ஆவின் பால் பாக்கெட் அளவு குறைவாக இருப்பதால், விற்பனையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் விற்பனைக்கு வந்த 500 மி.லி., பால் பாக்கெட்டில், அளவு குறைவாக இருந்தது. ஆவின் பால் பாக்கெட்டை பொறுத்தவரை, அதன் அளவை, கிராமில் கணக்கிடும்போது, 500 மி.லி., என்பது, 517 கிராம் இருக்க வேண்டும். இதில், பால் பாக்கெட் 2 கிராம் இருக்கும். எவ்வகையிலும் பாலின் எடை, 515 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

ஆனால், இரு நாட்களாக விற்பனைக்கு வந்த பால் பாக்கெட்டுகள் 430 கிராம் மட்டுமே இருந்தன. இதை கண்டறிந்த சென்னையை சேர்ந்த பால் முகவர் ஒருவர், ஆவின் அதிகாரிகளுக்கு சமூக வலைதளம் வாயிலாக தகவல் அனுப்பியுள்ளார். ஆனால், அதிகாரிகள் இதை கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, நேற்றும் விற்பனைக்கு வந்த பால் பாக்கெட்டின் அளவு குறைவாக இருந்தது. அளவு குறைவால், பல லட்சம் லிட்டர் பால், நுகர்வோருக்கு செல்லாமல் தடுக்கப்படுகிறது.
ஆவினில் தண்ணீர் கலந்து மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெற்றது போல், ஆவின் பால் பாக்கெட்டில் அளவை குறைத்து மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ. பொன்னுசாமி வலியுறுத்தியுள்ளார்.
பால் அளவு குறைவு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆவின் நிறுவனத்தில் தினசரி இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் தினமும் புதுப்புது ஊழல்கள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. பாலின் அளவை குறைத்து விநியோகம் செய்திருப்பது பகிரங்க மோசடி.

70 மில்லிதானே குறைந்தது, தெரியாமல் நடந்துவிட்டது என்று யாரும் தப்பிக்க முடியாது. தமிழகத்தில் தினமும் 70 லட்சம் அரை லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன. ஒரு பாக்கெட்டில் 70 மில்லி குறைகிறது என்றால், ஒரு கவர் பாலுக்கு மூன்று ரூபாய் எட்டு காசுகள் குறைய வேண்டும். கிட்டதட்ட நாளொன்றுக்கு 2 கோடியே 16 லட்சம் ரூபாய் அளவுக்கு மக்களின் பணம் ஏமாற்றப்பட்டு வருகிறது. அதாவது தினமும் கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் மக்கள் பணம் கொள்ளை போயிருக்கிறது. சட்டத்துக்கு புறம்பாக பெறப்பட்ட இந்தப் பணம் யாருக்குப் போய் சேர்ந்தது.
Also Read : பள்ளிக் கல்வித்துறையின் இயலாமை! ஆகஸ்ட் 15ல் பெற்றோரைக் கூட்டி முறையிட ஆசிரியர்கள் முடிவு!
இந்த நம்பிக்கை துரோகத்திற்கு வழக்கம்போல அதிகாரிகளின் மீது பழி சூட்டில் முதலமைச்சரும், அமைச்சரும் தப்பித்துக்கொள்ள முடியாது. எத்தனை நாட்களாக மக்கள் இதுபோல ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்? என்று முழுமையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மக்கள் கொடுக்கும் பணத்திற்கு குறைவாக பாலை வழங்கக் காரணமான அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry