NLCக்கு எதிராகப் போராடிய அன்புமணி ராமதாஸ் கைது! போலீஸார் – பாமக தொண்டர்கள் இடையேயான மோதலால் பதற்றம்!

0
47
Anbumani Ramadoss being taken away from the protest venue in a police vehicle.

என்எல்சியை முற்றுகையிட்டு பாமக போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். பாமகவினர் மீது போலீஸார் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.

“மக்களின் உணர்வுகளையும், மக்களாட்சியின் மாண்புகளையும் மதிக்காமல் என்.எல்.சி. நிறுவனத்திற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. அதிகாரம் கையில் இருக்கிறது; அடக்குமுறையை கட்டவிழ்க்க காவல்துறை தயாராக இருக்கிறது என்ற துணிச்சலில் இத்தகைய மக்கள் விரோத செயலில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

Also Read : NLC விரிவாக்கப்பணி! தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஜேசிபி மூலம் அழிக்கப்படும் பசுமை வயல்கள்!

இதனை எதிர்த்து வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்துக்கு நானே தலைமையேற்கிறேன். இதில் அனைவரும் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன்” என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக நெய்வேலி என்எல்சி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து பாமக சார்பில் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பாமக போராட்டம் காரணமாக நெய்வேலியில் 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், ‘தமிழகம் தற்போது மின்மிகை மாநிலமாக மாறிவிட்டது; என்எல்சி தற்போது தமிழகத்திற்கு தேவையில்லை. மண்ணையும், மக்களையும் அந்த நிர்வாகம் அழித்துக் கொண்டிருக்கிறது. நிலத்தை கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்நிறுவனம் கடலூர் மாவட்ட வளர்ச்சிக்கு உதவவில்லை, மாவட்டத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.5 கோடி கொடுத்தாலும் ஏற்க மாட்டோம்.

Also Read : நெற்பயிர்களை அழிக்கும் NLC! துணை நிற்கும் திமுக அரசு! தமிழகத்தில் சர்வாதிகாரி ஆட்சி நடக்கிறதா? என ஈபிஎஸ் ஆவேசம்!

என்.எல்.சி இங்கிருந்து வெளியேற வேண்டும். கதிர்வரக் கூடிய விளை நிலத்தை நாசம் செய்து தான் கால்வாய் தோண்ட வேண்டுமா? கடலூர் மண்ணை காப்பாற்ற வேண்டும் என பாமக போராடிக் கொண்டிருக்கிறது. என்.எல்.சி நிறுவனத்தை நான் முற்றுகையிட வந்ததால் தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நாளை மீண்டும் பணிகள் துவங்கினால் கடலூர் மாவட்டமே ஸ்தம்பிக்கும் வகையில் சாலை மறியல் நடைபெறும்.

300 கிராம சபை கூட்டத்தில் என்எல்சி நிலத்தை கையகப்படுத்த கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 300 கிராமங்கள் எதிர்ப்பு இருந்தும் போலீஸ் உதவியோடு நிலம் கையகப்படுத்தப்படுகிறது. நெய்வேலியில் நிலத்தடி நீர் 800 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. அப்படியிருக்கையில் என்எல்சி கோடிக்கணக்கான லிட்டர் குடிநீரை ராட்சத குழாய்கள் மூலம் உறிந்து எடுக்கிறது.

நிலத்தடி நீரை உறிஞ்சி நிலத்தை மலடாக்குவது தான் வளர்ச்சியா? தமிழகத்திற்கு வெறும் 400 மெகாவாட் மின்சாரத்தை தான் என்எல்சி தருகிறது. அந்நிறுவனத்தை விரட்டினால் தமிழகம் ஒன்றும் இருளில் மூழ்கிப் போய்விடாது. மின்சாரம் தயாரிக்க பல மாற்று வழிகள் உள்ளன; ஆனால் சோற்றுக்கு மண் மட்டுமே வழி.’ என்று அவர் குறிப்பிட்டார்.

பிறகு, என்எல்சி நுழைவாயில் முன்பு தனது தொண்டர்களுடன் நுழைய முற்பட்ட அன்புமணி ராமதாஸை போலீசார் தடுத்தனர். இதனால் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், அன்புமணி ராமதாஸை கைது செய்ய வாகனம் வரவழைக்கப்பட்டது.

Also Read : மத்திய அரசின் விவசாய வளர்ச்சி நிதி திமுகவுக்கு செலவிடப்படுகிறதா? முதலமைச்சருக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி!

இதனால் ஆத்திரம் அடைந்த பாமக தொண்டர்கள், காவல்துறை வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதனால் பதற்றமான நிலைமை ஏற்பட்டது. போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர். சிறிது நேரத்தில் அன்புமணி போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். அவரை கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, பாமகவினர் அவரை கைது செய்யக்கூடாது என்று வலியுறுத்தி வாகனம் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் மேலும் பதற்றம் அதிகரித்ததால், போலீசார் அவர்களை கலைந்து போகச் சொன்னபோதும் பாமகவினர் மறுத்து விட்டனர். தொண்டர்கள் மீது தடியடி நடத்தி போலீஸார் கலைக்க முயற்பட்டனர். பதிலுக்கு பாமகவினரும் கல்வீச்சி தாக்குதலில் ஈடுபட்டதால், போலீஸார் தண்ணீர் பீச்சியடித்து கூட்டத்தை கலைக்க முயன்றனர்.

இதனால் சுமார் அரை மணி நேரம் போலீசாருக்கும் பாமகவினருக்கும் பெரும் போராட்டம் நடைபெற்றது. பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் பாலு, தொண்டர்களிடம் பேசி அமைதி காக்குமாறு வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து பாமகவினர் கலைந்து சென்றனர். இதன்பின் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்துகு அழைத்துச் செல்லப்பட்டார். இதன் காரணமாக என்எல்சி வளாகத்தில் பதற்றம் நிலவியது. சம்பவ இடத்தினை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் பார்வையிட்டார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry