செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர அனுமதிக்க இயலாது எனக் கூறியுள்ள ஆளுநர் ரவி, அவரது இலாகாக்களை, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், அவர் வகித்து வந்த இலாகாக்களை தங்கம் தென்னரசுவுக்கும், முத்துசாமிக்கும் ஒதுக்க ஆளுநர் ரவிக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. அதில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு கூடுதலாக மின்சாரத்துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஒதுக்கீடு செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான ஆவணங்கள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆளுநர் மாளிகை சார்பில் வெளியான அறிக்கையில், செந்தில் பாலாஜி வகித்த துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு கூடுதலாக ஒதுக்கக் கோரும் தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுத்தார்! கைது என்றவுடன் கதறி அழுதார்! எக்ஸ்க்ளூசிவ் தகவல்!
ஆனால், செந்தில் பாலாஜி குற்றவியல் நடைமுறைக்கு ஆளாகி நீதித்தறை காவலில் உள்ளதால், அவர் அமைச்சராக தொடரக்கூடாது; செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடரும் பரிந்துரையை ஏற்க முடியாது எனவும் ஆளுநர் மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்திய பிறகே செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரரும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry