும் பில்டர்கள் மற்றும் பிறரிடமிருந்து அவரகள் லஞ்சம் வாங்குவதாகக் கூறினார்கள். மாநகராட்சி ஆணையர் ஆஜராக சம்மன் அனுப்ப ஆணையிட்ட நீதிபதிகள், சேவை விதிகளின்படி அதிகாரிகளுக்குச் சொந்தமான சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யவும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.
அனுமதியற்ற கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கும் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry